தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூளை, நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கும் பருவநிலை மாற்றம்

2 mins read
c19e4a3c-84a9-402c-b818-0e6cc704e203
பருவநிலை மாற்றத்தின் தற்போதைய, எதிர்காலத் தாக்கங்களைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. - படம்: பிக்சாபே

மறதி நோய், வலிப்பு நோய், பக்கவாதம், மன அழுத்தம் உள்ளிட்ட பல மூளை, நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்குச் சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும் வழிவகுக்கும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழக ‘குயின் ஸ்கொயர்’ நரம்பியல் துறைப் பேராசிரியர் சஞ்சய் சிசோடியா தலைமையிலான குழு, உலகெங்கிலும் கடந்த 1968ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை வெளியிடப்பட்ட 332 ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்து நரம்பியல் நோய்களில் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கண்டறிந்துள்ளது.

உடலின் வெப்பநிலை எதிர்பாராத மாறுதல்களுக்கு உட்படுவது இதற்கு முக்கியக் காரணியாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளை சரிவரச் செயல்பட, சீரான வெப்பநிலை வரம்புக்குள் இருக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறான வெப்பத்துக்கும், ஈரப்பதத்துக்கும் மாறி மாறி ஆளாகும்போது, சமநிலைக்கு வர மூளை போராடத் தொடங்கும். அப்போராட்டம் தீவிரமடையும் நிலையில் மூளை செயலிழக்கத் தொடங்குகிறது. இதனால் மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை பாதிப்புக்குள்ளாவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

வெப்பநிலை மாற்றம் தூக்கச் சுழற்சியை சீர்குலைப்பதை இவ்வாய்வு கோடிட்டுக் காட்டுகிறது. மோசமான தூக்கம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பக்கவாதம், ஒற்றைத்தலைவலி, மூளைக்காய்ச்சல், ஸ்கிசோஃப்ரினியா எனும் மனநலப் பிரச்சினை உள்ளிட்ட 19 வெவ்வேறுவகை நரம்பு மண்டல நோய்களை ஆராய்ந்த இந்த ஆய்வு, வெப்பநிலை மாற்றம் இந்நோய்களின் அறிகுறிகளை மோசமடையச் செய்வதாகக் கூறியுள்ளது.

இயல்பாகவே நரம்பு சம்பந்தப்பட்ட சில நோய்கள் உடலின் வெப்பநிலையைச் சீர்குலைப்பதையும் அதற்கான மருந்துகள் உடலின் எதிர்ப்பாற்றலைக் குறைப்பதையும் சுட்டிக்காட்டிய இந்த ஆய்வு, வெளிப்புற வெப்பநிலையின் ஒழுங்குமுறைச் சீர்கேடு, அந்நோய்ச் சிக்கலை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து, சுற்றுப்புற வெப்பநிலை மாற்றத்தினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கவேண்டியுள்ள விகிதமும் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் நேரும் எதிர்பாராத அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்துலக அளவில் இதன் தொடர்பிலான ஆய்வுகளை ஊக்குவிக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உத்திகளைக் கண்டறியும் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினர் ஆய்வுக் குழுவினர்.

குறிப்புச் சொற்கள்