வெண்ணெய்ப் பழத்தின் நன்மைகள்

3 mins read
f8417a3f-5453-47db-b60f-a4edca7d4315
அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப் பழம். - படம்: ஊடகம்

‘அவகாடோ’ எனப்படும் வெண்ணெய்ப் பழம் பல சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான பழம். அதில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, 20க்கும் மேற்பட்ட வைட்டமின்கள், தாது ஆகியவை நிறைந்துள்ளது.

வெண்ணெய்ப் பழத்தை அடிக்கடி உட்கொள்பவர்களின் உடலில் அதை சாப்பிடாதவர்களைவிட, அதிகளவில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒரு நாளுக்குத் தேவையான மெக்னீசியம் அளவும் தாது அளவும் இப்பழத்தில் அடங்கியுள்ளது. வெண்ணெய்ப் பழத்தின் பயன்களையும் அதை எவ்வாறு நம் உணவில் சேர்த்துகொள்ளலாம் என்பதற்கான தகவல்களையும் அறிந்து மக்கள் அதை தங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளலாம்.

வெண்ணெய்ப் பழங்களைத் தனியாக சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்க்கலாம். இனிப்பு உணவு வகைகள் உட்பட அவற்றை அனுபவிக்கப் பல வழிகள் உள்ளன.

தெவிட்டிய நிலை அதிகரிப்பு

ஆரோக்கியமான கொழுப்பை உண்பது வயிற்றைக் காலியாக்க உதவும். வழக்கத்தைவிட நீண்ட நேரம் ஒருவரின் வயிற்றை முழுதாக வைத்திருக்கவும் பசியை தாமதப்படுத்தவும் இது உதவும். உணவில் வெண்ணெய்ப் பழத்தைச் சேர்ப்பதால் ஒருவருக்குக் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் வரை பசிக்காது என்று நம்பப்படுகிறது.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திட

தாவர அடிப்படையிலான கொழுப்பு சத்து வெண்ணெய்ப் பழத்தில் உள்ளது. வெண்ணெய்ப் பழத்தைத் தொடர்ந்து உண்பதால் ஒருவர் குறைவான கலோரிகள் அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட முயல்வர். அதனால் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும்.

இதயத்திற்கு சிறந்த மருந்து

வெண்ணெய்ப் பழம் நம் இதயத்திற்கு ஒரு சிறந்த துணை. ஐந்து வாரங்களுக்கு இடைவிடாமல் அன்றாடம் ஒரு வெண்ணெய்ப் பழம் சாப்பிட்டு வந்தால் அது நம் உடலில் இருக்கும் தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பளவைக் குறைக்க உதவும். வெண்ணெய்ப் பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகம் இருப்பதால் அது ஒருவரின் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மனநிறைவு

ஒருவருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருந்தால் வெண்ணெய்ப் பழம் சாப்பிடுவதன் மூலம் அவர் உணவு உண்ட பின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு விரைவில் உயராமல் பாதுகாக்க முடியும். வெண்ணெய்ப் பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி அடங்கியிருக்கும் கொழுப்பளவும் குறையும்.

தாது அளவை அதிகரிக்க

சாப்பிடும் நேரத்தில் வெண்ணெய்ப் பழம் உட்கொண்டு வந்தால் நம் உடலில் அதிக வைட்டமின்களும் தாதுவும் சென்றடையும். வெண்ணெய்ப் பழத்துடன் தக்காளி சாஸ் மற்றும் கேரட் சேர்த்து சாப்பிட்டால் நம் உடலில் வைட்டமின் ஏ விரைவில் கிடைக்கும். அது சருமம், கண் பார்வை, நோய் எதிர்ப்பாற்றல் ஆகியவற்றுக்கு மெருகூட்டும்.

ஆரோக்கியமான செரிமானம்

உடலில் இருக்கும் செரிமானப் பாதையில் உள்ள நுண்ணுயிரிகளை வெண்ணெய்ப் பழம் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. செரிமானப் பாதையில் இருக்கும் நுண்ணுயிரிகள் ஆரோக்கியமாக இருந்தால் அது ஒருவரின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து நாள்பட்ட நோய்களிலிருந்து தற்காக்கும்.

மூளைச் செயலாற்றலை அதிகரிக்கும்

வெண்ணெய்ப் பழத்தில் லுடீன் எனும் தாவர வேதியியல் உள்ளது. லுடீன் ஒருவரின் மூளையிலும் கண்களிலும் உள்ளது. வயதானவர்கள் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து தினமும் ஒரு வெண்ணெய்ப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நினைவக செயல்பாடு அதிகமாகும்.

கண்களுக்குப் பாதுகாப்பு

லுடீன் நம் கண்களில் அதிகம் இருப்பதால் அது பார்வையை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆறு மாதங்களுக்கு இடைவிடாமல் அன்றாடம் ஒரு வெண்ணெய்ப் பழம் சாப்பிடுவதால் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதைவிட நம் கண்கள் விரைவில் ஆரோக்கியம் பெரும்.

புற்றுநோய் எதிர்ப்பாற்றல்

வெண்ணெய்ப் பழத்தில் அதிகளவில் சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது புற்றுநோய் அணுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. குறிப்பாக வாய்சார்ந்த மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்சுரப்பிப் (ப்ரோஸ்டேட்) புற்றுநோய் அணுக்களை அழிக்கும் தன்மை வெண்ணெய்ப் பழத்திற்கு உண்டு.

குறிப்புச் சொற்கள்