ஒரு நாளின் பெரும்பகுதியை பணியிடத்தில் கழிக்கும் யாவருக்கும், உடன் பணியாற்றுவோருடன் இயற்கையாகவே பிணைப்பு உண்டாகும். பணிக்காக முற்றிலும் புதிய சூழலுக்குச் செல்லும்போது, அங்கு புதிய சமூக வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
உணவு இடைவேளை, பணி நேரம் முடிந்தபின் சற்று நேரம் செலவிடுவது, குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் பொதுவாக இவ்வகைத் தொடர்புகள் உண்டாகின்றன.
பணியிடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படிநிலைகளில் பணியாற்றும்போது, பணி தொடர்பான கலந்துரையாடல்களும் பொதுவான பணி தாண்டிய கலந்துரையாடல்களும் வெவ்வேறு விதமாக அமைவதால் அப்பிணைப்பில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பணியிட நட்புறவினால் கிட்டும் பயன்கள், நட்புச் சிக்கல், அவற்றைக் கையாளும் வழிமுறைகள் குறித்த விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளார் கனடாவின் அட்லர் பல்கலைக்கழகத் தொழில்துறை, நிறுவன மற்றும் பயன்பாட்டு உளவியல் இணைப் பேராசிரியர் ஜேசன் வாக்கர்.
பணியிட நட்புச் சிக்கல்
பணியிடங்களில் நப்பு வட்டத்தை உருவாக்குவது சில பொதுவான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.
பணியிடத்தில் குறிப்பிட்ட சிலருடன் நட்பு பாராட்டுவது, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்றும் விருப்பு வெறுப்புடன் நடந்துகொள்வது போன்றும் தோற்றமளிக்கலாம்.
அலுவலக நேரத்தில் அதிக நேரம் நண்பர்களுடன் செலவிடுவது கவனச்சிதறலை ஏற்படுத்தி, உற்பத்தித் திறனைப் பாதிக்கலாம். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் நண்பர்களாக இருக்கும் ஊழியர்களிடையே மனக்கசப்பை உண்டாக்கலாம்.
அலுவலக நட்பில் விரிசல் ஏற்பட்டால், நட்புக் காலத்தில் பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படுவதும் நிகழ வாய்ப்புள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சக ஊழியர்களுடன் மிக நெருக்கமாகப் பழகும்போது பகிரப்படும் சில கருத்துகள் தவறான புரிதலுக்கும் வழிவகுக்கலாம்.
பணியிட நட்பின் பயன்கள்
பணியிட நட்பு குறித்த பயம் இருந்தாலும், பணியிட நட்பினால் நேர்மறைத் தாக்கங்கள் விளைவதும் சில ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பணியிட நட்பு, மகிழ்ச்சி குறித்த 2021ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில், 57 விழுக்காட்டு ஊழியர்கள் பணியிடத்தில் நட்பை ஏற்படுத்திக் கொள்வது பணியிடச் சூழலை இலகுவாக்குவதாகத் தெரிவித்தனர்.
கூடுதலாக, 22 விழுக்காட்டுப் பங்கேற்பாளர்கள் பணியிட நட்பு தங்களின் செயல்திறனை மேம்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
வலுவான உறவுகள், சக ஊழியர்களிடையே கருத்துப் பரிமாற்றம், ஆலோசனைப் பகிர்வு உள்ளிட்டவற்றை எளிதாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக பணியிட நட்பு ஆதரவான சூழலை உருவாக்கி, உளவியல் சிக்கல் வராமல் தடுப்பதாகவும் நம்பப்படுகிறது.
நிறுவனங்களின் பங்களிப்பு
ஊழியர்களிடையே நம்பிக்கை, நட்புறவை வளர்க்கும் திட்டங்கள் மூலம் மகிழ்ச்சியான அலுவலகச் சூழலை உருவாக்கலாம்.
வழிகாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, அனுபவமுள்ள ஊழியர்களுடன் இளைய ஊழியர்களை இணைப்பது தலைமுறை இடைவெளிகளைக் குறைக்கும். இது கற்றலை அதிகப்படுத்தி, நிறுவன வளர்ச்சிக்கு வித்திடும்.
சக ஊழியர்களின் முக்கிய நாள்களில் வாழ்த்தவும், அவர்களின் சாதனைகளைக் கொண்டாடவும் உரிய சூழலை ஏற்படுத்தித் தருவது அவர்களை ஊக்குவித்து மேலும் சிறப்பாகப் பங்காற்ற வழிசெய்யும்.
பணியிட நட்பு எல்லைகள்
பணியிட நண்பர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்ன ஊழியர் சோனல், தனது நட்பு வட்டத்தை பணியிடம் தாண்டி வீடுவரை கொண்டுபோவதில்லை என்றார். தொடர்ந்து, பணியிட நண்பர்களுக்குள் ஆரோக்கியமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும், அவரவர் பணி நேரத்தை மதித்து நடப்பதும் நட்புறவை நன்கு பேண உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
பணியிடத்தில் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் முன்பு கவனமாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்வது அவசியம்.
நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதுடன் பணியின் நிபுணத்துவத்தைப் பேணுவதும் முக்கியம். உற்பத்தித்திறனைப் பாதிக்காத வகையில் நேரச் சமநிலையை நிர்வகிப்பது நல்லது.
சக ஊழியருடன் ஆழமான நட்பு ஏற்பட்டாலும், மரியாதைக்குரிய அணுகுமுறையைப் பின்பற்றுவது சிறந்தது. நட்புறவில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனைத் தவிர்க்காமல் பக்குவமாகப் பேசி, அவற்றைத் தீர்க்க முயல வேண்டும். இது பணியிடக் குழு ஒற்றுமைக்கு நன்மை பயக்கும்.
பணியிட நட்பு, விருப்புவாதத்துக்கு வழிவகுக்காமல் இருக்க வேண்டும். நட்பின்பால் பணியிடத்தில் கூடுதல் உதவி செய்வதும் பெறுவதும் பிற ஊழியர்களின் நம்பிக்கையைக் குலைத்து குழுவின் செயல்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும்.
நண்பர்கள் பகிர்ந்த தனிப்பட்ட தகவல்களைச் சக ஊழியர்களிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். அந்த எல்லையைச் சரியாகக் கடைப்பிடிப்பது நீடித்த நட்புக்கு உதவும்.

