செம்மொழி சமூக, இலக்கிய இதழ் தனது வெள்ளிவிழாவை எதிர்வரும் சனிக்கிழமை (மே 17) கொண்டாடுகிறது. விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் (The pod 16ஆம் தளம்) நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கலந்துகொள்கிறார். செம்மொழி சமூக, இலக்கிய இதழ், தமிழவேள் நற்பணி மன்றத்தின் சார்பாக 1999ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது. காலாண்டு இதழாக வெளிவரும் இதனைத் தொடங்கியவர் திரு சோ.வீ. தமிழ்மறையான்.
திரு எம். இலியாஸ், 2010ஆம் ஆண்டு செம்மொழி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஆளுமைகளின் படைப்புகள், நேர்காணல்கள், அரிய சிறப்புக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை தரமான தாளில், அழகிய வடிவமைப்பில் வெளியிடப்படுவது செம்மொழி இதழின் தனிச்சிறப்பு. சிறுகதைச் சிறப்பிதழ், இந்திய சினிமா நூற்றாண்டுச் சிறப்பு மலர், தமிழ்மொழி விழா சிறப்பு மலர்கள், சிகரம் தொட்ட தமிழர் எஸ். ஆர். நாதன் சிறப்பு மலர், செம்மொழிச் சிற்பி கலைஞர் சிறப்பு மலர் போன்ற சிறப்பு மலர்களை அது வெளியிட்டுள்ளது. செம்மொழி அச்சுவடிவிலும், வாட்ஸ்அப், மின்னஞ்சல் வாயிலாகப் பலருக்கும் இலவசமாக அனுப்பப்படுகிறது. சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி இரா. அன்பரசு தலைமையில் நடைபெறும் விழாவில் முன்னாள் தூதர் கேசவபாணி, தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர். ரவீந்திரன், வளர் தமிழ் இயக்கத் தலைவர் நசீர்கனி, நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வாழ்த்தரங்கம்
நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் ஆர். தினகரன் தலைமையில் நடைபெறும் வாழ்த்தரங்கத்தில், தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியர் ஷாநவாஸ், மக்கள் மனம் இதழாசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர். விழாவில் ‘செம்மொழி நேர்காணல்கள்’ நூல் வெளியிடப்படுகிறது. செம்மொழி இதழில் வெளிவந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர் எம். இலியாஸ்.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன், சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், முன்னாள் தூதர் கேசவபாணி, தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன், மலேசியாவின் முன்னாள் துணையமைச்சர் க.குமரன், வெ.இறையன்பு, திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட நடிகர் நாசர், தமிழக அமைச்சர்கள் மா. சுப்ரமணியம் போன்றோரின் நேர்காணல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. விழாவில், செம்மொழி இதழுக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கிவரும் ஒருவருக்குச் ‘செம்மொழிக் காவலர்’ விருது வழங்கப்படும். விழாவிற்கு அனுமதி இலவசம்.