செம்மொழி சமூக, இலக்கிய இதழின் ஆசிரியரும், சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ எனும் நூல் பிப்ரவரி 22ஆம் தேதி, சென்னையில் வெளியீடு கண்டது.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழ் அலை பதிப்பகத்தின் ஏற்பாட்டில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலை வெளியிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினரும் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி என். சிவா நூல் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்புக் காணொளி திரையிடப்பட்டது. அதில், கலைஞருக்கும் நூலாசிரியருக்குமான தொடர்பு, கலைஞர் சிங்கப்பூரில் பேசிய இலக்கிய உரை, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் இருவரிடமும் நூலாசிரியர் நூலை வழங்கும் காட்சிகள், கடந்த செப்டம்பரில் சிங்கப்பூரில் இந்நூல் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியின் காட்சிகள், அதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி கருணாநிதி ஆற்றிய உரை ஆகியவை இடம்பெற்றிருந்தன. சென்னை நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கிய நூலாசிரியரின் மகன் இர்ஷாத் முஹம்மது, உழைப்பால் உயர்ந்த தன் தந்தையின் இளம் பருவ வாழ்க்கைப் பயணம் பற்றியும் தாயார் பற்றியும் நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார். ஆசிரியர் கி. வீரமணி ஆற்றிய உரையில் தம்முடன் இலியாஸ் குடும்பத்தினர் பாசப்பிணைப்புடன் பழகிக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் சொன்னார்.
வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தமது உரையில் கலைஞருடனான நீண்ட நட்பை நினைவுகூர்ந்ததுடன் நூலாசிரியரின் தமிழ்ப் பணியையும் சமுதாயப் பணியினையும் பாராட்டினார்.
திருச்சி சிவா தம் உரையில், சாக்ரடீசின் வரலாற்றை எழுதிய பிளேட்டோவைக் குறிப்பிட்டு, கலைஞரின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்து இலியாஸ் எழுதியுள்ளார் என்று கூறினார்.
ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் இலியாஸ், கலைஞருடன் தமது தொடர்பு தொடங்கியது முதல் தொய்வின்றித் தொடர்ந்த வரலாற்றைச் சுவைபட எடுத்தியம்பினார்.