தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படும் மறைமலை அடிகளைப் பற்றிய ‘வரலாற்றுச் சுவடுகள்’ எனும் நூல் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4ல் வெளியீடு காணவுள்ளது.
சிங்கப்பூர் இலக்கியக் குழுக்களில் ஒன்றான தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வின்போது, நூல் வெளியீட்டுடன் கருத்தரங்கு ஒன்றும் இடம்பெறும்.
104, சையது ஆல்வி சாலையில் அமைந்துள்ள நந்தனாஸ் உணவகத்தின் இரண்டாம் தளத்தில் இந்நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெறும்.
தமிழக எழுத்தாளர் மறை. தி. தாயுமானவன் எழுதியுள்ள இந்நூலை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்க (லிஷா) இலக்கிய மன்றத்தின் செயலாளர் தமிம் அன்சாரி அறிமுகம் செய்யவுள்ளார்.
‘சீர்மிகு சிங்கையின் வளர்ச்சிக்கு மிகவும் பெருமையாகக் கருதப்படுவது என்னென்ன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும்.
பட்டிமன்றப் பேச்சாளர்கள் திருவாட்டி மஹ்ஜபீன், திருவாட்டி இசக்கிசெல்வி, திருவாட்டி வெண்ணிலா, திருவாட்டி செவியின்ப சங்கீதா ஆகியோருடன் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசனும் கருத்தரங்கில் பங்குபெறுவார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவுள்ளார்.
தாரகை இலக்கிய வட்டத்தின் 4ஆவது புத்தக வெளியீட்டு விழாவாக அமையும் இந்நிகழ்வில், தமிழ்த்தொண்டு ஆற்றிவரும் இருவருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதும் வழங்கப்படவுள்ளது.