கவிஞர் பிரியா கணேசனின் சிறுவர் நூல்கள் வெளியீடு

2 mins read
e4f215dc-d1fe-4bd2-a2e1-59d8ab30b6f0
கவிஞர் பிரியா கணேசன், தம் கணவர் கணேசன் மற்றும் மகன்கள் விஷ்ணு, விக்னேஷ் ஆகியோருடன் இணைந்து நூல்களை வெளியிட, AKT நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் ராணி கண்ணாவும் மூத்த பயிற்றுவிப்பாளர் கலா ராஜேஷ் கண்ணனும் அவற்றைப் பெற்றுக்கொண்டனர். - படம்: ஜோசப் சேவியர்
multi-img1 of 2

கவிஞர் பிரியா கணேசன் சிறுவர்களுக்காக எழுதிய நான்கு நூல்கள் அண்மையில் வெளியீடு கண்டன.

சிறுவர்களுக்கான யாசிங்கா (கதைப்பாடல்), மலையைத் தாண்டிப் போகிறேன் (கதையும் பாடலும்), அவசரக்காரமுயல் (கதை), பால்மீசை (இசைப்பாடல்கள் தொகுப்பு) ஆகிய நான்கு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 3ஆம் தேதியன்று தேசிய நூலகத்தின் ‘தி பாட்’ அரங்கில் இடம்பெற்றது.

கவிஞர் கங்கா நெறியாளராகச் செயல்பட, கவிஞர் சுபா வரவேற்புரை ஆற்றினார்.

சிங்கப்பூர் அறிவியல் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் முனைவர் க. காவேரி, சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

“தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதற்காகப் பழமொழிகளை மனப்பாடம் செய்யும் இச்சூழலில் சிறுவர்களுக்கு இந்தக் கதைகள் மூலமும் வண்ணமயமான படங்கள் மூலமாகவும் பழமொழிகளை எளிதாக அறிமுகம் செய்துள்ளார் பிரியா கணேசன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் கதைகளைக் கொண்டு சேர்ப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார் கிரியேட்டிவ் ஹேன்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் கதை நேரம் இணையப்பக்கத்தின் உரிமையாளருமான திரு ஜெகன்னாத் ராமானுஜம்.

கவிஞர் பிரியா கணேசனின் கணவர் கணேசன் மற்றும் மகன்கள் விஷ்ணு, விக்னேஷ் ஆகியோர் இணைந்து நூல்களை வெளியிட, AKT நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான ராணி கண்ணாவும் மூத்த பயிற்றுவிப்பாளர் கலா ராஜேஷ் கண்ணனும் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

கவிஞர் புதுமைத்தேனீ மா. அன்பழகன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நூல்களை வாங்க விரும்புவோர் mmviyancreations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்