‘வகுப்பறையைத் தாண்டி தமிழ்மொழி வாழ்ந்திட பெற்றோர் ஆதரவு அவசியம்’

3 mins read
f15731e5-7ef5-4f47-8682-102875f24e73
‘தமிழோடு இணைவோம் - அழகே! தமிழே!’ - 2024 நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பெற்றோரும் பிள்ளைகளும் மொழி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் இணைந்து பங்கேற்றனர். - படம்: சுந்தர நடராஜ் 

வகுப்பறைகளைக் கடந்து இல்லங்களிலும் பிள்ளைகள் தமிழை இயல்பாகப் பயன்படுத்த, தமிழ் மொழி பயன்பாட்டைத் தக்கவைக்க பெற்றோரின் ஆதரவு அவசியம்.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் முத்திரை திட்டங்களில் ஒன்றான ‘தமிழோடு இணைவோம் - அழகே! தமிழே!’ - 2024 நிகழ்ச்சியில் மேற்கூறிய கருத்து வலியுறுத்தப்பட்டது. 

இந்நிகழ்வு தொடக்கநிலை ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் அவர்களின் பெற்றோருக்காகவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மாணவர்கள் பள்ளியில் தமிழ் கற்பதைக் கடந்து அன்றாடம் தொடர்ந்து தமிழில் பேச வேண்டும் என்பதை ஊக்குவிப்பது இந்நிகழ்வின் நோக்கம் என்று தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் செயலாளர் அருள்மதி இலெனின் தமிழ் முரசிடம் கூறினார்.

2017 முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு, மே 25ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறியது. 

தமிழ்மொழி ஆர்வத்தை வளர்த்தல், தமிழ்மொழி புழக்கத்தைப் பேணுதல், அன்றாட நடவடிக்கைகளில் தமிழைத் தக்கவைத்தல், வீடுகளில் தமிழ்மொழியைச் சரளமாகப் பயன்படுத்த ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களோடு இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நடந்தேறியது.

பெற்றோரும் பிள்ளைகளும் பங்குபெறும் வகையில் ‘நமது பாரம்பரிய பாதை’, ‘வரை! கண்டுபிடி! பேசு!’, ‘நடந்தது என்ன’, ‘கதை சொல்’, ‘ருசியோ ருசி’ உள்ளிட்ட மொழி சார்ந்த நடவடிக்கை கூடங்கள் நிகழ்வின்போது அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட பெற்றோர் பிள்ளைகள் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்ற பெற்றோரில் ஒருவரான திரு பிரபாகரன் நாகராஜன், 37, தம் மகனுடன் இணைந்து மொழி சார்ந்த அங்கங்களில் பங்கேற்றது புது அனுபவம் என்று சொன்னார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்ட அவர், “பிள்ளைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரும்போது தமிழ் மேல் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. தாய்மொழியில் அவர்கள் தொடர்ந்து பேச அவர்களை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது,” என்றார்.

“நாம் ஒவ்வொரு நாளும் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் பல தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் சொல்லிவிடுகிறோம். அந்த இயல்பு மாறி, யதார்த்தமாக தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இத்தகைய நிகழ்வுகள் பெற்றோருக்கு நினைவூட்டுகின்றன”, என்று அவர் சொன்னார். 

ஃபெங்ஷான் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பில் பயிலும் பிரபாகரன் வருண் சாய், தம் தந்தையுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொன்னார். தந்தையுடன் இணைந்து முதல்முறையாக உணவு சமைத்தது, அதிலும் தமிழில் பேசியபடி ஆரோக்கியமான உணவைத் தயாரித்தது இனிமையாக இருந்தது என்று வருண் சாய் பகிர்ந்தார். 

தொடக்கநிலை நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நிலையில், இந்நிகழ்வுக்கு வந்த பெற்றோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பெற்றோர் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கான வரவேற்பு அதிகம் உள்ளதை இது காட்டுவதாக அவர்கள் கூறினர்.

நிகழ்வு குறித்து பேசிய தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவரான முனைவர் தி.சந்துரு, “தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் தமிழ்மொழியை, ஏடுகளைத் தாண்டி இல்லங்களிலும் தக்கவைக்க வேண்டும் எனும் ஆர்வத்தைப் பெற்றோர், பிள்ளைகள் இடையே ஊக்குவிக்கும் முயற்சியாகத் திகழும் இத்தகைய நிகழ்வுகளை வழங்குவது நிறைவாக உள்ளது,” என்றார்.

“வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு வழியாக தமிழை மேலும் சிறப்பாக எவ்வாறு கற்பிக்கலாம், எவ்வாறு செழுமைப்படுத்தலாம் எனப் புத்தாக்கமிக்க இதர வழிகளையும் கண்டறிந்து வருகிறோம். அது நன்றாக நடந்தேறும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

குறிப்புச் சொற்கள்