மெய்நிகர் விளையாட்டு மூலம் பசுமை உலகை உருவாக்கும் ஆர்வத்தைத் தூண்ட முயற்சி

3 mins read
952f2721-3c2e-43ee-8b59-c9dce40687b9
ஸ்ரீசரண் பாலசுப்ரமணியன். - படம்: நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு

மெய்நிகர் விளையாட்டின் மூலம் பசுமையான உலகை உருவாக்கும் ஆர்வத்தை மாணவர்களுக்குப் புத்தாக்கமிக்க வழியில் கொண்டுசேர்க்கிறார் ஸ்ரீசரண் பாலசுப்ரமணியன், 22.

சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை சார்ந்த நாட்டின் பயணத்தில் அநேக சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்ட ‘எஸ்ஜி ஈக்கோ ஃபண்ட்’ (SG Eco Fund) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற்றவர் ஸ்ரீசரண்.

மேலும் பசுமையான, சுற்றுப்புற நிலைத்தன்மை மிக்க சிங்கப்பூரை உருவாக்குவதில் இவருக்கு ஆர்வம் உண்டு.

ஒருவர் தேர்ந்தெடுக்கும் ஆடைகள் முதல் உண்ணும் உணவு வரை அனைத்தும் பசுமையான சுற்றுப்புறத்திற்குப் பங்களிக்கின்றன என்று தமிழ் முரசிடம் கூறிய திரு ஸ்ரீசரண், பசுமையான உலகைச் செழிக்கச் செய்ய மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்குடன் தான் செயல்படுத்திவரும் ‘ஜாலான் ஜெர்னி’ (Jalan Journey) எனும் திட்டம் குறித்தும் விவரித்தார்.

‘ஜாலான் ஜெர்னி’ சமூக நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், நண்பர் ஹெரிசனுடன் இணைந்து சமூகத்தில் பசுமையான மாற்றத்தை நிகழ்த்தச் சிந்தித்ததன் விளைவே இந்த முயற்சி என்றார். ஸ்ரீசரண் தற்போது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் துறை மாணவராக உள்ளார்.

“எந்தவொரு பொருளையும் உருவாக்கிய பிறகு அதனை அகற்றுவது எளிதன்று. எனவே, மறுபயனீடு செய்வதைக் காட்டிலும் தொடக்கத்திலேயே எவ்வாறு கழிவுகளோ குப்பைகளோ உருவாகாமல், பயன்படுத்தும் அளவைக் குறைக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினோம்.

“அதன் தொடர்பில் மாணவர்களுக்குப் பசுமை சார்ந்த வாழ்வியல் முறை பற்றி அதிக அளவில், அவர்கள் விரும்பும் வகையில் கொடுக்கச் சிந்தித்தோம். அந்த எண்ணங்களின் விளைவே  “கேமிஃபிகேஷன் ’ எனும் மெய்நிகர் உலகைச் சார்ந்த விளையாட்டு.

இத்திட்டம் வாயிலாகச் சுற்றுப்புறப் பாதுகாப்பு, பசுமை வசிப்பிடம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த தகவல்களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க முடிவு செய்தோம்,” என்றார் ஸ்ரீசரண்.

பொதுவாகவே சுற்றுப்புற நிலைத்தன்மை விழிப்புணர்வு என்றால் உரையாடல்கள், அமர்வுகள்  மூலமாக நிகழ்ச்சிகள் படைக்கப்படும். எனினும், மாணவர்களின் கவனத்தைப் பெற, அவர்கள் ஆர்வத்துடன் சுற்றுப்புற நலனில் தங்கள் பங்களிப்பை வழங்க விளையாட்டை ஓர் அங்கமாகப் பயன்படுத்த முடிவு செய்ததாகக் கூறினார் ஸ்ரீசரண்.

அதன் அடிப்படையில் மறுபயனீட்டுப் பழக்கம், உணவுக் கழிவுகள், ஆடையிலிருந்து உருவாகும் கழிவுகள் உள்ளிட்ட மூன்று முக்கியத் தலைப்புகளை உட்புகுத்தி மாணவர்களுக்கான மெய்நிகர் விளையாட்டுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விளையாடத் தொடங்கும்போது ‘சன்ஃப்ளவர் சிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள மெய்நிகர் உலகில் அவர்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கூறிய மூன்று தலைப்புகளில் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.

“எடுத்துக்காட்டாக, அதிநவீன ஆடைகள் பிரிவில் குறைவான கரிம வெளியேற்றத்துடன் சுற்றுப்புறத்திற்கு நன்மை விளைவிக்கும் வகையில் உள்ள ஆடைகள் தொடங்கி, இதர ஆடைகளும் இருக்கும். அவற்றிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

“மாணவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சுற்றுப்புறத்தின் பசுமையைப் பாதுகாக்கும் வகையில் உணவு, உடை, பயன்படுத்தும் பொருள்கள் எனப் பலவற்றையும் தெரிவு செய்யும்போது அவர்களின் மெய்நிகர் உலகம் பசுமை சார்ந்ததாகத் திரையில் செழிப்புற்றவாறு மாறும். 

“அதேவேளை அவர்கள் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வு செய்யும்போது மெய்நிகர் உலகம் அழுக்காக மாசடைந்துவிடும்.

“இதன்மூலம் மாணவர்கள் தங்கள் செயல்பாடுகள் எவ்வாறு சுற்றுப்புறத்தில் நீடித்த நிலைத்தன்மைமிக்க  ஆக்ககரமான மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதைக் காணமுடியும்,” என்று மெய்நிகர் விளையாட்டு குறித்த விவரங்களைக் குறிப்பிட்டார் ஸ்ரீசரண்.

“நாங்கள் இத்திட்டத்தை உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் கொண்டுசேர்க்கிறோம். மாணவர்கள் மேற்கூறிய விளையாட்டில் பங்கேற்று முடித்தவுடன், அவர்கள் நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம் குறித்து வகுப்பறைகளில் பயிற்சியாளர்கள் மூலம் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

பிறகு, விளையாட்டு வழி விளைந்த நன்மை, தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படும். பசுமையான வாழ்விடம், பசுமையான நாடு நோக்கிய இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரும் எப்படிப் பங்களிக்கலாம் என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படும்,” என்று சுற்றுச்சூழல் சார்ந்த இத்திட்டத்தின் இலக்குகளை எடுத்துரைத்தார் ஸ்ரீசரண்.

“கழிவில்லா உலகு, சுழற்சிப் பொருளியல், சுற்றுப்புறச் சேவையாளர் எனும் முக்கியக் கருத்துகளை முன்வைத்து மாசற்ற பசுமையான உலகை நோக்கிய சிங்கப்பூரின் பயணத்தில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் வலிமையானதாக இருக்கும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார் இந்தச் சுற்றுப்புற ஆர்வலர்.

இவரைப்போல் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் இந்த நிதியுதவியைப் பெற விரும்புவோர் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.mse.gov.sg/sgecofund/apply எனும் இணையப்பக்கத்தைப் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்