வார இறுதி காலை. கையில் தமிழ் முரசு பத்திரிகையுடன் லிட்டில் இந்தியாவில் பேருந்தில் ஏறுகிறார், 1996 முதல் சிங்கப்பூரில் பணியாற்றிவரும் மலேசியர் முகமது இப்ராகிம், 52.
சாதாரணமாகவே தமிழ் முரசைக் கண்டு பூரிக்கும் திரு இப்ராகிம், சாதனைமிக்க 90 பக்கங்களைக் கண்டதும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரிடம் வார்த்தைகளே இல்லை.
“அன்றாடம் காலையில் தமிழ் முரசு படிக்காவிடில் எனக்கு மனநிறைவே இருக்காது. வேறு எந்த வேலையையும் செய்யத் தோன்றாது,” என்றார் திரு இப்ராகிம்.
“உலகச் செய்திகளைத் தெரிந்துகொள்ள நான் எப்பொழுதும் விருப்பப்படுவேன். மலேசியாவில் தமிழ் மலர், மலேசிய நண்பன் போன்ற நாளிதழ்கள் உள்ளன. சிங்கப்பூரில் ஒரே தமிழ் செய்தித்தாள்தான் உள்ளது. அதனை அன்றாடம் படிப்பேன்,” என்றார் இவர்.
தற்போது துவாஸ், ஈசூன், ஜூரோங் பகுதிகளில் உள்ள பல வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளுக்கு அருகே தமிழ் முரசு நாளிதழ் எளிதாகக் கிடைப்பதில்லை என்பது இவரது வருத்தம்.
“அதனால் லிட்டில் இந்தியாவுக்கு வரும்போது தமிழ் முரசை வாங்கிச் செல்வேன். 7-11 கடையிலும் வாங்கலாம்,” என்று இவர் சொன்னார்.
லிட்டில் இந்தியாவில்கூட நாளிதழ் விற்கும் மளிகைக் கடைகள் குறைந்துவிட்டதாகவும் இவர் கூறினார்.
“முன்புபோல் தற்போது தேக்காவில் செய்தித்தாள் விற்பவர்கள் இல்லை. முன்பு பஃப்லோ சாலையில் ஊரிலிருந்து வரும் செய்தித்தாள்கூட வாங்கிப் படிப்பேன். இப்போது வாரத்துக்கு ஒருமுறை எம்ஆர்டி நிலையம் அருகேயுள்ள கடையில்தான் மலேசிய செய்தித்தாள் கிடைக்கிறது; வாங்கிப் படிக்கிறேன்,” எனத் திரு இப்ராகிம் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், பலரும் கைப்பேசியிலேயே செய்தித்தாள் படிப்பதால் செய்தித்தாள் வாங்குவது குறைந்துள்ளதைத் தாம் கவனித்துவருவதாக இவர் குறிப்பிட்டார்.
“நான் இந்தியாவின் தினமலர், தினத்தந்தி அனைத்தையும் செயலியில் பார்த்துவிடுகிறேன். மலேசியச் செய்திகளை யூடியூப்பில் பார்க்கிறேன்,” என்றார் இவர்.
எனினும், செய்தித்தாள் தொடர்ந்து நிலைத்திருக்கும் எனத் திரு இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்தார்.
தாம் எந்த நாட்டில் இருந்தாலும் செய்தித்தாள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளதாகச் சொன்னார்.
“ஊரில் இருக்கும்போது சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழைப் படிக்கவும் ஏங்குவேன்,” என்றார் திரு இப்ராகிம்.
“தமிழ் முரசில் இன்னும் அதிகப் பக்கங்கள் வரவேண்டும் என்பது என் ஆசை. கூடுதல் விளம்பரங்கள் வரவேண்டும். குறிப்பாக, கூடுதலான திரைப்பட விளம்பரங்கள், செய்திகள் இருந்தால் நன்றாக இருக்கும். உடல்நலம், வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிய கூடுதல் செய்திகளை எதிர்பார்க்கிறேன்,” என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் வாராவாரம் போட்டி, ரத்த நன்கொடை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, மீண்டும் தமிழ் முரசு செய்தித்தாளை அதிக அளவில் அவர்களிடம் கொண்டு சேர்த்தல் நன்றாக இருக்கும் என்பது இவரது ஆலோசனை.
தமிழ்ப் பற்றாளரான திரு இப்ராகிம், தம் பிள்ளையை மலேசியாவில் தமிழ்ப் பயில வைத்துள்ளார்.
“தமிழை நாம்தான் வளர்க்கவேண்டும்; அதற்காக நாம்தான் பாடுபடவேண்டும். முடிந்தவரை தமிழில் பேசவேண்டும், தமிழ்ப் பெயரை வைக்கவேண்டும், தமிழைக் கட்டிக்காக்கவேண்டும்,” என்று திரு இப்ராகிம் வலியுறுத்தினார்.