தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறைந்த எழுத்தாளர்களை நினைவுகூர்ந்த ‘நினைவின் தடங்கள்’

2 mins read
56652f07-270d-418a-9877-b587d3f8fa9a
மறைந்த எழுத்தாளர்களைப் பற்றி உரையாற்றியவர்களுடன் தேசிய நூலக வாரியத்தின் துணை இயக்குநரும் தலைமை நூலகருமான அழகிய பாண்டியன் (வலக்கோடி), தேசிய நூலக வாரிய தமிழ் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் அருண் மகிழ்நன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இவ்வாண்டு அல்லது சென்ற ஆண்டு இறுதியில் மறைந்த ஒன்பது தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்ந்த ‘நினைவின் தடங்கள்’ நிகழ்ச்சி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்றது.

2017 முதல் நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சி, கொவிட்-19 பெருந்தொற்றின்போது தற்காலிகமாக இணையவழி நடைபெற்றது. இவ்வாண்டு அது நேரடியாக நடைபெற்றது.

பெரும்பாலும் மலேசிய, தமிழ்நாட்டு எழுத்தாளர்களே நினைவுகூரப்படும் இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு இடம்பெற்ற ஒன்பது எழுத்தாளர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் சிங்கப்பூரைச் சார்ந்தவர்கள்.

ஆ.பழனியப்பன், ந.பாலபாஸ்கரன், சை.பீர்.முஹம்மது, ரெ.சோமசுந்தரம், கலைச்செம்மல் ராம். நாராயணசாமி, பாத்தூறல் முத்துமாணிக்கம், எம்.கே.நாராயணன், பாத்தென்றல் முருகடியான், பாவலர் முல்லைவாணன் ஆகியோர் அந்த ஒன்பது எழுத்தாளர்கள்.

கலைச்செம்மல் ராம். நாராயணசாமி, இறக்கும் தருணம் வரை தன் சிறுகதைத் தொகுப்பைத் தேசிய நூலக வாரியத்தில் வெளியிடும் ஆசையை மனதில் வைத்திருந்தார்.

அவரது ஆசை இந்நிகழ்ச்சியில் நிறைவேறியது. நூல் வெளியானதோடு, வந்திருந்தோருக்கு இலவசப் பிரதிகளும் வழங்கப்பட்டன.

கலைச்செம்மல் ராம் நாராயணசாமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சியில் அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இலவசப் பிரதிகள் வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டன.
கலைச்செம்மல் ராம் நாராயணசாமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சியில் அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இலவசப் பிரதிகள் வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டன. - படம்: தேசிய நூலக வாரியம்

நிகழ்ச்சிக்கு மறைந்த எழுத்தாளர்களின் குடும்பத்தினரும் அன்பினாலும் எழுத்தாலும் இணைந்த கலைக் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

ஒவ்வோர் எழுத்தாளரைப் பற்றியும் வழங்கப்பட்ட ஏழு நிமிடப் படைப்புகள், எழுத்தாளரின் சிறப்புகளை மக்களின் நினைவலைகளில் எழச் செய்தன.

அவ்வாறு தன் தந்தை கலைச்செம்மல் ராம். நாராயணசாமியைப் பற்றிப் பகிர்ந்தார் அவருடைய மகள் தமிழ்மலர்.

தன் தந்தை கலைச்செம்மல் ராம். நாராயணசாமியைப் பற்றிப் பகிர்ந்த அவருடைய மகள் தமிழ்மலர்.
தன் தந்தை கலைச்செம்மல் ராம். நாராயணசாமியைப் பற்றிப் பகிர்ந்த அவருடைய மகள் தமிழ்மலர். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

“என் தந்தை வரலாற்றைப் பற்றி, தமிழ்மொழிக்குப் பங்காற்றியுள்ளோரைப் பற்றிப் பேசும்போது பண்பாட்டில் அவர் கொண்டிருந்த பற்றையும் ஆழ்ந்த அறிவையும் கண்டு நான் வியந்தேன்.

“17 வயதில் சிங்கப்பூர் வந்தவர், அத்தனை சவால்களையும் கடந்து தன் எழுத்தார்வத்தைப் பின்தொடர்ந்தது எனக்கும் என் கனவுகளை அடைய வழிகாட்டியாக அமைந்தது,” என தன் தந்தையுடனான சிறப்புத் தருணங்களை தமிழ்மலர் நினைவுகூர்ந்தார்.

நிகழ்ச்சி நெறியாளரான ஜெயசுதா சமுத்திரன், “இது மறைந்த எழுத்தாளர்களுக்கான நினைவஞ்சலியாக இருந்தாலும் அவர்களது சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகவும் இருந்தது,” என்றார்.

அவர்கள் வாழ்ந்தபோதே அவர்களது படைப்புகளை மேலும் பரவலாக மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார் ஜெயசுதா.

தன்னிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராக திரு ரெ.சோமசுந்தரத்தை அவர் சுட்டினார்.

“நான் பகுதிநேர வானொலிப் படைப்பாளராக இருந்தபோது எனக்கு அவர் உச்சரிப்புப் பயிற்சி வழங்கினார். அவரிடம் கற்ற உத்திகள் இன்றுவரை எனக்குப் பயனளிக்கின்றன,” என்றார் ஜெயசுதா.

மொழிபெயர்ப்பு நிபுணரான திரு பழனியப்பனின் ‘சொல்வளக் கையேடு’ வெளியீட்டு விழாவில் நெறியாளராகச் செயலாற்றிய ஜெயசுதா, திரு பழனியப்பனை “நல்ல மனிதர் என்பதற்கும் அப்பால், மிக அருமையான செயல்களைச் செய்தவர்,” என்று பாராட்டினார்.

அச்சிறப்புகளைப் பேராசிரியர் சிவகுமரன் பட்டியலிட்ட விதத்தையும் மெச்சினார் ஜெயசுதா.

“மறைந்த எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றி செவியால் கேட்பதுடன் நிறுத்திவிடாமல், மக்கள் படித்தும் பயன்பெறவேண்டும்.

“அவர்களது நூல்களை தேசிய நூலக வாரியம் சேகரித்துள்ளது. அவற்றை மக்கள் இரவல் பெறலாம்,” என்றார் தேசிய நூலக வாரிய தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் நூலகர் ரேணு சிவா.

குறிப்புச் சொற்கள்