நீரிழிவிற்கு முந்தைய நிலையில் இருப்பவர்களும் நீரிழிவு நோயாளிகளும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க மெட்ஃபோர்மன் மருந்தை மட்டும் நம்பியிராமல் வாழ்க்கைமுறையிலும் மாற்றம் செய்யவேண்டும் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மூப்படைதலில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிய கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குமேல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அமெரிக்க நீரிழிவு ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர்.
இந்த ஆய்வின் பங்கேற்பாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ‘பிளசிபோ’ (placebo) எனப்படும் ஆற்றல் இல்லா மருந்தை உட்கொண்டவர்கள், நீரிழிவுக்கான மெட்ஃபோர்மன் மருந்தை உட்கொண்டவர்கள், சத்துணவைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தவர்கள் ஆகியோரே அந்த மூன்று பிரிவினர்.
இதயச் செயலிழப்பு, பக்கவாதம், புற்றுநோய், முதுமை மறதிநோய் ஆகிய நாட்பட்ட நோய்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பொறுத்தவரை, மெட்ஃபோர்மன் மருந்தை உட்கொண்டோர் இடையே அதிகம் வேறுபடவில்லை என்று ஆய்வு குறிப்பிட்டது.
அதற்கு நேர்மாறாக, நல்ல உணவுமுறையைக் கடைப்பிடித்து, அடிக்கடி உடற்பயிற்சி செய்தோர், நாட்பட்ட நோய்க்கு ஆளாகும் அபாயம் கிட்டத்தட்ட 21 விழுக்காடு குறைந்ததாகக் கண்டறியப்பட்டது.
இதயம், மூளை, நுரையீரல் ஆகியவற்றின் நலத்தை இந்தச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தற்காப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.
இறுதியில் மூப்பு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதங்களில் சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால், நல்ல உணவு, உடற்பயிற்சி ஆகிவற்றுக்கு மெட்ஃபோர்மன் மருந்து ஒருபோதும் ஈடாகாது எனக் கூறப்படுகிறது.
“நீரிழிவு நோயைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், மக்கள் முதுமையடையும்போது பல நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுப்பது, அவர்களின் வாழ்க்கைத் தரம், மருத்துவப் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றில் இன்னும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்,” என்று அமெரிக்காவின் தேசிய மூப்படைதல் நிலைய மருத்துவ அதிகாரி மார்செல் சாலிவ் கூறுகிறார்.
‘பிளசிபோ’ உட்கொண்ட குழுவிற்கும் நீரிழிவு மருந்து உட்கொண்ட குழுவிற்கும் இடையே மிகக் குறைந்த வேறுபாடே காணப்பட்டது.
உயர் ரத்த அழுத்தம், இதயச் செயலிழப்பு, கரோனரி தமனி நோய் அல்லது இஸ்கிமிக் இதய நோய், சீரற்ற இதயத்துடிப்பு, மிகைக் கொழுப்பு, பக்கவாதம், மூட்டுவலி, ஆஸ்துமா, புற்றுநோய், நாட்பட்ட சிறுநீரக நோய், நாட்பட்ட நுரையீரல் நோய், மறதிநோய், மனச்சோர்வு, எலும்புத் தேய்மானம், நீரிழிவு ஆகியவையே அந்த 15 நாட்பட்ட நோய்கள்.
நீரிழிவால் பாதிக்கப்பட்ட அல்லது அதற்கான அதிக அபாயம் உள்ள நடுத்தர வயதினருக்கும் முதியோர்க்கும் இடையே, தீவிரமான வாழ்க்கைமுறை மாற்றங்கள் பல நாட்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம் என்பதை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சத்தான உணவை உட்கொள்வதும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் நம்மில் பெரும்பாலோர் அளவுகடந்த சிரமமின்றி முயலக்கூடியதுதான் என்று அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டது.
பல ஆண்டுகால நல்ல பழக்கவழக்கங்கள், நோய்களால் குறைந்த அளவே பாதிக்கப்படும் முதுமைக்காலத்திற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன என்பதே இதன்மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.
“இந்தக் கண்டுபிடிப்பானது, சத்துணவு, வழக்கமான உடற்செயல்பாடு, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவற்றின் நீண்டகால மதிப்பை எடுத்துக்காட்டுகிறது,” என்று கொலராடோ பொதுச் சுகாதாரக் கழகத் தொற்றுநோயியல் வல்லுநர் டானா டபெலியா குறிப்பிட்டார்.
உலக மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், நீண்ட ஆயுள் என்பது நல்ல உடல்நலத்துடனேயே அமையும் என்று உறுதியாகக் கூறமுடியாது. எனவே, நலமான முதுமைக்கு உதவும் காரணிகளை ஆராயும் ஆய்வுகள் தற்போது அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

