கல்லீரல் நலத்தில் கவனம் தேவை

கல்லீரல் நலத்தில் கவனம் தேவை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 6:05 am

2 mins read

மனிதர்களின் கல்லீரல் ஆற்றல்மிக்க ஓர் உறுப்பு. ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, சர்க்கரை அளவைச் சீராக வைத்து, ஆற்றலைத் தேக்கிவைத்து, செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி, பிற மருத்துவப் பிரச்சினைகள் ஆகியவற்றால் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் இரண்டும் ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களும் அனைத்துலக அளவில் தலைதூக்கியிருப்பதாக மருத்துவப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கல்லீரல் நோய்களை வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் சத்தான நல உணவு உட்கொள்வதாலும் மட்டும் மாற்றிவிட முடியாது.

மதுவைத் தவிர்த்தல்

தொடர்ந்து மது அருந்துவது கல்லீரல் நோயை ஏற்படுத்தக்கூடும். கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து வீக்கம், தழும்பு அல்லது ‘சிர்ரோசிஸ்’ எனும் கல்லீரல் தழும்புக் கோளாறுக்கு வழிவகுக்கும் என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் உலகளாவிய கல்லீரல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது அடிவயிற்றில் அதிக கொழுப்புள்ளோருக்குக் குறைந்த அளவு மதுவும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, கடுமையான கல்லீரல் நோய் உள்ளவர்கள் மதுவை முற்றிலுமாகத் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சர்க்கரை அளவைக் குறைத்தல்

கல்லீரலில் கொழுப்பு உருவாக சர்க்கரை ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

அதிக அளவு சர்க்கரை சேரும்போது கல்லீரலில் உயிரணுக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, கல்லீரலில் கொழுப்பு சேர வழிவகுக்கிறது.

சர்க்கரையை அளவாக உட்கொள்வது உடல்நலத்தை மேம்படுத்தும்.
சர்க்கரையை அளவாக உட்கொள்வது உடல்நலத்தை மேம்படுத்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறிப்பாக, சர்க்கரை கலந்த பானங்களை, அதிக அளவு ‘ஃபிரக்டோஸ்’ சேர்க்கப்பட்ட சோடா பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள சர்க்கரை கல்லீரலை அதிகம் பாதிக்கின்றன.

ஒரு நாளைக்கு பெண்கள் 25 கிராமுக்கு மிகாமலும் ஆண்கள் 36 கிராமுக்கு மிகாமலும் சர்க்கரையை உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உடல் எடையும் உடற்பயிற்சியும்

உடல் எடையைக் குறைப்பது கல்லீரலில் கொழுப்பு சேர்வதையும் அழற்சி, தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்க உதவும். உடல் எடையில் மூன்று விழுக்காடு குறைப்பதுகூட கல்லீரல் நலமாக இருப்பதற்கான குறியீடுகளை மேம்படுத்தும்.

உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வது கல்லீரலை வலுப்படுத்தும்.
உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வது கல்லீரலை வலுப்படுத்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகளையும் வாரம் இருமுறை தசை வலிமைப் பயிற்சிகளையும் செய்வது அடிவயிற்றுக் கொழுப்பையும் இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்க உதவுகிறது.

மத்திய தரைக்கடல் உணவு

புதிய பழங்கள், காய்கறிகள், மீன், பருப்பு வகைகள், நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த மத்திய தரைக்கடல் உணவு, இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு இறைச்சி, பால் பொருள்கள் ஆகியவற்றில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கும். ஆனால் மத்திய தரைக்கடல் உணவில் இவை குறைவாகவே உள்ளன.

மத்திய தரைக்கடல் பாணியில் உணவு உட்கொள்வது கல்லீரல் நலத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மத்திய தரைக்கடல் பாணியில் உணவு உட்கொள்வது கல்லீரல் நலத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. - படம்: ஐஸ்டாக்

இருப்பினும், இந்த உணவு முறையை எப்போதும் முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்பதை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

புரதச்சத்துக்காகச் சிவப்பு இறைச்சிக்கு பதிலாக மீன் அல்லது கோழி இறைச்சியைச் சேர்த்துக்கொள்ளலாம். அதிக கொழுப்புள்ள சிவப்பு இறைச்சியைக் குறைப்பதும் நல்லது.

மேலும், உணவை எண்ணெய்யில் பொரிப்பதற்குப் பதிலாக அவற்றை வாட்டி, வெண்ணெய்யைச் சுவைக்காக மட்டும் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கல்லீரல்ஆரோக்கியம்உணவுஉடல் எடை