சிங்கப்பூரர்களின் முழுமையான மகிழ்ச்சி, நலனுக்கான மதிப்பீடு 61.7 என்கிறது ஏஐஏ நிறுவனம் வெளியிட்ட அண்மைய அறிக்கை.
சிங்கப்பூர் மக்களின் உடல் நலன், மன நலன், நிதி நலன், சமூக நலன், ஆன்மநலன் (Spiritual Wellness) ஆகியவை குறித்த விரிவான ஆய்வை வெளியிட்டுள்ளது ஏஐஏ நிறுவனம்.
சிங்கப்பூரர்கள் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், வயது ஏற்படுத்தும் தாக்கம், நிதி மேலாண்மை வழிமுறைகள் எனப் பல கூறுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பதில் அளித்தவர்களில் சரிபாதியினர் மகிழ்ச்சியான, முழுமையான வாழ்வுக்கு அடிப்படை நல்ல உடல் ஆரோக்கியமும், தன்னிறைவுள்ள நிதிச் சுதந்திரமும் என்று கூறினர். ஐவரில் இருவர், அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவதும், அவர்களை மகிழ்வாக வைத்திருப்பதும், பல புதுமைகளைத் தேடிச் செல்வதும் வாழ்வை முழுமையாக்கும் என்று சொன்னார்கள்.
நோயற்ற வாழ்வை அமைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சோர்வின்றிப் பணியாற்றவும், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர் 66 விழுக்காட்டினர். 61 விழுக்காட்டினர் மன அழுத்தத்தைச் சமாளிக்கவும், முக்கிய முடிவுகளைச் சரியாக எடுக்கவும் மனதை மகிழ்வாக வைத்திருக்க முற்படுகின்றனர். 53 விழுக்காட்டினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நீண்டகால நிதி இலக்குகளைத் திட்டமிடுவதாகச் சொல்கின்றனர்.
மூவரில் இருவர் தங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும் என அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பரபரப்பான பணி, குடும்பச் சூழலினால் சுய கவனிப்புக்காக நேரத்தை ஒதுக்குவதில் சவால் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மன அமைதிக்காகப் பயணம் மேற்கொள்வது, சரிவிகித உணவு உட்கொள்வது, திறன் வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது, சுவாரசியமான பொழுதுபோக்குப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது, தியானம், மூச்சுப் பயிற்சி செய்வது எனப் பலவற்றையும் அவர்கள் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது இந்த ஆய்வு.
தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தேவையான இணை மருந்துகள் உட்கொள்வது, மன அழுத்தம் ஏற்பட்டால் உரிய உதவியை நாடுவது ஆகியவற்றை ஏறத்தாழ 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் மேற்கொள்வதாக இந்த ஆய்வு கூறுகிறது.
நிதி நலனுக்கு, முறையான நிதி மேலாண்மை செய்வது சிறந்த வழி என சிங்கப்பூரர்கள் கருதுவதாகவும், 51 விழுக்காட்டினர் சொந்தமாகத் தங்கள் நிதித் திட்டத்தை வகுத்துக் கொள்வதாகவும் ஆய்வு கூறுகிறது. மீதமுள்ளோர் நிதி ஆலோசகர்கள், வங்கித் துறையினர், நிதி மேலாண்மையில் அனுபவம் உள்ள நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஐவரில் இருவர் எதிர்பாராதச் செலவுகள் வந்தால் சிரமம் ஏற்படுவதாகவும், நால்வரில் ஒருவர் செலவுகளைக் கண்காணிக்க இயலவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு சராசரி சிங்கப்பூரர்களிடமும் உயர் நிகர மதிப்பு உள்ளோரிடமும் மேற்கொள்ளப்பட்டது.
மாதம் 40,000 வெள்ளிக்கு மேல் குடும்ப வருமானம் அல்லது ஒரு மில்லியன் வெள்ளிக்கும் மேலான வைப்பு நிதி கொண்டோரில் ஏறத்தாழ 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் உடல், மன, நிதி நலனை சீராகப் பராமரிக்க முடிவதாகச் சொல்கின்றனர்.