‘கூர்மையாக இருக்கும் பென்சிலால் என்ன பயன், கூடவே இருக்கும் ரப்பர் அதை அழிக்கும்போது? நிலவுக்கு அழகிருந்து என்ன பயன், இரவில் தனியாக நிற்கும்போது?’ எனத் தான் எழுதிய கவிதையைக் கூறி மக்களைச் சிந்திக்கவைத்தார் யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவி நந்தகுமார் விஷ்ருதா.
“என்ன பயன்?” என்ற தலைப்பிலான அவரது கவிதை, மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘நானும் ஒரு படைப்பாளி’ பயிலரங்குகளால் விளைந்த பயன்களை நன்கு பறைசாற்றி அமைந்திருந்தது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற அப்பயிலரங்குகள்மூலம் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளைக் கொண்டாடியது சனிக்கிழமை ஜூலை 20ஆம் தேதியன்று உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற வெற்றி விழா 2024.
பயிலரங்குகளில் பங்குபெற்ற மொத்தம் 284 மாணவர்களில் 112 மாணவர்களுக்கு வெற்றி விழாவில் பரிசுக் கோப்பைகளும் சான்றிதழ்களும் எவ்வித வரிசையுமின்றி வழங்கப்பட்டன.
எனினும், “இது போட்டியல்ல; இளம் படைப்பாளிகளை உருவாக்கும் திட்டமே,” என வலியுறுத்தினார் கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு தமிழ்மொழிப் பகுதியின் மூத்த பாடக்கலைத்திட்ட வள மேம்பாட்டு அதிகாரி கங்கா பாஸ்கரன்.
“நீங்கள் தமிழ்மொழிக்கான ஆர்வமும் ஆற்றலும் காண்பித்துள்ளீர்கள். இது உங்கள் உழைப்பைப் பறைசாற்றுகிறது,” என மாணவர்களைப் பாராட்டினார் சிறப்பு விருந்தினராக வருகையளித்த கல்வி அமைச்சின் முதலாம் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் துறை இயக்குநர் ஓங் கோங் ஹோங்.
குறிப்பாக, ‘நானும் ஒரு படைப்பாளி’ திட்டத்தால் பயனடைந்து தமிழ்ச் சமூகங்களில் சேவையாற்றும் இளம் தலைவர்களான சரண்யா முஷிலா, ரகுநந்தன், சீனிவாசன் சமீக்ஷா ஆகிய மூவரை அவர் பாராட்டினார்.
சிறுகதை, கவிதை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளிலும் வெற்றி விழாவில் சிறப்பாகச் செய்த சில மாணவர்கள் தங்களின் படைப்புகளைப் படைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளும் மின்னூலாக மாணவர் கற்றல் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். அவற்றை மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“உள்ளூர்க் கவிஞர்களை நேரில் சந்திக்கும்போது அவர்களுக்கும் திறன்மிக்கக் கவிஞர்களாவதில் உந்துதல் வருகிறது,” என்றார் யூனோயா தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியர் இளவரசி காந்தி.
“பயிலரங்குகள்மூலம் வேறோர் ஆசிரியரின் புதிய திறனைக் கற்கும்போது மாணவர்கள் புதிய உத்வேகம் பெறுகின்றனர். எனினும், பரிசு வாங்குகிறார்கள்; போகிறார்கள் என்பதற்குப் பதிலாகத் தொடர்ந்து தமிழார்வத்தை மாணவர்களிடத்தில் தக்கவைக்கும் தொடர்முயற்சிகள் தேவை,” என்றார் பீட்டி உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கலைச்சித்ரா.
1987ல் கல்வி அமைச்சு எழுத்துத்திறன் போட்டிகளாகத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, 2017ஆம் ஆண்டு ‘நானும் ஒரு படைப்பாளி’ என பெயர்மாற்றம் கண்டது.
“அனைவராலும் புத்தாக்கப் படைப்புகளை வழங்கமுடியும்,” என்ற அடிப்படையில் இப்பெயர் சூட்டப்பட்டது.
படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்த பயிலரங்குகள்
‘வளரும் எழுத்தாளர்’, ‘வளரும் கலைஞர்’ ஆகிய இரண்டு பிரிவுகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ‘வளரும் கவிஞர்’ பிரிவில் புகுமுக வகுப்பு மாணவர்களும் பங்குபெற்றனர். உள்ளூர் நிபுணர்கள் பயிலரங்குகளை நடத்தினர்.
எவ்வாறு ஒரு சிறுகதையைத் தொடங்கி, திருப்பத்தைக் கொண்டுவந்து கதையை முடிப்பது என எழுத்தாளர்ப் பயிலரங்கு கற்பித்தது.
வளரும் கலைஞர் பிரிவில் இவ்வாண்டு மாணவர்கள் வசனங்கள் எழுதுவதோடு அவற்றை மேடை நாடகமாக நடித்துக் காட்டுவதற்கான உத்திகளையும் கற்றுக்கொண்டனர்.
புகழ்பெற்ற கவிதைகளின் வரிகளைக் கண்டறிவதன் மூலம் கவிதைப் பயிலரங்குகளில் கவிதைகளுக்கான இலக்கணக் கூறுகளை மாணவர்கள் கற்றனர்.
பரவசப்படுத்திய சிலர்
நெருங்கிய நண்பர்களான இரு காலணிகள் விற்பனையாகாததால் கடைக்காரர் அவற்றை வீசவுள்ளதாகக் கேள்வியுறும்போது பிரிவை எண்ணி அஞ்சுகின்றன. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரு உயிர் நண்பர்களுக்கு வழங்கப்படும்போது அவர்களின் கவலை தீர்கிறது. இச்சிறுகதையை வழங்கினார் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியின் ஐஸ்வரியா லட்சுமி.
தந்தை சொல் கேளாது சமூக உடகங்களில் இணைய மோசடியில் மாட்டிக்கொண்ட சிறுவரின் கதை, முயற்சியே செய்யாமல் தன்னம்பிக்கையை மட்டுமே நம்பியிருந்த மாணவர் உணர்ந்த வாழ்க்கைப் பாடம் போன்ற சுவாரசிய நாடகங்களையும் மாணவர்கள் படைத்தனர்.