தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, பலகாரம். புத்தாடை, எப்போதும் நாம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். பட்டாசு, இந்தியாவில் வெடிப்பதுபோல் சிங்கப்பூரில் வெடிப்பது இல்லை. ஆனால், பலகாரங்கள் கட்டாயம் வீடுகளில் செய்வது வழக்கம். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளிக்குத்தான் பலகாரங்கள் செய்வது வழக்கம். அதனால் பலகாரங்கள் செய்யும்போது சில குறிப்புகளை மறந்திருப்போம். அதனால் வீட்டில் பெரியவர்கள் செய்த அந்த ருசி இருக்காது. இதோ உங்களுக்காக ஒரு சில குறிப்புகளைக் கொடுத்து இருக்கிறோம். அந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி பலகாரங்களைச் செய்து தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
* இரண்டு பங்கு பாசிப் பருப்பு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும். மைசூர்பாகு தேன்கூடுபோல் கரகரப்பாக வர, சோடா உப்பு ஒரு சிட்டிகை போட்டால் போதும்.
* சர்க்கரை பாகு காய்ச்சும்போது, சில துளிகள் எலுமிச்சை சாற்றை அதில் விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்.
* லட்டு பிடிக்கும்போது, ஏதாவது பழ ‘எசன்சை’ சிறிதளவு கலந்தால், சுவையும் மணமும் அனைவரையும் ஈர்க்கும்.
* எந்த வகையான இனிப்பு செய்தாலும் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவேண்டும். அதனால், இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
* பஜ்ஜி மாவில் சூடாக ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் கலந்து பஜ்ஜி சுட்டால் வாசனையாக இருக்கும்; எண்ணெய் அதிகம் ஈர்க்காது.
* முறுக்கு மாவு பிசையும்போது அத்துடன் ஒரு மேசைக்க்கரண்டி நெய்யைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து சுட்டு எடுத்தால் நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் இருக்கும்.
* பலகாரம் செய்யும் முன்பு, எண்ணெய்யில் இஞ்சி, வாழைப்பட்டை நசுக்கிப் போட்டு பொரித்து எடுத்தபின் உபயோகிக்கவேண்டும். அதனால், பலகாரம் எண்ணெய் குடிக்காது; பொங்கியும் வழியாது. எண்ணெய்ப் புகையால் வாந்தி, தலைசுற்றல் வராது
தொடர்புடைய செய்திகள்
* ரவா, சேமியா மற்றும் அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும். ரவா கேசரி செய்யும் போது 150 மி.லி. பாலையும் சேர்த்துக் கிளறினால் சுவை கூடும்; திகட்டாமல் இருக்கும்.
* பயத்த மாவு லட்டு, ரவா லட்டு செய்யும்போது முதலில் ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும் நெய்யையும் போட்டு கலக்கவும். பின் அதனுடன் ரவாவையோ, பயத்தம் மாவையோ சேர்த்து உருண்டை பிடிக்கவும். தேவைப்பட்டால் ரவாமீது ஒரு கரண்டி பாலை தெளித்துவிட்டால் சுலபமாக உருண்டை பிடிக்க வரும்.
* தீபாவளிப் பலகாரங்கள் சிக்கு வாடை அடிக்காமல் இருக்க ஒரு சிறு துணியில் கைப்பிடி அளவு கல் உப்பை முடிச்சாகக் கட்டி, பலகாரம் வைக்கும் பாத்திரத்தின் அடியில் போட்டு வைக்கவும்.