சென்னையில் திங்கட்கிழமை (ஜனவரி 12) நடைபெற்ற அயலகத் தமிழர் தின மாநாட்டின் இரண்டாம் நாளன்று தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு வருகையளித்தார்.
ஜனவரி 9ஆம் தேதி தொடங்கிய ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை அறிந்துவரும் வேளையில், அயலகத் தமிழர் தின மாநாட்டில் அயலகத் தமிழர்களின் கனவுகளையும் அவர் கேட்டறிந்தார்.
‘எழுமின் சிங்கப்பூர்’ அமைப்பின் தலைவர் இறை.மதியழகன் இரு முக்கியப் பரிந்துரைகளைத் திரு ஸ்டாலினிடம் முன்வைத்தார்.
ஒன்று, தமிழ்நாட்டின் நான்கு விமான நிலையங்களிலும் அயலகத் தமிழர் நல வாரியம் குறித்த உதவிச் சாவடியை வைப்பது. இரண்டாவது, தொழில்முனைப்புக்கும் புத்தாக்கத்துக்கும் புதிய பட்டப்படிப்புகளையும் கல்லூரிகளையும் உருவாக்குவது.
“இந்த ஆணையத்தைத் தொடங்கி முதல்படியை எடுத்துவைத்து பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம். நிச்சயமாக நீங்கள் சொல்வதைச் செய்வோம் என்று உறுதிகூறுகிறேன். இரண்டாவதாக நீங்கள் சொன்னதையும் என் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் நிச்சயம் செயல்படுத்தப் போகிறோம்,” என்றார் திரு ஸ்டாலின். ‘நான் முதல்வன்’ என்பது மாணவர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுத்தும் ஒரு திட்டம்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்களை இணைக்கும் செயலி, பள்ளி மாணவர்களுக்குப் பாடதிட்டத்தில் அடிப்படைச் சட்டக்கல்வி, தமிழ்நாட்டை மேலும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுதல், பசுமையாக்குதல் போன்ற பரிந்துரைகளையும் மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
“தமிழகம் ஒரு சிங்கப்பூராக மாறவேண்டும். அனைவருக்கும் இல்லம், வேலைவாய்ப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், யாரும் அணுகக்கூடிய தூய்மையான நிர்வாகம் என்பது சிங்கப்பூரின் ஒரு முகம். இன்னொரு முகம் அதன் நேர்த்தி, ஒழுங்கு அழகு, தூய்மை, வெளிநாட்டவர் விரும்பிச் செல்லும் நாடாக அது உள்ளது,” என்றார் அர்மேனியாவில் வசிக்கும் கண்ணன்.
“இது ஒரு கட்சியின் அரசன்று; ஓர் இனத்தின் அரசு. நாடுகள், கடல்கள் நம்மைப் பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கின்றன,” என்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிறுவியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்கள், அயலகத் தமிழர்களுக்காக வழங்கும் விருதுகள், மியன்மார், கம்போடியா, உக்ரேன், இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து தமிழர்களை மீட்டெடுத்தது போன்ற நடவடிக்கைகளைச் சுட்டிப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழுங்கள். அந்தந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள். அதேவேளை தமிழ்நாட்டுக்கும் அடிக்கடி வாருங்கள். அங்கு உள்ளவர்களுக்குத் தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துச் சொல்லுங்கள்,” என்று அவர் வெளிநாடுவாழ் தமிழர்களை ஊக்குவித்தார். தமிழர்கள் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களைக் கட்டாயம் சென்று பார்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மலேசியச் சட்டத் துணை அமைச்சர் எம்.குலசேகரன், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாட்டில் உயர்ந்திருந்தாலும் தமிழர்கள் பலரும் சாதாரண வேலைகளில் சாதாரண சம்பளத்துடன் மலேசியாவில் பணியாற்ற வருவதாக வருத்தப்பட்டார்.
“அவர்களுக்குச் சான்றிதழ்கள், திறன்கள் கொடுத்தால் சம்பளம் இரட்டிப்பாகும். இந்த (தமிழ்நாடு) அரசாங்கம் அதற்கான சலுகையைக் கொடுத்துப் பயிற்சி தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
கவிநயத்துடன் நடந்த அயலகத் தமிழர் தினம்
அயலகத் தமிழர் தின மாநாட்டின் முதல் நாளன்று கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ கவியரங்கத்தில் பங்கேற்றார்.
“கோழி கூவி விழிக்காமல் குயில் கூவும் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன். அங்கு அடிப்படை நிலையிலிருந்து அதிபர்வரை தமிழர் உயரலாம். உலக வரலாற்றில் இரு நாடுகளில் தமிழர் அதிபராய் இருப்பதற்குக் காரணமாக இருந்தது சிங்கப்பூர்,” என்றார் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ. அவருக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.
பாராட்டிய சிங்கப்பூர் பங்கேற்பாளர்கள்
“உலகத் தமிழர்களுக்கு இது நல்ல சந்திப்பாக இருக்கும். தமிழ்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்,” என்றார் முதன்முறையாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சிங்கப்பூரிலிருந்து வந்த திரு சுந்தர் பிலவேந்தர்ராஜ்.
“இங்குள்ள வரவேற்புப் பாடல், ‘உயர்ந்த மனிதர்’ நடனங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. இவற்றைச் சிங்கப்பூருக்கும் கொண்டுசெல்ல வேண்டும். புக்கிட் பாஞ்சாங்கிலும் நாங்கள் பொங்கலைச் சிறப்பாக 18 ஆண்டுகளாகக் கொண்டாடிவந்துள்ளோம். இங்குள்ள நம் கலாசாரப் பகிர்வின் தாக்கமும் அங்கு இருக்கும்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் புதிய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுத் (ஐஎன்சி) தலைவர் பெருமாள் மூர்த்தி PBM.
“முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன் தமிழர்களின் நிலங்களைப் பிரித்ததில் ஐந்திணைகளைப்போல் ஆறாம் திணையாக அயலகத் தமிழர்களைக் குறிப்பிட்டதை ஓர் அங்கீகாரமாகக் கருதுகிறேன்,” என்றார் சிங்கைத் தமிழ்ச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் துரை மருதீஸ்வரன்.
அறிவு, கலாசாரப் பகிர்வுகள்
‘எங்குத் தமிழர்கள் உள்ளார்களோ அங்கே தமிழ் வாழ்கிறது: புலம்பெயர்ந்த தமிழர்களின் வலி, வேதனை, உயர்வு, வணிகம், கலை இலக்கியம்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் மியன்மாரில் தமிழ்க் கல்வி குறித்துப் பேசினார் ‘பர்மா தமிழர் அறநெறிக் கழக’ வெளியுறவு ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் அக்கழகம், மியன்மாரில் 40 பள்ளிகளை நடத்துகிறது. அவற்றில் முதன்மையாகத் தமிழையும் கைத்தொழில்களையும் அது கற்பிக்கிறது.
“எங்கள் மாணவர்கள் பெறும் கல்வி மற்ற நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதால், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைவு அங்கீகாரம் (affiliation) பெற விரும்புகிறோம். எங்கள் ஆசிரியர்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர் பயிற்சியையும் நாடுகிறோம்,” என்றார் சின்னதுரை.
காலனித்துவ, பின்காலனித்துவக் காலங்களில் அயலகத் தமிழ் வளர்ச்சி குறித்தும், 2004ல் தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் வெளிநாட்டினர் ஆற்றிய பங்கு குறித்தும் ஆராய்ச்சி நடத்திவருகிறார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெ கார்த்திக், 28.
“அயலகத் தமிழர் தினம் தொடங்கியதிலிருந்து நான் இந்நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். இங்கு ஏற்படும் புதிய அறிமுகங்கள் என் ஆய்வுக்குக் கைகொடுக்கின்றன,” என்றார் கார்த்திக்.

