கொள்ளைநோயைச் சமாளித்தல், அறிவியல்சார் தகவல்கள் பரிணமித்தல், கிருமிப் பரவலில் ‘ஸ்டெம்’ மற்றும் சமூகங்களின் இன்றியமையாத பங்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ‘கோயிங் வைரல்’ என்ற கண்காட்சியை வழங்கி வருகிறது.
கொள்ளைநோயைச் சமாளிப்பது தொடர்பான விழிப்புணர்வை இளையர்களிடையே ஏற்படுத்துவதோடு, இதுபோன்ற நெருக்கடிகள் மீண்டும் வந்தால் எவ்வாறு கையாள்வது என்பது போன்ற கேள்விகளையும் அவர்களின் மனதில் இக்கண்காட்சி எழுப்புகிறது.
அக்கேள்விக்கு விடையாக இளையர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகியவற்றை நோக்கி நகர்த்துவதும் இதன் நோக்கமாக இருக்கிறது.
காணொளிக் கண்காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ள இது, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் காட்சிக்கூடத்தில் திரையிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இக்கண்காட்சி 2024 ஏப்ரல் 5 முதல் 2024 மே 10 வரை சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்திலும், பின்னர் வணிக வளாகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.
மூன்று கருப்பொருள் மண்டலங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி, குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்றுக்காலம் பற்றியும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக ஒருங்கிணைப்பு, சமூக உணர்வு உள்ளிட்டவற்றைப் பற்றியும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயத்தமாவதையும் பரந்த கண்ணோட்டத்தோடு அணுகுகிறது.
வினாடி வினா பாணியில், பங்கேற்பாளர்கள் அனைவரும் பல்வேறு தொற்றுகள் பற்றியும், ‘இன்ஃபோடெமிக்’ எனும் சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற, தவறான தகவல்கள் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது இக்கண்காட்சி.
மேலும், தேசிய நூலக வாரியம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணியாற்றும் வல்லுநர்களின் கருத்துகளும், இக்கண்காட்சிக் குழுவினரின் நேர்காணல் காணொளிகளும் திரையிடப்படுகின்றன.
அறிவியல் நிலைய வாரியத்தின் தலைமை நிர்வாகியும் இணைப் பேராசிரியருமான லிம் டிட் மெங் கூறுகையில், “கொள்ளைநோய் சமாளித்தலில் இதுவரை காணாத முன்னேற்றங்களை நவீனகால அறிவியலும் புத்தாக்கமும் தோற்றுவித்துள்ள முக்கியத் தருணத்தில் இன்று நாம் இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
‘கோயிங் வைரல்’ எனும் இக்கண்காட்சி, உலகளாவிய சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ள காலப்போக்கில் அறிவியல் எவ்வாறு தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதோடு, முன்னேற்றத்திற்கான உந்துசக்தியாக விளங்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்கத் தூண்டுகிறது எனவும் திரு லிம் தெரிவித்தார்.
மேலும், “இந்தக் கண்காட்சி அனைத்து மக்களையும் சென்றடையும் என்றும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்றும் நம்புகிறோம்,” என்றார் அவர்.
இக்கண்காட்சியின் தொடர்ச்சியாக, 2023 ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று ‘ரேஸ் அகைன்ஸ்ட் டைம்’ எனும் தலைப்பில் கொவிட்-19 பெருந்தொற்று, தடுப்பூசிகள், சிகிச்சை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து மொடர்னா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

