தனித்துவமிக்க கதைகள், வட்டாரத்தின் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றோடு சிங்கப்பூரின் கலை, கலாசாரத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர் இரவுத் திருவிழாவை தேசிய மரபுடைமைக் கழகம் விரைவில் தொடங்க உள்ளது.
சிங்கப்பூரின் மிகப்பெரிய இரவுநேர அனுபவம் என்று வர்ணிக்கப்படும் இவ்விழா, ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 7 வரை முதல்முறையாக மூன்று வாரயிறுதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராஸ் பாசா-பூகிஸ் வட்டாரத்திற்கு வரவிருக்கும் இந்த இரவுத் திருவிழா, 15வது முறையாக அரங்கேறவிருக்கிறது. ‘ஆர்ட் ஆஃப் பிளே’ என்பது இவ்விழாவின் கருப்பொருள்.
சிங்கப்பூரில் சில பள்ளிகளின் பிறப்பிடமாகத் திகழும் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு இந்த ஆண்டுக்கான கருப்பொருள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விழாக்காலச் சந்தைகள், ஆரவாரமிக்க இசை, மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் கண்கவர் நிகழ்ச்சிகள், உணவு ஆகியவற்றுடன் தனிச்சிறப்பு வாய்ந்த கலைப்படைப்புகளும் உள்ளூர், வட்டாரக் கலைஞர்களின் இரவு ஒளி அமைப்புகளும் சிங்கப்பூர் இரவுத் திருவிழாவில் இடம்பெறவிருக்கின்றன.
இவற்றுடன் 1950கள் முதல் 1970கள் வரையிலான அக்கால சிங்கப்பூர் நினைவலைகளில் மூழ்கச் செய்யும் ‘ஒண்டர் வேர்ல்டு’ எனும் சிறப்புக் காட்சியும் உண்டு.
தேசத்தின் கலை, கலாசாரத்தைக் கொண்டாடி மகிழும் தருணத்தில் மக்கள் ‘சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2024’ல் பங்கேற்று மகிழ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழா குறித்த மேல் விவரங்களை அறிந்திட https://www.nightfestival.gov.sg/ எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.