‘பீப்பிள் ஆஃப் டிசைன்’ எனும் கருப்பொருளில் 80 நிகழ்ச்சிகளுடன் பிராஸ் பாசா, பூகிஸ், மரீனா, ஆர்ச்சர்ட் வட்டாரங்களை வண்ணமயமாக்கியது ‘சிங்கப்பூர் வடிவமைப்பு வாரம் 2024’.
சிங்கப்பூர் வடிவமைப்பு மன்றம் சார்பில் 11 நாள்கள் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், 700க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களின் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், கலைவடிவ படைப்புகள், பொது வரவேற்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. ஏறத்தாழ 190,000 பார்வையாளர்கள் அவற்றில் பங்கேற்றனர்.
இந்த வடிவமைப்புத் திருவிழா, படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்கள் படைப்புகளை மக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் வடிவமைப்பு குறித்தப் பொதுவான புரிதலை வளர்க்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.
வடிவமைப்புப் படைப்புகள் யாவும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தன.
நீடித்த நிலைத்தன்மைக்கான மறுபயன்பாடு
இந்நிகழ்வு தொடர்பில் நீடித்த நிலைத்தன்மையை ஆக்கபூர்வமாகவும் திறம்படவும் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்க முடியும் எனும் கருத்தினை வலியுறுத்திய ‘ஒவ்வொரு தையலுக்கும் மதிப்புண்டு’ (Every Stitch Counts) எனும் பயிலரங்கு நடைபெற்றது.
சிங்கப்பூரில் கல்வியின் தொடர்பில் உருவாகும் கழிவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் ‘சுழற்சி வகுப்பறை’ அமைப்பின் நிறுவனர்கள் லியோனி நாகராஜன், ஜினோபியா டின்வாலா, அதுகுறித்த கண்காட்சியையும் பயிலரங்கையும் வழிநடத்தினர்.
“ஆண்டுதோறும் ஏறத்தாழ 90,000 பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள். அவர்களின் சீருடைகள் அதன்பின் பயனற்றுப் போகின்றன. அவர்களுக்கடுத்த பிள்ளைகள் வேறு பள்ளிகளில் சேர்ந்து விடுவதாலோ பாலின, அளவு வேறுபாட்டினாலோ அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவதில்லை.
“இந்தச் சவாலுக்குத் தீர்வு காணவும் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்யவும் ஏதுவாகப் பழைய சீருடைகளைக் கொண்டு பயன்படுத்தக்கூடிய பொருள்கள் செய்யும் பயிலரங்கை வழிநடத்தினோம்,” என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் வடிவமைப்பின் தாக்கம்
வடிவமைப்பு வாரத்தின் கலந்தாலோசனையில் குழந்தைகள், பெரியவர்கள், மூத்தோர் என அனைத்து வயதினரையும் உள்ளடக்கியதாகவும் அவரவர் தேவைகளுக்கேற்ப அமைந்த இடங்களின் வடிவமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார் ‘ஏவா’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே ஆர் கார்த்திகேயன்.
அதில், மூத்தோரின் சுறுசுறுப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதுடன் பல தலைமுறைகள் ஒன்றாக நேரம் செலவிட வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘கம்போங் ஏவா நிலையம்’ (Kampung AWWA centre) குறித்து விவரித்தார் கார்த்திகேயன்.
தொடர்ந்து, சிறு குழந்தைகளின் வளர்ச்சித் தேவைகளுக்கேற்ப தடையற்ற இயக்கத்தை உறுதி செய்யும் ‘ஃபெர்ன்வேல் ஊட்ஸ் ஆரம்பகாலத் தலையீட்டு நிலையத்தின்’ (Early Intervention Centre at Fernvale Woods) வடிவமைப்பு குறித்தும் விளக்கினார்.
“அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கப் பல கைகள் இணைய வேண்டும். அதற்குரிய பல துறைகளின் ஒன்றிணைவும் ஒத்துழைப்பும் இந்த அமர்வுக்குப் பின்னர் அதிகரிக்கும் என நம்புகிறேன்”, என்றார் கார்த்திகேயன்.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட நகர்ப்புற வடிவமைப்பு
பல்வேறு நகர்ப்புறக் கூறுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது குறித்தும் அவை மூலம் நீடித்த நிலைத்தன்மை கொண்ட செழிப்பான சூழலை உருவாக்குவது குறித்தும் ஆய்வு செய்து வருபவர் டாக்டர் ஸ்ரீலலிதா கோபாலகிருஷ்ணன்.
‘ஃபியூச்சர் சிட்டிஸ்’ சிங்கப்பூர் ஈடிஹெச் ஆய்வகத்தின் ஆய்வு இணை இயக்குநரும் சிங்கப்பூர் நிலவனப்புக் கட்டடக் கலைஞர்கள் கழகம் அதிபருமான இவர், ‘பொது நலத்திற்கான மீளாய்வு முறைகள்’ (Rethinking Systems for the Common Good) குறித்த ஆலோசனையில் பங்கேற்றார்.
அதில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் வடிவமைப்பின் பங்கு குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாக, அவை தொடர்பான உலகளாவிய போக்குகளும் உள்ளூர் கண்டுபிடிப்புகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன.
அவர், சிங்கப்பூர் போன்ற பெருநகரங்களில் இயற்கையுடன் இயைந்த கட்டட வடிவமைப்புகள் எவ்வாறு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்பது குறித்து உரையாற்றினார்.
“வடிவமைப்பாளர்கள், சமூகப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுதல், நகர்ப்புறத்தை அழகியல் ரீதியாக மட்டுமன்றி ஆரோக்கியமான, நிலையான சூழலை உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார் ஸ்ரீலலிதா.

