முதுமைக்கால நினைவாற்றல் இழப்பால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்டோருக்கு நினைவில் நிற்கும் ஒரு பெயர் “அறிவா”.
இந்த ஆண்டிற்கான தாதியர் தகுதி விருதைப் பெற்றுள்ளார் 47 வயது திருவாட்டி வரதன் அறிவழகி.
“மூப்படைந்து வரும் நம் சமூகத்தில் முதியோர் பராமரிப்புச் சேவைக்கான தேவைகள் அதிகம் என்பதை மறுக்க முடியாது. மறதி இருந்தாலும் அவர்களின் நலனை மறவாமல் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாகத் திகழ இத்துறையைத் தெரிவுசெய்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்று தமிழ் முரசிடம் திருவாட்டி அறிவா கூறினார்.
பொதுவாக, தாதியாகப் பணிபுரிவதற்கும் ‘டிமென்ஷியா’ துறையில் வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்றார் திருவாட்டி அறிவா.
“நினைவாற்றல் இழப்பால் அவதியுறுவோர் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். நிதானம் இருக்காது. அவர்களைப் பராமரிக்கும் தாதியரின் சைகைகள், பாவனைகள்கூட அவர்களுக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். நம் மீது அவர்களுக்கு நம்பிக்கை வராவிட்டால், பராமரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.
“எனவே, தாதியர் மேல் அவர்கள் நல்லெண்ணம் கொள்ளும் வகையில் முதியோரின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம். அவ்வகையில் தீர்க்கமான கடப்பாடும் அளவற்ற கரிசனமும் என் வாழ்க்கைத்தொழிலின் ஆதாரம்,” என்றார் திருவாட்டி அறிவா.
சவால் நிறைந்தது என்று தெரிந்துதான் இந்தப் பிரிவில் பணியாற்றச் சென்றதாகவும் அவர் கூறினார்.
“நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும், என் மகள் என்னைத் தேடுவார் என்று ஒருவர் சொன்னால் அந்நேரத்தில் மகளை ஏன் அவர் தேடுகிறார் என்று ஆராய்ந்து மதிப்பிடுவோம். பிறகு அவரது எண்ணத்தைத் திசைதிருப்ப முயல்வோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உண்மையான வயது 70 ஆக இருந்தாலும் சில முதியவர்கள் 40 வயது நபரைப் போன்று நடந்துகொள்வர். எனவே, அந்நேரத்தில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போல் அவரைப் பராமரிக்க வேண்டும் என்று சுட்டினார் அறிவழகி.
முதுமைக்கால நினைவாற்றலை இழப்போரது மனநிலை மற்ற நோயாளிகளிடமிருந்து வேறுபட்டது. இக்குறிப்பிட்ட பிரிவினர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்த முயல்வர்.
நினைவளவில் வேறோர் உலகில் இருக்கும் அவர்களின் மனப்போக்கின்படி சென்றுதான் அவர்களைப் பராமரிக்க முடியும். இரண்டுக்கும் மேற்பட்ட கட்டளைகளைக் கூறினால் அவர்கள் குழம்பி சில நேரம் சலனமற்று நிற்பார்கள். சொற்களைக் கோவையாகக் கூறி உரையாடுவதும் அவர்களுக்குக் கடினமாக இருக்கும். எனவே, இந்நிலையில் அவர்களது கவனத்தைப் பெற காட்சிப்படங்களைப் பயன்படுத்துவதாக திருவாட்டி அறிவா குறிப்பிட்டார்.
எதையுமே நினைவில் வைத்துக்கொள்ள தடுமாறும் அவர்களை, கனிவுடன் நிதானமாக அணுகினால் அவர்கள் நம் பெயரை நினைவில் வைத்து “அறிவா எங்கே?” என்று கேட்பர்.
இந்தப் பணி மீதான நாட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று நெகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்ந்தார் திருவாட்டி அறிவா.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள ரென் சி தாதிமை இல்லத்தில் மூத்த தாதிமை மேலாளராகப் பணிபுரியும் திருவாட்டி அறிவா, தகுதிவாய்ந்த தாதிமைப் பராமரிப்பை ஆதரிப்பவர்.
மேலாளர் பணி என்பதால் இல்லவாசிகளின் பராமரிப்பு, ஊழியர்களின் நலன் என அனைவரின் நலனையும் பேணுவது இவரது வேலை.
“முதியோர் நலன் கோரும் இந்தத் துறைக்கு வர விரும்பும் தாதியர், வாழ்நாள் கல்வி கற்பதை விரும்ப வேண்டும். துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட சேவைகளுக்கும் தற்போதைய சூழலுக்கும் இடைப்பட்ட காலத்தில் சில செயல்முறைகள் மாறியிருக்கும்.
“எனவே, இத்துறையில் திறன்மிக்கவர்களாகத் திகழ, தொடர்ந்து பணிசார்ந்த திறன்களை புதுப்பித்துக்கொள்வது இன்றியமையாதது,” என்று கூறிய திருவாட்டி அறிவா, இந்த உன்னத பணியில் ஈடுபட்டு வருவோருக்குத் தமது தாதியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

