தனது 58ஆவது வயதில் முதல் முறை இதய நோய்க்கு ஆளாகித் தொடர்ந்து இரு மாரடைப்புகளைச் சந்தித்தவர் லோகதாசு, 71.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதிலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் தீவிரம் காட்டாதது முக்கியக் காரணம் என்றார் அவர்.
ரத்தத்தில் அதிக கொழுப்பின் காரணமாக ஏற்பட்ட மூன்று அடைப்புகளில் இரண்டு அடைப்புகளுக்குக் கடந்த 2011ஆம் ஆண்டு ‘அஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை பெற்றார்.
தெடர்ந்து சில மாதங்கள் உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையைச் சீராக மாற்றிக்கொண்டார்.
எனினும் அவருக்கு, 2013ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு ‘பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன்’ எனும் இதய அடைப்புக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணவு, மருந்துக் கட்டுப்பாட்டில் இருந்த அவர், நாளடைவில் ஏற்பட்ட அலட்சிப் போக்கால் 2018ஆம் ஆண்டு மற்றொரு மாரடைப்புக்கு ஆளானார்.
அதன் பின்னர் தனது வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் இதய அறநிறுவன மையத்தின் உதவியுடன் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறார். தொடர்ந்து அடுத்தவர்களும் மன அழுத்தத்தைக் குறைத்து, உணவுக்கட்டுப்பாடு, உடல் நலனில் அக்கறை செலுத்தும்படி பரிந்துரைக்கிறார்.
இதய நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்னர் கவனமாக இருந்தாலும் நாளடைவில் அத்தீவிரம் குறைந்து போவதைப் பரவலாகக் காண முடிகிறது என்றும், இது மீண்டும் மாரடைப்பு ஏற்படவும், இதய நோய் தீவிரமடையவும் காரணமாக இருக்கலாம் எனவும் எச்சரித்தார் இதய நோய் நிபுணர் பினாகின் வி பரேக்.
தொடர்புடைய செய்திகள்
தவிர பொதுவான ஆபத்துக்குக் காரணி நோய்களின் மருந்துகள், சிகிச்சைகளைச் சரியான முறையில் பின்பற்றாமல் புறக்கணிப்பதும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
மாரடைப்புக் காரணிகள்
குறிப்பாக, இந்திய சமூகத்தினர் சராசரியைவிட 1.2 முதல் 1.5 மடங்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அதற்கு இந்தியர்களின் உணவுப் பழக்கம் தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றும் சொன்னார் மருத்துவர் பரேக்.
குறைவான உடற்பயிற்சி, தூக்கச் சுழற்சி பாதிப்பு, மன அழுத்தம், தலைமுறையாக வரும் இதய நோய் என மாரடைப்புக்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதையும் கோடிட்டுக் காட்டினார் பரேக்.
இதய நோய் அறிகுறிகள்
இரைப்பை, குடல், உணவுக் குழாய்ப் புண், வாயு உள்ளிட்ட பிரச்சினைகளின் அறிகுறிகளுக்கும் மாரடைப்பின் அறிகுறிகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார் பரேக்.
குறிப்பாக, இந்திய சமூகத்தினரிடம் இவ்வகைப் பிரச்சினைகள் பரவலாகக் காணப்படுவதால், பிற பிரச்சினைகளை மாரடைப்பு எனக் கருதி பயம் கொள்வதும், மாரடைப்பைப் பிற நோயாக இருக்கலாம் என எண்ணிப் புறக்கணிப்பதையும் காண முடிகிறது என்றார்.
பொதுவாக மூச்சிரைப்பு, நெஞ்செரிச்சல், வலி ஆகியவை பல நோய்களுக்கு அறிகுறியாக இருந்தாலும், நெஞ்சுப் பகுதியில் சுமை வைத்தாற்போன்ற உணர்வும் அழுத்தமும் வலி தோள்பட்டை பகுதிக்குப் பரவினாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்றார் மருத்துவர் ப்ரேக்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வலி உணர்த்தும் நரம்பு மண்டலம் வலுவிழந்து, வலி தெரியாது என்றும், அவர்கள் அதிக வியர்வை, களைப்பு, நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
லேசான அறிகுறிகளுடன் மாரடைப்பாக இருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்படுபவர்கள், உடல் சாய்வு மேற்கொள்ளுதல், நடப்பது ஆகியவை அறிகுறிகளைக் குறைக்கிறதா அதிகப்படுத்துகிறதா எனக் கவனிக்க வேண்டும் என ஆலோசனை கூறுகிறார்.
நடந்தால் அறிகுறிகள் அதிகமாவது போலத் தோன்றினால் அது இதயம் தொடர்பானதாக இருக்கலாம் எனவும், மருத்துவரை நாட வேண்டும் என்றும் சொன்னார் மருத்துவர் பரேக்.
இதய நோய்த் தடுப்பு வெள்ளை அறிக்கை
சிங்கப்பூர் இதய அறநிறுவனம், சிங்கப்பூர் இதயநல சங்கம், மருத்துவப் பயிற்சிக்கழகம் இணைந்து இதய நோய்களைத் தடுக்கவும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்கும் உரிய உத்திகளைப் பரிந்துரைக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதய நோய்கள் அனைத்துலக அளவில் ஏற்படும் இறப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
சராசரியாக ஆண்டொன்றுக்கு 17.9 மில்லியன் பேரின் உயிரிழப்புக்கு இதய நோய் வழிவகுக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
சிங்கப்பூரில் கடந்த 2011ல் 8,014ஆக இருந்த மாரடைப்பு எண்ணிக்கை 2021இல் 12,403ஆக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் மாரடைப்புப் பதிவேட்டின் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூரில் வயது தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் (age-standardised mortality rate) கணிசமாகக் குறைந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவுடன் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறது அந்த அறிக்கை.
மாரடைப்பினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்தாலும் உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், கொழுப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட இதயநோய்க் காரணிகள் அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனக் கணித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்த இதய நோய்க் காரணிகளை முதன்மை நிலையில் சரிவர நிர்வகிக்கப் பொது மருந்தகங்களுக்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்கிறது அந்த வெள்ளை அறிக்கை.
இதய நோய்க்கு வழிவகுக்கும் ஐந்து காரணிகளைக் கட்டுப்படுத்தும் எட்டு வழிமுறைகளையும் இந்த அறிக்கைப் பரிந்துரைக்கிறது. இதய நோய் குறித்த தவறான எண்ணங்களை மாற்றி, போலியான தகவல் பரவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிக்கை வலியுறுத்துகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சைக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான மேம்பட்ட ஆதரவு அளிக்கவும் உரிய அணுகுமுறையை முன்மொழிந்துள்ளது இந்த வெள்ளை அறிக்கை.
பொதுவாக, இதய சிகிச்சை மேற்கொள்பவர்கள் அடிக்கடி இதய நோய் நிபுணர்களைச் சந்திப்பதை விட தங்களுக்குப் பழக்கமுள்ள பொது மருந்தகத்தை நாட விரும்புவதால், அம்மருந்தகங்களுக்கு ஆதரவளிப்பது வரவேற்கத்தக்கது என்றார் மருத்துவர் பரேக்.
மேலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை இதய நோய்க் கண்ணோட்டத்தில் அணுக இந்த ஆதரவு வழிவகுக்கும் என்றும் இதனால் மாரடைப்பின் விகிதம் குறைய அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
அதிகரிக்கும் உடற்பருமன் பிரச்சினைகள், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்த வெள்ளை அறிக்கை வெளியிட முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டார் இந்த வெள்ளை அறிக்கை தயாரிப்புக் குழுவில் பங்காற்றிய மருத்துவர் பேராசிரியர் ஜாக் டான். அறிக்கையைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களுக்கான கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அமர்வுகளும் நடத்தப்படும் என்றார்.
இந்நோய்த்தடுப்பு உத்திகள் மூலம் மாற்றம் ஏற்படக் காலதாமதம் ஆகுமென்றாலும் சிங்கப்பூர் இதய அறநிறுவனம் தொடர்ந்து மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான உரையாடல்களை அதிகரித்து, இதய நோய்த் தடுப்புக்கும் பாதிக்கப்பட்டோர் இரண்டாம் முறையாக மாரடைப்பைச் சந்திக்காமல் இருக்கவும் வேண்டியவற்றைச் செய்யும் என்றும் சொன்னார்.
இதய நோய்த் தடுப்பு, சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு
நீரிழிவு, கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் என எவ்வித நோயும் இல்லாமல் மது, புகைப் பழக்கங்கள் இல்லாமல் குடும்பத்தில் இதய நோயாளிகள் இல்லாமல் குறிப்பிடத்தக்க உடல் உழைப்பு இருந்தும் தனது 57ஆவது வயதில் மாரடைப்புக்கு ஆளானார் ரெங்கராஜன் பிரேம்குமார்.
தற்போது 65 வயதுடைய இவர், உணவுப் பழக்கம், உரிய உடற்பயிற்சி, மருந்துகள் என அனைத்தையும் சரிவர கடைப்பிடித்து வருவதால் மாரடைப்புக்குப் பின் எட்டாண்டுகளாக எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்வதாகச் சொன்னார்.
வயது வேறுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். அதைத் தடுக்கவும், மாரடைப்புக்குப் பின் தேவைப்படுபவற்றையும் முறையாகக் கடைப்பிடித்தால் மாரடைப்பு குறித்து கவலையின்றி வாழலாம் என்றும் கூறினார்.
பொதுவாக, 65 வயதைத் தாண்டிய பெண்களையும் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் இதய பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்துவது வழக்கம்.
ஆனால் பரவலாக 40 வயதை அடைந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இதயத்தைப் பரிசோதித்துக் கொள்வது சிறந்தது என்றார். குறிப்பாக, நெருங்கிய உறவுகளில் இதய நோயாளிகள் இருந்தால் அவர்கள் 30 வயதிலிருந்தே இதயத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
பொதுவாக, அனைவரும் வாரத்தில் மூன்று நாள்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கிய உணவு உட்கொள்வது, ‘பிஎம்ஐ’யைச் சரியான அளவில் வைத்திருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார் மருத்துவர் பரேக்.
புகை, மது உள்ளிட்ட பழக்கங்களை விடுத்து தேவையற்ற பதற்றத்தைக் குறைத்து, மன அமைதியை உறுதி செய்யவும் பரிந்துரைக்கிறார் பிரேக்.