இவ்வாண்டு ஒரு பிரம்மாண்ட பட்டிமன்றப் போட்டிக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்தது.
மொத்தம் 16 குழுவினர் பட்டிமன்றத் தோரணம் 2025 போட்டியில் கலந்துகொண்டனர். அவர்கள் சிங்கப்பூர், இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார் என பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள்.
முதல் சுற்றில் ஒரே தலைப்பில் ஒரே சமயத்தில் 8 பட்டிமன்றங்கள் நடந்தன. அதில் மதிப்பெண்கள் அடிப்படையில் 8 அணிகள் தேர்வாகி, காலிறுதிச் சுற்றில் ஒரே தலைப்பில் ஒரே நேரத்தில் 4 பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டன. அதில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 4 அணிகளுக்கு இடையே பட்டிமன்றம் மீண்டும் ஒரே நாளில் ஒரு சிறப்பான தலைப்பில் நடைபெற்றன.
மொத்தம் 15 பட்டிமன்றங்களை ஒரு மாதத்தில் 15 நடுவர்கள், 64 பேச்சாளர்களைக் கொண்டு நடத்தியது சவாலாக இருந்தாலும் மகிழ்வான தருணங்கள் அதிகம் என்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகச் செயலாற்றிய திரு உமா சங்கர் நாராயணன் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமி வரவேற்புரை ஆற்றி, உலகளாவிய இந்த பட்டிமன்றத் தோரணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இறுதிப்போட்டி டிசம்பர் 25ஆம் தேதி முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் கத்தார், தமிழகம் அணிகள் கலந்துகொண்டன. சிறப்பான வாதத்தின் அடிப்படையில் தமிழக அணி வெற்றிபெற்றது. அவ்வணிக்கு $600ம் கத்தார் அணிக்கு $400ம் பரிசாக வழங்கப்பட்டன. சிறந்தப் பேச்சாளராகத் தேர்வுசெய்யப்பட்ட தமிழக அணியைச் சேர்ந்த அன்புமணிக்கு $150 பரிசு வழங்கப்பட்டது.

