கோடையுடன் இணைந்து வருவது தான் மாம்பழங்கள். தித்திக்கும் மாம்பழங்களின் சுவையில் திளைக்காமல் ஒருவர் கோடை பருவக் காலத்தைக் கடந்து செல்ல முடியாது. சிங்கப்பூரில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து பருவகால கோடை பழங்கள் ஈரச் சந்தைகளில் பரவலாக காண முடிகிறது.
தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரபலமான ‘நாம் டோக் மாய்’ மாம்பழங்கள் ஆண்டு முழுவதும் சிங்கப்பூரில் கிடைக்கும் என்றாலும் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து ஆகஸ்ட் முற்பகுதி வரை இந்தியாவிலிருந்து வரும் பருவகால மாம்பழங்கள் ஒரு தனிச்சுவை தான்.
இந்திய மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. அவை மிகவும் சதைப்பற்றுள்ளதாகவும் சுவையாகவும் பெரியதாகவும் இருக்கும்.
இருப்பினும், அவற்றின் விலை ‘நாம் டோக் மாய்’ மாம்பழங்களை விட மூன்று மடங்கு அதிகம். அல்போன்சா, கேசர், பங்கனபள்ளி போன்ற பிரபலமான இந்திய வகை மாம்பழங்கள் ஒரு கிலோ $15 வரை விற்கப்படும்.
இந்திய மாம்பழங்களைப் பழத்தோட்டங்களில் இருந்து சிங்கப்பூரில் இருக்கும் கடைகளின் அலமாரிகளுக்குக் கொண்டு வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். அவற்றிற்கான தளவாட செலவினங்களே இந்திய மாம்பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான முக்கிய காரணம்.
செலவுகள் குறித்து கவலை கொள்ளாமல் மாம்பழங்களைச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாம்பழப் பிரியர்கள் சிங்கப்பூரில், இந்திய மாம்பழங்கள் கிடைப்பதற்கான சிறந்த இடமான லிட்டில் இந்தியாவிற்குச் செல்லலாம். அங்கு, வீரா ஃப்ரெஷ் மார்ட், பஃப்ளோ ரோட்டில் உள்ள பொன்னி இந்தியன் மளிகைப் பொருட்கள் ஆகிய இரண்டு கடைகளில் அதிக இந்திய மாம்பழ வகைகளைக் காண முடியும்.
கேம்பல் லேன், கிளைவ் ஸ்திரீட் ஆகிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் இந்திய மாம்பழங்களை மலிவான விலைக்கு வாங்கலாம். முஸ்தபாவிலும் ஈரச் சந்தைக் கடைகளிலும் சில வகையான மாம்பழங்கள் விற்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் இந்தக் கோடை காலத்தில் நீங்கள் ருசித்துப் பார்க்கக்கூடிய சில மாம்பழ வகைகளை இங்கே காணலாம்.
அல்போன்சா
இந்தியாவில் மிகவும் பிரபலமான மாம்பழ வகைகளில் ஒன்று அல்போன்சா மாம்பழம். வைட்டமின் ஏ சத்து நிறைந்ததாகவும் நறுமணம், சுவை ஆகியவற்றின் அடிப்படையிலும் இது முதன்மையாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் இந்த வகை மாம்பழம் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். பழம் பழுத்தவுடன் ஆரஞ்சு மஞ்சள் நிறமாக மாறும். ஒரு கிலோ அல்போன்சா மாம்பழம் $10 முதல் $12 வரை விற்கப்படுகிறது.
கேசர்
அல்போன்சாவின் சுவைக்கு இணையான மாம்பழம் என்றால் அது கேசர் தான். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் தனித்துவமான முனையுடன் இருக்கும். பெரும்பாலும் வடமேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் அறுவடை செய்யப்படும், கேசர் மாம்பழத்தின் கூழ் குங்குமப்பூ நிறத்தில் இருக்கும். மற்ற வகைகளுடன் ஒப்பிடுகையில், லிட்டில் இந்தியாவில் இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் இது சற்று வேகமாக பழுக்கும் திறன் கொண்டது. மேலும், இதன் தோல் மிகவும் மெலிதாக இருப்பதால் இறக்குமதி செய்யும்போது மாம்பழத்திற்கு சேதம் ஏற்படும். அதனால், விற்பனையாளர்கள் இவற்றை இறக்குமதி செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இது வைட்டமின் ஏ,சி சத்து நிறைந்தது. மேலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒன்று. ஒரு கிலோ கேசர் மாம்பழம் $12 முதல் $15 வரை விற்கப்படுகிறது.
பங்கனபள்ளி
மாம்பழப் பிரியர்கள் எங்கு வேண்டுமானாலும் பங்கனபள்ளி மாம்பழங்களை அடையாளம் காண முடியும். மற்ற வகைகளை விட குறிப்பிடத்தக்க அளவில் இது பெரியது. இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்றாகும். இனிப்பு, சதைப்பற்றான நார்ச்சத்து இல்லாத கூழ் கொண்ட பங்கனபள்ளியை தண்ணீரில் கழுவி விட்டு அப்படியே உண்ணலாம். ஒரு கிலோ பங்கனபள்ளி மாம்பழம் $11 முதல் $14 வரை விற்கப்படுகிறது.
நீலம்
நீலம் மாம்பழ பருவத்தின் முடிவில் அறுவடை செய்யப்படுகிறது. மற்ற வகைகளின் வரத்து குறையத் தொடங்கும் போது இந்த வகை மாம்பழங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தென்னிந்தியா முழுவதும் வளரும் இந்தத் தங்க மஞ்சள் நிறத்தில் பச்சை நிற புள்ளிகளுடன் இருக்கும் மாம்பழம் மற்ற வகைகளை விடச் சற்று சிறியது. இதல் இருக்கும் அதிக நீர்சத்து கோடை மாதங்களில் புத்துணர்ச்சியூட்டும் சிற்றுண்டியாக இதை மாற்றுகிறது. பொதுவாக மாங்காய் ஊறுகாய் செய்ய நீலம் மாங்காய்கள் பயன்படுத்தபடுகின்றன.
ஒரு கிலோ நீலம் மாம்பழம் $9 முதல் $11 வரை விற்கப்படுகிறது.
மல்கோவா
இனிப்பு, சுவையான சதைக்கு பிரபலமான மற்றொரு தென்னிந்திய வகை. முக்கியமாக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படுகிறது. பெரும்பாலும் வட்டமான சாய்ந்த வடிவத்தில் இருக்கும். நாரில்லாத சதை காரணமாக இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாம்பழம். இதில் அதிக அளவு மெக்னீசியமும் உள்ளது. ஒரு கிலோ மல்கோவா மாம்பழம் $11 முதல் $15 வரை விற்கப்படுகிறது.