தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடாவில் தமிழறிஞர் ஜி.யு.போப்பிற்குச் சிலை திறப்பு

2 mins read
9342e06c-77ee-4edd-ba20-9ecb0cb1dd45
திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை திரு ஜி.யு.போப்பின் சிறப்பான சேவையாகக் கருதப்படுகிறது. - படம்: கனடியத் தமிழர் பேரவை

தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றிய திரு ஜி.யு. போப்பிற்கு கனடாவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஜி.யு.போப் எனத் தமிழர்களால் அறியப்பட்ட ஜோர்ஜ் உக்லோ போப், 1820ஆம் ஆண்டில் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் எனும் ஊரில் பிறந்தார்.

உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியை அவர் தனது 17வது வயதிலேயே கற்கத் தொடங்கினார். அவர் 1839ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தமிழ் மொழியில் புலமை பெற்றார்.

திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை இவரது சிறப்பான சேவையாகும்.

இந்தியாவில் 42 ஆண்டுகள் சேவையாற்றியபின் 1881ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்பிய திரு போப், அங்குள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.

இந்நிலையில், திரு போப் பிறந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிறந்த ஊரான பெடெக்கிலேயே கடந்த வாரம் சனிக்கிழமை 15ஆம் தேதி அவரது சிலை திறந்துவைக்கப்பட்டது.

கனடாவில் பிறந்த ஜி.யு.போப் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணியாற்றினார்.
கனடாவில் பிறந்த ஜி.யு.போப் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணியாற்றினார். - படம்: கனடியத் தமிழர் பேரவை

அதுகுறித்துக் கருத்துரைத்த கனடியத் தமிழர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஜி.யு.போப் சிலை திறப்புக் குழுவின் தலைவருமான சிவன் இளங்கோ, “கனடாவில் பிறந்து தமிழுக்கு அரும்பணி ஆற்றிய திரு ஜி.யு.போப்பிற்குத் திருவுருவச்சிலை வைக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

“கடந்த 2020ஆம் ஆண்டிலேயே இதற்குத் திட்டமிட்டபோதும் கொவிட்-19 தொற்றுப் பரவலால் அதற்கு இடையூறு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் நிதி திரட்டியும் மக்கள் அளித்த நன்கொடையைக் கொண்டும் சிலை நிறுவப்பட்டுள்ளது,” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கனடியத் தமிழ் மக்களின் இந்த அரிய முயற்சிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“திருக்குறளை உலகறியச் செய்த பெருமைக்குரியவர் திரு ஜி.யு.போப். அவர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவரது மொழிபெயர்ப்பு உன்னதமான மொழிபெயர்ப்பாக இன்றும் போற்றப்படுகிறது. அவர் பிறந்தகத்திலேயே அவருக்குச் சிலை அமைத்துள்ள கனடியத் தமிழர் பேரவைக்கும் கனடாவாழ் தமிழ் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திரு ஸ்டாலின் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இலக்கிய நூல்களைப் பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகத் திரு ஜி.யு.போப்பின் பெயரில் தமிழக அரசு விருது வழங்கிச் சிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்