சூடுபிடிக்கும் ‘சன்ஸ்கிரீன்’

சூடுபிடிக்கும் ‘சன்ஸ்கிரீன்’

2 mins read
e7c0c4d8-e9a8-4499-8940-c2ca98a93753
அதிகரிக்கும் சன்ஸ்கிரீ்ன மோகம். - படம்: ஐஸ்டாக்ஃபோட்டோ
multi-img1 of 3

ஒரு காலத்தில் சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் சன்ஸ்கிரீன் பசை சாதாரணமான ஒன்றாக இருந்தது. இன்றோ வரவேற்பே வேறு.

கடந்த 15 ஆண்டுகளில் சன்ஸ்கிரீன் பயனீட்டாளர்களின் போக்கு மாறியுள்ளதாகக் கூறுகிறார் பிரபல ‘சூப்பர்ககூப்’ சன்ஸ்கிரீனைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கிய திருவாட்டி ஹாலி தகார்ட்.

முன்பெல்லாம் பலர் வெப்பத்தால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினர்; இப்போது பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு அதைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

சூரிய ஒளியின்கீழ் அதிக நேரம் இருந்தால் சருமத்தில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு கட்டத்துக்கு மேல் சருமப் புற்றுநோய் வரும் அபாயமும் எழும்.

இப்படிப்பட்ட சூழலில் பல்வேறு அம்சங்களைக் கொண்ட சன்ஸ்கிரீனைப் பலர் விரும்புவதாகத் திருவாட்டி தகார்ட் தெரிவித்தார். குறிப்பாக தென்கிழக்காசியர்களுக்கு இது பொருந்தும் என்பதை அவர் சுட்டினார்.

மின்னஞ்சல்வழி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இதைத் தெரிவித்தார்.

சில சன்ஸ்கிரீன் வகைகள் 24 மணிநேரத்துக்கு செயல்படும். இப்படிப்பட்ட சன்ஸ்கிரீன் நாள் முழுவதற்கும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு தரும். சில மணிநேரத்துக்கு ஒரு முறை சருமத்தில் தடவிக்கொள்ளத் தேவையில்லை.

உதாரணமாக பிரிட்டனின் ‘கலிப்சோ சன்’னின் ‘ஒன்ஸ் அ டே சன்’ வகை சன்ஸ்கிரீன் வகைகள் இத்தகைய சருமப் பாதுகாப்பை வழங்குகின்றன.

உட்கொள்ளக்கூடிய சன்ஸ்கிரீன் வகைகளும் இருக்கின்றன. ‘ஃபெர்ன்பிளாக்’ என்ற உணவு வகையைக் கொண்டுள்ளது இந்த சன்ஸ்கிரீன்.

பெரியவர்கள் பெரும்பாலோர் ‘ஃபெர்ன்பிளாக்’கை ஒரு நாளைக்கு 480 மில்லிகிராம் வரை உட்கொள்ளலாம் என்று அண்மையில் வெளியான ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

குளிக்கும்போது பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீன் வகைகளும் உள்ளன. இவை பொதுவாக சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு தரும் அம்சங்களைக் கொண்ட சோப்புகளாக இருக்கும்.

உதாரணமாக, கிளென்ஸ்கின் நிறுவனம் இத்தகைய சன்ஸ்கிரீன் வகைகளை தயாரிக்கிறது.

இவற்றைப் போல் பல வித்தியாசமான சன்ஸ்கிரீன் வகைகள் இந்தக் காலத்தில் வலம் வருகின்றன. அவரவர் விருப்பத்துக்கேற்ப பல வகைகளில் சன்ஸ்கிரீன் தயாரிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்