சிறுநீர்க்குழாயில் பிரச்சினையை எதிர்நோக்கி வந்த காத்தவராயன் தினகரன், 46, புதிய இயந்திரவியல் சிகிச்சை மூலம் பலனடைந்து உடல் நலத்துடன் காணப்படுகிறார்.
பல காலமாக தனது உடலின் வலது பக்கத்தில் தாங்கமுடியாத வலியை அனுபவித்த அவருக்கு சிறுநீரகத்தில் கல்லும் சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்றும் கண்டறியப்பட்டன.
அதன் காரணமாக அவரது சிறுநீரகச் செயல்பாடும் நாளுக்கு நாள் குன்றத் தொடங்கியது.
இதனால் அவருக்கு சிறுநீரகமும் சிறுநீர்க்குழாயும் சந்திக்கும் இடத்தில் அடைப்பு ஏற்பட ஆரம்பித்தது.
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட, அவரது சிறுநீரகம் நாளடைவில் வீங்கவும் தொடங்கியது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர்கள் இருவர், திரு தினகரனுக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த புதிய முயற்சியைக் கையாண்டு, சென்ற ஆண்டு அவரை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர்.
வழக்கமாக சிறுநீரகத்தில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால், மருத்துவர்கள் திறந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அதில் வயிற்றுப் பகுதியை வெட்டி, அடைப்பை அகற்றி, சிறுநீர்க்குழாயைச் சிறுநீரகத்துடன் இணைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், திரு தினகரனின் மருத்துவர்கள் குறைவான வலியை ஏற்படுத்தும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் சிகிச்சை முறையை முதல்முறையாக மேற்கொண்டனர்.
அதில் மருத்துவர்கள் ‘டா வின்சி’ எனும் அறுவை சிகிச்சை இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
திரு தினகரனின் சிறுநீர்க்குழாய் முதலில் வெட்டப்பட்டது. பின்னர், ‘புக்கால் மியூகோஸா’ எனப்படும் அவரது வாயின் உட்புற திசுக்களை எடுத்து சிறுநீர்க்குழாயில் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை இயந்திரம் அந்த சிகிச்சை முறையை மேற்கொண்டிருந்தாலும் மருத்துவர்கள் இருவரின் கட்டுப்பாட்டில் அது செய்யப்பட்டது.
மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் மெலிசா டே, சிறுநீரகவியல் பிரிவில் ஆலோசகராக உள்ளார்.
மருத்துவமனை எடுத்துள்ள புதிய முயற்சியைப் பற்றி பகிர்ந்த அவர், “நோயாளி வாயின் உட்புற திசுக்களை எடுத்து வேறோர் உறுப்பின் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துவது மிக குறிப்பிடத்தக்க முயற்சி.
“ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் அதை ஏற்கெனவே செய்து வந்துள்ளன. எங்களுக்கு இது ஒரு புதிய மைல்கல்,” என்றார்.
நோயாளிகள் கடினமான, நீண்டநேரம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு செல்வதற்குப் பதிலாக இப்புதிய முயற்சி அவர்களுக்குச் சாதகமாக அமையலாம்.
பொதுவாக ஆறு மணி நேரம் செய்யப்படும் அறுவை சிகிச்சை, திரு தினகரனுக்கு நான்கு மணி நேரத்திலேயே முடிந்தது.
அறுவை சிகிச்சை முடிந்து சில நாள்கள் ஓய்வெடுத்த பிறகு வழக்கம்போல வேலைக்குச் செல்ல அவர் தொடங்கினார்.
திரு தினகரனுக்கு பிறக்கும்போதே அந்நோய் கண்டறியப்பட்டு அவருக்கு 21 வயதில் ஏற்கெனவே அதற்காக இந்தியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் அவரின் வயிற்றுப் பகுதியில் 35 தையல்கள் போடப்பட்டன.
வேலைக்காக 2001ல் சிங்கப்பூருக்கு வந்த திரு தினகரன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நோய் தனக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஈராண்டுகளுக்கு முன்பு அறிகுறிகள் மீண்டும் தென்பட, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் சென்றார்.
திரு தினகரனுக்கு முடிந்தளவு திறந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் என்பதில் மருத்துவர்கள் திண்ணமாக இருந்தனர்.
ஆனால், வேறொரு சிகிச்சை முறையை மேற்கொண்டபோது சிகிச்சை பலனளிக்காமல் போனது.
அதன் காரணமாக மருத்துவர்கள் இயந்திரவியல் சிகிச்சையை மேற்கொள்ள எண்ணம் கொண்டனர்.
அதைப் பற்றி முதலில் திரு தினகரன் கேள்விப்பட்டபோது, “நான் இதுவரை இயந்திரவியல் சிகிச்சை பற்றி அறிந்ததில்லை. மருத்துவர்கள் விளக்கியபோது நான் மிகவும் தயக்கமாகவும் நம்பிக்கை குறைவாகவும் இருந்தேன்.
“மருத்துவர்கள் முதல்முறையாக அதை மேற்கொள்வதால் எனக்குப் பதற்றமாக இருந்தது,” என்றார் .
இன்று அந்த சிகிச்சை முடிந்து ஓராண்டுக்குமேல் ஆகிவிட்டது. தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் திரு தினகரன், “மிகவும் மனநிறைவாக உள்ளது. மருத்துவர்கள் என்னைக் கண்ணும் கருத்துமாக நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பார்த்துக்கொண்டனர்,” என இன்முகத்துடன் கூறினார்.
திரு தினகரனின் மனைவி அறிவுநிலா, “சிங்கப்பூரில் மருத்துவர்களைப் பார்த்த பிறகு வேறொரு சிகிச்சையை மேற்கொண்டு அது பலனளிக்காதபோது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
“கணவரின் நோய் எப்போது குணமாகும் என்று நாங்கள் நினைக்காத தருணமே இல்லை. இன்று மிகவும் நிம்மதியாக உள்ளது,” என்றார்.

