3 அழைப்புகளில் வந்த மோசடி; வாழ்க்கைச் சேமிப்பு முழுதும் காலி

3 அழைப்புகளில் வந்த மோசடி; வாழ்க்கைச் சேமிப்பு முழுதும் காலி

5 mins read
கைதாக நேரிடும் என்ற மிரட்டலால், “போலீசாரிடம்” கிட்டத்தட்ட $20,000 தொகையை அவர் மாற்றினார்
01d114e9-d7dc-48de-98dd-31731856c0ae
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்படும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2024ல் 1,504லிருந்து 2025ல் 3,363ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையின் ஆண்டு மோசடி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. - படம்: கெட்டி இமேஜஸ்

“போலீசார்” அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினர்: விசாரணைக்காகச் சேமிப்பை ஒப்படைக்க வேண்டும் அல்லது இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும்.

பெயர் குறிப்பிட விரும்பாத 29 வயது சிங்கப்பூர் பெண்ணான மர்லின் (Marilyn), பீதியடைந்தார். அந்த நேரத்தில் அவர் வேலையில்லாமல் இருந்தார், மேலும் 2025 பிப்ரவரி மாதத்தின் அடுத்த வாரத்தில் அவருக்கு ஒரு வேலை நேர்காணல் இருந்தது.

நிர்க்கதியற்ற நிலையில், அவர் $19,500 தொகையைத் தெரியாத ஒரு வங்கித் கணக்கிற்கு மாற்றினார்.

“அந்த வாரத்தில் எனக்கு வேலை நேர்காணல் இல்லையென்றால், அநேகமாக நான் ஏமாந்திருக்க மாட்டேன்,” என்கிறார் தற்போது நிதித் துறையில் பணிபுரியும் மர்லின்.

அன்று காலை 8 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் அவர் திடுக்கிட்டு எழுந்தார். பிலிப்பீன்ஸ் நாட்டுக்காரரைப் போலப் பேசிய அந்த அழைப்பாளர், தன்னை ஒரு டிபிஎஸ் வங்கி அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மர்லினின் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அவர் கூறினார்.

மர்லின் தனது டிபிஎஸ் கணக்கைப் பயன்படுத்துவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அதை காலி செய்திருந்தார். அந்தச் செயலற்றக் கணக்கை மூடிவிடலாம் என்ற நம்பிக்கையில், தனது அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை அந்த “வங்கி அதிகாரியிடம்” பகிர்ந்துகொண்டார். ஆனால், சந்தேகத்திற்கிடமான பரிமாற்றம் குறித்து புகார் அளிக்க அவர் “போலீசாரிடம்” இணைக்கப்பட்டார்.

அவர் நினைவு கூர்கிறார்: “அது அதிகாலை நேரம். நான் களைப்பாக இருந்தேன், தொலைபேசி மூலமே போலீஸ் (புகார்) செய்ய முடிந்தால், ஏன் செய்யக்கூடாது என்று நினைத்தேன்.”

பயத்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம், இரண்டு வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் சிங்கப்பூரர்களைப் போலப் பேசிய லீ கோக் ஃபாய் மற்றும் ஃபூ ஷி ஹாவ் எனும் பெயரைக் கொண்ட போலீஸ் ஆள்மாறாட்டக்காரர்களிடம் அவர் பேசினார். மர்லினின் பெயரும் அடையாள அட்டை எண்ணும் பணமோசடி வழக்குடன் தொடர்புடையவை என்று அவர்கள் கூறினர்.

சிங்கப்பூர் காவல்துறையின் சின்னம் தாங்கிய ஒரு போலி கைது ஆணை அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டது.

கைதாவதைத் தவிர்க்க, அவர் “நிதி மதிப்பீட்டு ஆய்வு” ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு அவரது பணத்தை அவர்கள் உருவாக்கிய “பாதுகாப்புக் கணக்கிற்கு” மாற்ற வேண்டும் என்றும், அதன் மூலம் சிங்கப்பூர் நாணய ஆணையம் சோதனைகளை மேற்கொள்ளும் என்றும் மோசடி செய்பவர்கள் கூறினர். அவரும் அதற்கு இணங்கினார்.

2025ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடிகளில் (GOIS) பாதிக்கப்பட்ட 3,363 பேரில் மர்லின் ஒருவர்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ல் ஒட்டுமொத்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கையும் இழந்த தொகையும் குறைந்திருந்தாலும், GOIS மோசடிகள் மட்டும் அதிகரித்தன. காவல்துறையின் ஆண்டு மோசடி புள்ளிவிவரங்களின்படி, GOIS வழக்குகளின் எண்ணிக்கை 2024ல் இருந்த 1,504 வழக்குகளை விட இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2025ல் GOIS மூலம் பாதிக்கப்பட்டவர்கள் $242.9 மில்லியனை இழந்தனர் - இது முதலீட்டு மோசடிகளுக்கு அடுத்தபடியாக, அனைத்து மோசடி வகைகளிலும் இரண்டாவது மிக உயர்ந்த இழப்பாகும்.

அரசாங்க அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்பவர்கள் “பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை மற்றும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படியும் தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் செயல்பாட்டுத் துறை உதவி இயக்குநரான காவல்துறை கண்காணிப்பாளர் ரோஸி ஆன் மெக்கின்டைர் கூறுகிறார். அவர்கள் “பாதிக்கப்பட்டவர்களிடம் பயத்தையும் அவசரத்தையும் தூண்டி, நிலைமையைப் பகுப்பாய்வு செய்யும் திறனை முடக்குகிறார்கள்”.

அவசரமும் பயமும் - அதாவது தனது தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற எண்ணமுமே - மர்லினைத் தொடர்ந்து பேச வைத்தன.

“முதலில் அழைப்பு வந்தபோது, இது ஒரு மோசடி என்றுதான் நினைத்தேன்,” என்கிறார் மர்லின். “ஆனால் அவர்கள் மிகவும் தொழில்முறைத் தன்மையுடன் பேசினர்; எவ்வளவு அதிக நேரம் நான் பேசினேனோ, அவ்வளவு அதிகமாக நான் அதை நம்பத் தொடங்கினேன்.”

அதிகாரிகள் மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்கிறார்கள். உள்ளூர் நபர்களின் உதவியுடன் கைப்பேசி எண்கள், வங்கித் கணக்குகள் மற்றும் போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி அவர்கள் மோசடிகளைச் செய்கிறார்கள் என்று கண்காணிப்பாளர் மெக்கின்டைர் கூறுகிறார்.

மர்லினின் விஷயத்தில், மோசடி செய்பவர்கள் அவரது வங்கித் கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டுகளைக் கேட்டனர் மற்றும் அவரது முந்தைய அதிகபட்சப் பரிமாற்றத்தை விடக் குறைவான தொகையை மாற்றச் செய்தனர். இதன் மூலம் வங்கிகளின் உடனடி கண்காணிப்பில் சிக்காமல் இருக்க அவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதை இது காட்டுகிறது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

மேலும், பணம் மீண்டும் கிடைத்துவிடும் என்ற போலிப் பாதுகாப்பை உருவாக்க, பணம் பெறும் கணக்கிற்கு மர்லினின் பெயரையே பெயரிடுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

நடந்தவற்றை மர்லின் தனது தங்கைளிடம் கூறிய பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால் பணம் பறிபோய்விட்டது.

இப்போது, மர்லின் தனது வங்கித் கணக்கில் குறைந்தபட்சத் தொகையை மட்டுமே வைத்திருக்கிறார், மீதமுள்ள நிதியை முதலீட்டுத் தயாரிப்புகளில் முடக்கி வைத்துள்ளார். மேலும் $1,000க்கு மேலான எந்தப் பரிமாற்றத்தையும் செய்வதற்கு முன் தனது தங்கையிடம் ஆலோசிக்கிறார்.

“அவர் தான் எனது நிஜ வாழ்க்கை ஈரடுக்குப் பாதுகாப்பாளர்(2FA),” என்கிறார் அவர்.

முதல் 3 மோசடிகள் (அனைத்து வயதினர்)

இளையர்கள் (19 மற்றும் அதற்கு கீழ்), இளம் வயதினர் (20-29), மற்றும் பெரியவர்கள் (30-49)

  1. மின் வணிக மோசடிகள்
  2. தூண்டிலிடுதல் மோசடிகள்
  3. வேலைவாய்ப்பு மோசடிகள்

மூத்த குடிமக்கள் (50-64) மற்றும் முதியவர்கள் (65 மற்றும் அதற்கு மேல்)

  1. தூண்டிலிடுதல் மோசடிகள்
  2. முதலீட்டு மோசடிகள்
  3. அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள்

பாதிக்கப்பட்டவர்களில் முதியவர்கள் 14.8 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், 2025ல் ஒருவருக்கு சராசரியாக $37,053 என்ற விகிதத்தில் முதியவர்களே அதிகப் பணத்தை இழந்துள்ளனர் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

ஏதேனும் மோசடி என சந்தேகம் இருந்தால், ஸ்கேம்ஷீல்ட் செயலி அல்லது 24/7 செயல்படும் ஸ்கேம்ஷீல்ட் உதவி எண் (1799) போன்ற அதிகாரபூர்வ ஆதாரங்கள் மூலம் சரிபார்க்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது. அரசாங்க அதிகாரிகள் தொலைபேசி அழைப்பில் இவற்றைச் செய்ய மாட்டார்கள்:

  1. பணம் / விலையுயர்ந்த பொருள்களை மாற்றுமாறு கேட்பது
  2. வங்கி உள்ளீட்டு விவரங்களைக் கேட்பது
  3. செயலிகளை அதிகாரபூர்வமற்ற தளங்களிலிருந்து பதிவிறக்குமாறு கேட்பது
  4. அழைப்பைக் காவல்துறைக்கு மாற்றுவது

காவல்துறையினர் ஒருபோதும் சிங்கப்பூர் காவல்துறையின் வாரண்ட் கார்டை (Warrant card) இணையம் வழியாகக் காட்டி அடையாளம் காட்ட மாட்டார்கள். நேரில் பார்க்கும்போது வாரண்ட் அட்டை உண்மையானதுதானா என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த பாதுகாப்பு அம்சங்களைக் கவனியுங்கள்:

  1. அட்டையைச் சாய்வாகப் பார்க்கும்போது, அதிகாரியின் புகைப்படத்திற்குக் கீழே “POLICE” என்ற ஹாலோகிராபிக் சொல் தோன்றும்.
  2. அட்டையின் வலது பக்கத்தில், ஐந்து ஹாலோகிராபிக் போலீஸ் சின்னங்கள் செங்குத்தாக இருக்கும்.
சிங்கப்பூர் காவல்துறையுடனும் தேசிய குற்றத் தடுப்பு மன்றத்துடனும் இணைந்து வழங்கப்படுகிறது.
குறிப்புச் சொற்கள்