தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்

2 mins read
e09583aa-42db-426e-ab42-d0674e360bbd
வாழ்க்கைமுறையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமாகவே உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்.   - படம்: ஃப்ரீபிக்

உயர் ரத்த அழுத்தம் என்பது இதய நோய், பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சினைகள் போன்ற கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆபத்தான மருத்துவ நிலை.

மருந்துகள் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம் எனினும், வாழ்க்கைமுறையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமாகவே சிலரால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

உடல் எடையைக் குறைத்தல்

உடல் எடையைக் குறைப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகளில் மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

உடல் எடை அதிகரிக்கும்போது, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும்போது, ரத்த அழுத்தமும் உயர்கிறது.

ஒவ்வொரு கிலோ எடை குறையும்போதும், ரத்த அழுத்தம் சுமார் 1 mmHg வரை குறையலாம்.

மேலும், உள்ளுறுப்புகளைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்கான போக்கு ஆசியர்களுக்கு அதிகமென்பதால் நடுத்தர உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ) உள்ளவர்களுக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல்

முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவை பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன.

நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி, அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது.

மேலும், இது ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வழக்கமான உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்வது முக்கியம். வேகமான நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் போன்றவை சிறந்த உடற்பயிற்சி நடவடிக்கைகள்.

உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உப்பு சாப்பிடும் அளவை குறைத்தல்

பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு உப்பை சிங்கப்பூரர்கள் உட்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உப்பு அளவைக் குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், இயற்கையான பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை ரத்த அழுத்தத்தைக் கணிசமாக மேம்படுத்தும்.

போதுமான தூக்கம் பெறுவது

போதுமான தரமான தூக்கம் கிடைப்பது மிகவும் முக்கியம். பெரியவர்கள் ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தூக்கப் பிரச்சினைகள் உட்பட மோசமான தூக்கம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

தூக்கத்தின் தரத்தையும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த ஆழ்ந்து தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

மன அழுத்தத்தைச் சமாளித்தல்

நீடித்த மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஓய்வு நுட்பங்கள், உடற்பயிற்சி, நீங்கள் நம்பும் ஒருவருடன் பேசுவது மன அழுத்தத்தைத் திறம்பட கட்டுப்படுத்த உதவும்.

புகைப்பழக்கத்தை நிறுத்துவது

புகைப்பழக்கம் ரத்த அழுத்தத்தை உயர்த்துவதோடு, ரத்த நாளங்களுக்கும் சேதம் விளைவிக்கிறது.

இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றின் ஆபத்தைப் புகைப்பழக்கம் அதிகரிக்கிறது.

இறுதியாக, உங்கள் ரத்த அழுத்தத்தைத் தவறாமல் வழக்கமாக கண்காணித்து, மருத்துவரின் பரிந்துரைகளைப் பின்பற்றுங்கள்.

வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த நேரம் எடுக்கும் என்றாலும், தொடர்ந்து முயற்சி செய்வது நீடித்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

குறிப்புச் சொற்கள்