மாணவ ஆசிரியர்கள் தம் அறிவாற்றலை மேம்படுத்தி, ஆழப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மாணவக் கல்வியாளர்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்டது சான் ஃபிரான்சிஸ்கோ கல்விப் பயணம்.
கற்றல் பயணமாக மட்டுமல்லாமல் மனத்திற்கும் அறிவிற்கும் புத்துணர்ச்சியும் புது நம்பிக்கையும் அளித்த மிகச் சிறந்த பயணமாக அமைந்த அது, பங்கேற்பாளர்களின் கடல் கடந்து செல்லும் கனவை நனவாக்கியது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக்கழக ஆசிய மொழிகள், பண்பாடுகள் துறையின்கீழ் இயங்கும் தமிழ்மொழி, பண்பாட்டுப்பிரிவு மார்ச் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை அந்தக் கல்விப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் பங்கேற்ற மாணவர்கள் பலர் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் செய்யும் முதல் தலைமுறையினராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயண நோக்கங்கள்
புலம் பெயர்ந்த தமிழரிடையே தாய்மொழியின் பயன்பாடு குறித்துக் கற்றல், உயர்கல்வி நிலையங்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இடம்பெறும் ஆய்வுகளும் முனைப்புகளும் குறித்துக் கற்றறிதல், அமெரிக்காவில் புலம் பெயர்ந்த இந்தியச் சமூகத்தினருடன் பண்பாட்டுப் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல இலக்குகளை இந்தக் கல்விப்பயணம் முக்கிய நோக்கங்களாக முன்வைத்திருந்தது.
‘‘மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்றக் கருவி மட்டுமன்று. அது ஓர் இனத்தின் அடையாளம். மனங்களை இணைக்கும் பாலம்!’’ என்பதை இப்பயணம் உணர்த்தியது என்று கல்வியாளர்கள் கருத்துரைத்தனர்.
பயணத்தின் ஓர் அம்சமாகப் பாரம்பரியம் காக்கும் சாஸ்தா ஃபுட்ஸ் உணவு நிறுவனத்தைப் பார்வையிட்ட குழுவினர், வணிகத்துடன் தமிழர் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் வகையில் அமெரிக்காவில் பாரம்பரிய அரிசி வகைகளையும் அவற்றை அரைத்து மாவாக இன்றைய சூழலுக்கு ஏற்ப அந்நிறுவனம் மக்களுக்கு வழங்கி வருவதையும் கண்டறிந்தனர்.
மேலும், சான் ஃபிரான்சிஸ்கோவின் லிட்டில் இந்தியாவில் தமிழர் கடைகள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும் திரைகடல் ஓடித் திரவியம் தேடச் செல்லும் திசையெங்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைத் தமிழர்கள் விதைத்திருந்ததைக் கண்டு அகம் குளிர்ந்ததாகவும் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
முத்தாய்ப்பாகச் சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகத்திலிருந்து வந்திருந்த குழுவினருக்காக ஸான் ஹோஸே பல்கலைக்கழகத்தில் மொழி மற்றும் மொழியியல் துறையில் பிறமொழி பேசுபவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறையானது (TESOL), தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு மாற்றமடைந்துவருகிறது என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் இடம்பெற்றது.
குறிப்பாக, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாத் தமிழ் மன்ற மக்களைச் சந்திக்கவும் அவர்கள் பின்பற்றும் தமிழ்ப் பண்பாடுகளைக் கேட்டறியவும் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது.
இந்தக் கற்றல் பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து சிங்கப்பூர்க் கல்வியியல் சூழலுக்கு ஏற்றவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப் பயணக்குழு எண்ணியுள்ளது.


