கம்பன் மொழிபேசும் ‘சொ.சொ.மீ. பிள்ளைத்தமிழ்’ நூல்

2 mins read
6fe14df4-4cb7-4a53-936f-24c4aea168a0
மாணவர் நிதி திரட்டுக்கான நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய சொ. சொ. மீனாட்சி சுந்தரம். - படம்: அரவிந்தன்

எட்டு ஆண்டுகளுக்குமுன் டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவிலின் மூலத் திருவுருவ இறைவியைப் பற்றி பிள்ளைத்தமிழ்ப் பாடியதை நினைவுகூர்ந்தார் இலக்கியச் சொற்பொழிவாளரும் எழுத்தாளருமான சொ. சொ. மீனாட்சி சுந்தரம், 81.

‘மதுரைப் பொற்­கி­ழிக் கவிஞர்’ என்று அழைக்கப்படும் இவர், அதே ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 7) இவரைப் பற்றிய பிள்ளைத்தமிழ்க் கவிதை நூல் வெளியீடு இடம்பெற்றதை எண்ணி நெகிழ்ச்சி அடைந்தார்.

கம்ப ராமாயணத்தையும் சைவ சமய இலக்கியங்களையும் கற்றுணர்ந்த அ.கி. வரதராஜனின் கைவண்ணத்தில் ‘சொ. சொ. மீ. சுந்தரம் பிள்ளைத்தமிழ்’ நூலுடன் ‘கம்பனின் சீதோபதேசம்’, ‘கம்பனில் சூளுரைகள்’, ‘கம்பனின் பரதன் கண்டவன் வரதன்’ ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில் $20,000 காசோலையை ஆலயத்திற்கு வழங்கினார் திரு வரதராஜன், 80.

நூல் விற்பனைத் தொகை முழுவதும் வெள்ளிக்கு வெள்ளி ஈடுகட்டப்பட்டு, இருமடங்காக ஆலயத்தின் கல்விக் கொடை நிதிக்கு வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

(இடமிருந்து) நிகழ்ச்சி மேடையில் திருவாளர்கள் இராம. கருணாநிதி, சொ. சொ. மீனாட்சி சுந்தரம், அ.கி.வரதராஜன், வி.ஆர். அழகப்பன்.
(இடமிருந்து) நிகழ்ச்சி மேடையில் திருவாளர்கள் இராம. கருணாநிதி, சொ. சொ. மீனாட்சி சுந்தரம், அ.கி.வரதராஜன், வி.ஆர். அழகப்பன். - படம்: அரவிந்தன்

தெய்வங்களை அல்லது பெருமைக்குரிய மனிதர்களைக் குழந்தையாகப் பாவித்து குழந்தைக்குரிய பத்துப் பருவங்களை விவரித்து கவிதை பாடுவது பிள்ளைத்தமிழ் நூலாகும்.

திரு மீனாட்சி சுந்தரத்தைப் பற்றிய பிள்ளைத்தமிழில் கம்ப ராமாயணத்து மொழிநடை ஆங்காங்கே காணப்படுகிறது.

புலவரும் பாட்டுடைத் தலைவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து மரியாதை செய்யும் அரிய நிகழ்வை 250க்கும் அதிகமானோர் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தின் பன்னோக்கு அரங்கில் கண்டு ரசித்தனர்.

திரு அ.கி.வ. எழுதிய நூல்களில், தம்மைப் பற்றிய நூல் திருஷ்டிக்காகச் செய்திருக்கிறார் எனச் சொல்லி திரு மீனாட்சி சுந்தரம் அரங்கத்தினரைச் சிரிக்க வைத்தார்.

“உ.வே.சா பற்றி நூல் எழுதியவர்; லீ குவான் யூ பற்றி எழுதியவர்; கம்பர் பற்றிய 15 நூல்களாக இப்படி எழுதிய அ.கி.வ. என்னையும் பாடுவாரேயானால் அதுதான் மோதிரக் கையால் குட்டுப்படுவது,” என்று தன்னடக்கத்தோடு கூறினார் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.

இதற்குமுன், கடந்த 2016ஆம் ஆண்டு திரு அ.கி.வரதராஜன், திரு லீ குவான் யூவைப் பற்றி எழுதி பிள்ளைத்தமிழ் வகை கவிதை நூலை வெளியிட்டிருந்தார்

குறிப்புச் சொற்கள்