மனநலனுக்கும் புத்துணர்ச்சிக்கும் பயணம் ஓர் சிறந்த வழியென்னும் கருத்து பரவலாக நிலவி வரும் வேளையில், அதற்கு மற்றொரு முக்கியமான வழியாக விளங்கும் நல்ல உறக்கத்தையும் இணைக்கும் ‘உறக்கச் சுற்றுலா’ தற்போது புகழ் பெற்றுவருகிறது.
உறக்கச் சுற்றுலா, வெறும் வசதியான தங்கும் அறையாக மட்டுமல்லாமல், உறக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான அனுபவத்தைத் தருவதாகும்.
நன்கு தூங்கும் கலையைக் கற்றுக்கொள்வதிலும், உறங்குவதில் உள்ள சிரமங்களைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளிலும் உறக்கச் சுற்றுலா கவனம் செலுத்தும்.
இவ்வகைச் சுற்றுலாத்துறையின் வணிகம் பெருகி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், அடுத்த நான்காண்டுகளில் இது இன்னும் ஐம்பது விழுக்காட்டுக்குமேல் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலன் மீதான விரிவான கண்ணோட்டம் அதிகரிப்பதை இத்துறையின் விரிவாக்கம் காட்டுகிறது. சமச்சீரான உணவு, உடற்பயிற்சி குறித்த புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் நீட்சியாக உறக்கத்தின் முக்கியத்துவமும் பார்க்கப்படுகிறது.
குடும்பப் பொறுப்பையும் வேலைப்பளுவையும் விடுத்து, நல்ல உறக்கம் தேடி வருபவர்களுக்கு ஏற்றவாறு, தங்குவிடுதிகளும் தங்கள் திட்டங்களை வடிவமைத்து, விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளன.
மருத்துவ ஆலோசனையின் பேரில் நீராவிக் குளியல், குறட்டை உள்ளிட்ட ஆழ்ந்த உறக்கத்தைத் தடுக்கும் காரணிகளுக்கான தீர்வு உள்ளிட்டவை இத்திட்டங்களில் பங்குவகிக்கத் தொடங்கியுள்ளன.
ஆரோக்கியமான உணவு, யோகா, தியானம், முறையான சுற்றுச்சூழல் காற்றழுத்தம், இணை உணவுகளுடன் இதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
தொழில்நுட்பம் வாழ்க்கையுடன் கலந்திருப்பது உறக்கத்தின்மீது தாக்கம் ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க, உறக்கத்தை மேம்படுத்தவும் புத்தம்புது தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன.
தியானம் செய்ய வழிகாட்டும் தொழில்நுட்பம், கனவு உறக்கத்தைத் தடுக்க விடாமல் காக்கும் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் கூடிய தொழில்நுட்பம் ஆகியவை வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
வல்லுநர்கள்உறக்கச் சுற்றுலாவைப் போலவே உறக்கத் தொழில்நுட்பங்களும் விரிவடையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

