சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் தனித்துவமான சமையலை அவர்களின் வேருடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிங்கப்பூரின் புகழ்பெற்ற சமையற்கலை நிபுணரும் 20க்கும் மேற்பட்ட சமையல் நூல்களை எழுதி உள்ளவருமான திருவாட்டி தேவகி சண்முகம், 70.
சென்னையின் ஃபெதர்ஸ் ஹோட்டலிலுள்ள ‘சங்கமித்திரை’ எனும் உணவகத்துடன் இணைந்து அவர் ‘அயலகம்’ எனும் உணவு விழாவை மே 30 முதல் ஜூன் 8ஆம் தேதிவரை நடத்தினார்.
சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் கிட்டத்தட்ட 200 விதமான சைவ, அசைவ உணவுகளை அன்றாடம் மதிய, இரவு வேளைகளில் அவ்விழா காட்சிப்படுத்தியது.
தவ்வு சம்பால், வாழைப்பழம், குலாம் மலாக்கா சாஸுடன் பாண்டான் இடியப்பம், மரவள்ளிக்கிழங்கு அல்வா, நாசி லெமாக் போன்ற தென்கிழக்காசியப் பாணியிலான உணவுகளும் அதில் இடம்பெற்றன. வாடிக்கையாளர்கள் 2,500 முதல் 3,000 ரூபாய் வரையிலான கட்டணத்தில் 20க்கும் மேற்பட்ட உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
“இவ்விழா மூலம் சிங்கப்பூர்த் தமிழர்களின் தனித்துவமான உணவுகளை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தினேன்,” என்றார் திருவாட்டி தேவகி.
சிங்கப்பூரின் தனித்துவமான உணவு
“கடாரம் கொண்ட சோழன் மலாயா மீது படையெடுத்தபோதே தமிழர்களின் பாரம்பரியமும் உணவும் தென்கிழக்காசியாவிற்குப் பரவியிருந்தாலும் நாளடைவில் சீன, மலாய் தாக்கத்தினால் அவை தமிழ்நாட்டு உணவுகளிலிருந்து வேறுபட்டன,” என்றார் அவர்.
சிங்கப்பூரரான தேவகி, சிறுவயதிலிருந்து விதவிதமான தென்கிழக்காசிய உணவுகளைத் தம் வீட்டிலேயே சுவைத்துள்ளார்.
“என் பாட்டி மலேசியாவில் பிறந்தவர். தந்தை தமிழ்நாட்டின் மாயவரத்தில் பிறந்தவர். தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். அதனால் கிச்சாப் மீன் (சோயா சாஸ்சில் மீன்), அசாம் படாஸ் (ஒரு வகை மலாய் மீன் கறி), பீ ஹூன் பிரியாணி போன்ற தென்கிழக்காசிய உணவுகளை என் வீட்டில் சமைப்பார்கள்,” என்றார் தேவகி.
தொடர்புடைய செய்திகள்
அவர் தன் சமையல் நூல்களுக்காக மேற்கொண்ட ஆய்வு மூலம் தமிழ்நாட்டு உணவுகளிலும் அனுபவம் பெற்றார்.
நெடுநாள் கனவு
உஸ்பகிஸ்தான், மொன்டினகிரோ, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா எனப் பல நாடுகளிலும் தென்கிழக்காசிய சமையலைக் காட்சிப்படுத்தியிருக்கும் திருவாட்டி தேவகி, தமிழ்நாட்டில் தமிழரின் உணவுகளை மையப்படுத்தும் உணவு விழாவை ஏற்பாடுசெய்தது அதுவே முதன்முறை.
தமிழரின் உணவுகளை ஏதேனும் ஓர் உணவகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது தேவகியின் நெடுங்கால ஆசை. சிங்கப்பூரில் ஹோட்டல்களுடனும் விருதுபெற்ற உணவகங்களுடனும் இணைமுயற்சிகள், உணவுச் சாவடிகள் அமைக்க அவருக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் அந்த ஆசை எட்டாக்கனியாக இருந்தது.
சென்ற ஆண்டு சென்னைக்கு சமையல் ஆய்வுக்காகச் சென்றிருந்திருந்தபோது ‘சங்கமித்திரை’ உணவகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.
சங்க கால உணவு, பாரம்பரிய உணவு, சாலை உணவு எனப் பலவகையான தமிழர் உணவுகளை வழங்கும் ‘சங்கமித்திரை’ உணவகம், தமிழ்ப் பண்பாட்டை முன்னிலைப்படுத்துவது தேவகியைக் கவர்ந்தது.
சங்கமித்திரையின் நிர்வாகச் சமையல் நிபுணரான நாராயணமூர்த்தி வீராசாமி தமிழ் இலக்கியத்திலும் பாரம்பரிய உணவுகளிலும் பெரும் நாட்டம் கொண்டவர். அதனாலேயே விழாவின் ஒவ்வொருநாள் உணவுக்கும் வைகை, பவானி, அமராவதி எனத் தமிழகத்தின் ஆற்றின் பெயர்கள் வைக்கப்பட்டன. விருந்துக்குப் பெயர் கரிகாலன் விருந்து.
சிங்கப்பூரின் சமையலை திருவாட்டி தேவகி படைத்த விதத்தைப் பாராட்டிய திரு நாராயணமூர்த்தி, “நாசி லெமாக் எனும் தேங்காய்ப்பால் சாதத்தை, இறால் சம்பல், அரைத்த கோழி போன்றவற்றைச் சேர்த்து வாழையிலைப் பொட்டலமாக வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது,” என்றார்.
இவ்வாண்டு மற்றொரு சமையல் நூலை வெளியிடவுள்ளார் திருவாட்டி தேவகி. சங்கமித்திரை உணவகம் குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகை நிலங்களின் கருவில் ஓர் உணவு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது.