தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடற்பயணமாக சிங்கப்பூரின் வரலாறு: தேசிய அரும்பொருளகத்தில் புதிய கண்காட்சி

2 mins read
c2bcdecc-faf9-49db-8857-a93353f2b405
மக்களின் அசைவுகளுக்கேற்ப விரியும் மின்னிலக்க நீர்வீழ்ச்சி திரைச்சீலை, சிங்கப்பூரின் வரலாற்றுக் காட்சிகளைச் சுவரிலும் தரையிலும் சித்திரிக்கும். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரின் வரலாற்றுப் பயணத்தை இனி கடல்பயணமாக, நவீன பரிமாணத்தில் காணலாம்.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி திறக்கும் அப்புதிய காட்சிக்கூட அனுபவத்தின் பெயர் ‘சிங்கப்பூர் ஒடிஸ்ஸி: காலத்தைக் கடந்துசெல்லும் ஒரு பயணம்’ (Singapore Odyssea: A Journey Through Time).

‘‌ஷோ அறக்கட்டளை கண்ணாடி ரோட்டன்டா’ (Shaw Foundation Glass Rotunda) எனப் புதிதாகப் பெயரிடப்பட்ட காட்சிக்கூடத்தில் அது அமையும்.

பத்து மாதங்கள் மூடப்பட்ட பிறகு திறக்கும் மறுவடிவமைக்கப்பட்ட நிரந்தரக் காட்சிக்கூடங்களில் முதலாவதாகத் திறக்கும் காட்சிக்கூடம் அது.

சிங்கப்பூரின் 700 ஆண்டு வரலாற்றுப் பயணத்தின் முக்கிய மைல்கற்களை ‘சிங்கப்பூர் ஒடிஸ்ஸி’ சித்திரிக்கும்.

காலத்தில் பின்னோக்கிச் செல்லும் முறையில் இக்கண்காட்சி சிங்கப்பூரின் எதிர்காலத்தில் தொடங்கி, ‘ஒராங் லாவுட்’ மீன்பிடி மக்கள் வாழ்ந்த காலம் வரை பின்னோக்கிச் செல்லும்.

சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு திரைகளில் காண்பிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு திரைகளில் காண்பிக்கப்படுகிறது. - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் அரும்பொருளகங்களில் முதன்முறையாக, அந்தரத்தில் தொங்கும் ‘எல்இடி’ புவிக்கோளத்துடன் இரு நிமிட ஒளிக் காட்சியும் இடம்பெறும். நூற்றாண்டுகளைத் தாண்டி சிங்கப்பூரின் கடல்சார் வர்த்தகப் பாதைகள் மாறியுள்ள விதத்தை அது காட்டுகிறது.

சிங்கப்பூரின் கடல்சார் வர்த்தகப் பாதைகள் மாறியுள்ள விதத்தைக் காட்டும் ‘எல்இடி’ புவிக்கோளத்துடன் இரு நிமிட ஒளிக் காட்சியும் இடம்பெறும்.
சிங்கப்பூரின் கடல்சார் வர்த்தகப் பாதைகள் மாறியுள்ள விதத்தைக் காட்டும் ‘எல்இடி’ புவிக்கோளத்துடன் இரு நிமிட ஒளிக் காட்சியும் இடம்பெறும். - படம்: ரவி சிங்காரம்

மக்களின் அசைவுகளுக்கேற்ப விரியும் மின்னிலக்க நீர்வீழ்ச்சி திரைச்சீலை, சிங்கப்பூரின் வரலாற்றுக் காட்சிகளைச் சுவரிலும் தரையிலும் சித்திரிக்கும்.

கண்காட்சியின் இறுதி அங்கத்தில் சிங்கப்பூர் சார்ந்த புராணக்கதைகள் - சாங் நீல உத்தமன் சிங்கத்தைக் கண்டது, அவருடைய தந்தை ராஜா சுலான் கடலுக்குள் இறங்கியது, வாள்மீன்கள் சிங்கப்பூரைத் தாக்கியது போன்றவை காட்டப்படுகின்றன.

கண்காட்சியின் இறுதி அங்கத்தில் சிங்கப்பூர் சார்ந்த புராணக்கதைகள் - சாங் நீல உத்தமன் இங்குச் சிங்கத்தைக் கண்டது போன்றவை இடம்பெறும்.
கண்காட்சியின் இறுதி அங்கத்தில் சிங்கப்பூர் சார்ந்த புராணக்கதைகள் - சாங் நீல உத்தமன் இங்குச் சிங்கத்தைக் கண்டது போன்றவை இடம்பெறும். - படம்: ரவி சிங்காரம்

இது, உள்ளூர் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கண்காட்சி என்பது தனிச்சிறப்பு.

இந்தப் பயணம் தனியாக மேற்கொள்ளப்படுவதல்ல; ஒரு ‘நண்பர்’ திரைகளில் உங்களையே பின்தொடர்வார். உள்ளே செல்வதற்குமுன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் RFID கடிகாரத்தைப் பொறுத்து அந்த நண்பர் யார் - நீர்நாய், நண்டு அல்லது இருவாய்ச்சி (hornbill) எனத் தீர்மானிக்கப்படும்.

அந்த ‘நண்பர்களை’ கண்காட்சியின் இறுதியில் மின்னிலக்கக் கிணறுகளில் விட்டுவிடலாம். “நாம் இயற்கையிலிருந்து இரவல் பெறுபவற்றை மீண்டும் இயற்கைக்கே திரும்பக் கொடுக்கவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது,” என அரும்பொருளகம் கூறியது.

மறுவடிவமைப்புக்குமுன், வில்லியம் ஃபார்க்குஹார் சேகரித்துவைத்திருந்த இயற்கை வரலாற்று ஓவியங்களை மையப்படுத்திய ‘காட்டின் கதை’ கண்காட்சி அதே இடத்தில் 2016 முதல் இருந்தது.

“காட்டின் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்வையாளர்களைக் கூடுதலாக ஈடுபடுத்தும் வகையில் இக்கண்காட்சியை அமைத்துள்ளோம்,” என்றார் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் உதவி காப்பாளர் ஜேன் யாப்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் 6 வயதுக்குக் குறைந்த அனைவருக்கும் இக்கண்காட்சி இலவசம். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய அரும்பொருளகம் அனைவருக்கும் இலவசமாகத் திறக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்