சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஜோஸ்கோ பயண நிறுவனத்தின் பேராதரவுடன் கலைஞர் நூற்றாண்டு – கலைஞரின் இலக்கியம் குறித்த கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அக்கருத்தரங்கு வரும் ஜூன் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும்.
சிங்கப்பூரின் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளர் கழக மதியுரைஞருமான திரு இரா. தினகரன், கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
ஜோஸ்கோ பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகப் புரவலருமான தமிழ் வள்ளல் நாகை தங்கராசு எனும் பாப் ராஜூ நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கிறார்.
தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நகைச்சுவை நாவலர் புலவர் மா. இராமலிங்கம் ‘கலைஞரின் தமிழ்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
கலைஞரின் குறளோவியம் பற்றி முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன், கலைஞரின் சங்கத் தமிழ் குறித்து முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், கலைஞரின் சிறுகதைகள் பற்றி முனைவர் இரத்தின வேங்கடேசன், கலைஞரின் கவிதைகள் குறித்து கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கலைஞரின் புதினங்கள் பற்றி முனைவர் இளவழகன் முருகன், கலைஞரின் நகைச்சுவை குறித்து முனைவர் மன்னை க. இராஜகோபாலன், கலைஞரின் திரைக்காவியங்கள் பற்றி முனைவர் ஜெகதீசன் சண்முகசுந்தரம் ஆகியோர் உரையாற்றுவர்.
‘பெண் சிங்கம்’ எனும் படத்திற்குக் கலைஞர் இயற்றிய ‘ஆஹா வீணையில் எழுவது வேணுகானமா’ எனும் பாடலுக்கு தேவி நுண்கலைப் பள்ளி மாணவிகளின் நடனமும் இடம்பெறும்.
அத்துடன் பராசக்தி, சாக்கரட்டீஸ், மனோகரா, சேரன் செங்குட்டுவன், பூம்புகார் ஆகியவற்றின் வசனக் காணொளிகளும் காண்பிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இத்தகைய விழா நடைபெறுவது இதுவே முதல் முறை.
இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வுக்கு தமிழ் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றன சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் ஜோஸ்கோ பயண நிறுவனமும்.

