தமிழவேள் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் ‘சிங்கப்பூர் மணிமகுடம்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஜூலை 12ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு மத்தியப் பொது நூலகத்தில் நடைபெற்றது.
அனைத்துலக அளவில் விருதுபெற்ற எழுத்தாளரும் சேது வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான முனைவர் சேது குமணன் இந்நூலைத் தொகுத்துள்ளார்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் வருகையளித்தார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சிறப்பு வருகையளித்தார். மேலும், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் முகமது ரியாஸ், புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்துசாமி குமரன், துபாய்-கென்யாவின் பிளாக் துளிப் மலர்கள் நிறுவனத் தலைவர் முகமது யஹ்யா எனப் பல அயலகத் தமிழர்களும் கலந்துகொண்டனர்.
“உலகத்தில் வாழக்கூடிய அத்தனைத் தமிழர்களும் சிங்கப்பூரை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமானால், இந்த ஒரு நூலைப் படித்தால் போதும்,” எனப் பாராட்டினார் திரு தினகரன். இந்த நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கவேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் வழங்கினார்.
இலக்கியத்தோடு ஒப்பிட்டு தமிழவேளைப் பற்றிய தகவல்கள், தமிழ்மொழியின் புழக்கத்தை நிலைக்கவைப்பதில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு, சிங்கப்பூரில் சமயம் எனப் பலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது தன்னைக் கவர்ந்ததாகவும் கூறினார் திரு தினகரன்.
“நூலின் அட்டையைப் பார்த்ததுமே நூலை வாசிக்கத் தோன்றியது. சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சிக்கு இத்தனைப் பேர் முன்னின்று செயல்படுவது எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் திரு செந்தில் தொண்டமான்.
“புத்தகம் என்பது என்றும் வாழும் ஒரு சாதனம். இதை இணையத்திலேயே வெளியிடாமல் அச்சடித்து நூலாக வெளியிட்டிருப்பது பலரின் ஆசையையும் நிறைவேற்றியுள்ளது,” என வாழ்த்தினார் தமிழ் முரசு ஆசிரியர் த ராஜசேகர்.
“சிங்கப்பூர் மணிமகுடம் நம் தமிழ்த் தாய்க்கே சூட்டப்படவேண்டும். அதிலிருக்கும் வைரங்கள் என்றும் ஜொலித்துக்கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை,” என உணர்வுபூர்வமாகப் பேசினார் வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் திரு ஜோதி. மாணிக்கவாசகம்.
தொடர்புடைய செய்திகள்
நூலின் 500 பிரதிகளை வாங்கிச் சிறப்பித்தார் சென்னையில் ‘கோஎட் டிரேவல்ஸ்’-ன் நிர்வாக இயக்குநர் சி ஸ்ரீனிவாசன். “சிங்கப்பூரின் சுற்றுலாத் தளங்களைப் பற்றி அறிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது துணைபுரியும்,” என்றார் அவர்.
நூலின் விற்பனையில் திரட்டப்படும் தொகையை சிங்கப்பூரில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடுவதாகக் கூறினார் முனைவர் சேது குமணன்.
‘சிங்கப்பூர் மணிமகுடத்தில் பதிந்துள்ள வைரங்கள்’
மொத்தம் 15 எழுத்தாளர்கள் எழுதிய 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
தமிழறிஞர் டாக்டர் சுப திண்ணப்பன், ஆர் ராஜாராம், இராம. கண்ணபிரான், செ.ப. பன்னீர்செல்வம், முனைவர் மா. இராஜிக்கண்ணு, முனைவர் எச். முஹம்மது சலீம், புதுமைத்தேனீ மா. அன்பழகன், பிச்சினிக்காடு இளங்கோ, எம். இலியாஸ், முனைவர் மீனாட்சி சபாபதி, ஸதக்கத்துல்லாஹ், செ.மனோகரன், கலைவாணி இளங்கோ, இசாக், முனைவர் சேது குமணன் ஆகியோர் இந்நூலில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
நூலின் அட்டையை, ‘இந்தியாவின் அருங்காட்சியக மனிதர்’ என்ற பெயர்கொண்ட புகழ்பெற்ற முப்பரிமாண ஓவியரும் சிற்பியுமான ஏ பி ஸ்ரீதர் வடிவமைத்தார்.
இத்தொகுப்பின் பின்னணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு அடங்கியுள்ளது. முதல் கட்டுரையை 1992ல் செ.ப.பன்னீர்செல்வம் எழுதினார். இறுதிக் கட்டுரை சமீபத்தில்தான் நிறைவுபெற்றது.
இவ்வளவு சவால்மிக்கக் காரியமாக இருப்பினும், அதை முன்நின்று வழிநடத்தியதற்குக் காரணம், முனைவர் சேது குமணன் சிங்கப்பூர்மீது கொண்டிருந்த மோகம்.
“கடலில் மீனின் கண்ணைப் போன்றதுதான் சிங்கப்பூர். சிங்கப்பூர் மிகச் சிறிது. ஆனால் உலகைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. அதன் தலைவர்கள், வாழ்க்கைமுறை எனப் பல விதங்களில் நமக்குப் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது.”
“எவ்வாறு எங்கள் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்பாட்டுடன் நடத்துவது, குப்பைப் போடாமலிருப்பதை சிறுவர்களிடம் கற்பிப்பது எனப் பல விஷயங்களில், சிங்கப்பூருக்கு வெளியே எங்களை வளர்த்தது சிங்கப்பூர்தான்,” என்றார் முனைவர் சேது குமணன்.
இந்த நூலோடு சேர்த்து ஐந்து குறும்படங்களையும் மொத்தம் ஆறு நூல்களையும் முனைவர் குமணன் வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றுதான் ‘மலேசியா மணிமகுடம்’ எனும் நூல். அந்நூலிலும் மலேசியாவில் தமிழர்களின் நூறாண்டுகால வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது
இதையடுத்து, விடுபட்ட எழுத்தாளர்களோடு, ‘சிங்கப்பூர் மணிமகுடத்தின்’ மற்றொரு பகுதியை வெளியிட விரும்புவதாக முனைவர் சேது குமணன் கூறினார்.
‘பிறர் நூல் பெற வாசிப்போம்’ இயக்கம்
‘பிறர் நூல் பெற வாசிப்போம்’ (Read for Books Charity Drive) என்னும் இவ்வியக்கம் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இவ்வியக்கத்தில் பங்குபெற https://go.gov.sg/rfb24-individuals இணையத்தளத்தை நாடலாம்.
வாசிப்பில் ஈடுபட்டிருப்பதை நிழற்படமாகப் பதிவுசெய்து அதனை https://go.gov.sg/rfb24-submit இணையத்தளத்தில் பதிவேற்றவேண்டும். பத்து பேர் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு வாசித்தால், தேசிய நூலக வாரியம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அறநிறுவனத்துக்கு ஒரு நூலை நன்கொடையாக வழங்கும்.