இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், மனப் பதற்றம், போட்டி மற்றும் எதிர்மறை உணர்வுகளில் சிக்கிக்கொள்வது எளிது.
ஆனால், மனிதர்களின் கவனத்தை மாற்றக்கூடிய, அவர்கள் உளநலத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்தக்கூடிய, வாழ்நாளைக் கூட்டக்கூடிய ஓர் எளிய பயிற்சி உண்டு. அது நன்றியுணர்வு என்று யாரேனும் சொன்னால் அதை நாகரிக உலகின் மாந்தர் நம்புவார்களா?
நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், அதனால் விளையும் நன்மைகள் ஏராளம் என்கிறது ஆய்வுலகம்.
நன்றியுணர்வு என்பது ஓர் நிலை; அது ஒரு பண்புநலனும்கூட என்று குறிப்பிடுகிறது நேர்மறை உளவியல்.
நன்றியுணர்வு எனும் சொல்லில் இரண்டு படிநிலைகள் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒன்று, வாழ்வில் உள்ள நன்மைகளை அங்கீகரிப்பது. இந்த நன்றியுணர்வுமிக்க நிலையில், மக்கள் வாழ்விற்கு ஆம் எனும் பதிலை அளித்து, வாழ்க்கையை நற்பேற்றாகக் கருதி வாழ முற்படுகின்றனர்.
மற்றொன்று, நற்சீர் என்பது தனக்குள் இல்லை, புறத்திலேயே உள்ளது என்பதை உணரும்போது நிகழ்கிறது.
எடுத்துக்காட்டாக, இறைவனுக்கோ இதர மக்களுக்கோ நன்றிக்கடன்பட்டவர்களாகச் சிலர் கருதுவர்.
தொடர்புடைய செய்திகள்
வேறுசிலர் இந்த உலகிற்கே நன்றிக்கடன்பட்டிருப்பதாகக் கூறுவதும் உண்டு. 90களின் பிந்தையக் காலகட்டங்களில் நேர்மறை உளவியல் என்பது ஒரு துறையாக அறிமுகம் கண்டது நினைவுகூரத்தக்கது.
தொடக்கக் காலகட்டத்தில் இதனைப் பண்புநலனாகப் பாவித்து அந்தச் சிந்தனையில் கவனம் செலுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன.
பிறகு இந்த உணர்வை ஒரு திறனாகக் கருதி, நன்றியறிதல் உள்ள மனத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் ஆய்வுகள் கூறின.
நன்றியறிதல் என்பது ஓர் உணர்வு எனும் எண்ணம் பரவலாக மேலோங்கி இருக்கும் நிலையில், அவற்றின் இதரப் படிமலர்ச்சிகள் என்னவென்பதை ஆய்வுலகம் பின்வருமாறு சுட்டுகிறது.
நன்றியுணர்வில் அறிவியல்
நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த உடல், மனநலத்துடனும், வலுவான உறவுகளால் சூழப்பட்டு நலமாக நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. நன்றியறிதலுடன் வாழ்நாளைச் செலவிடுவோருக்கு கிட்டும் பலன்களாக ஆய்வுகள் குறிப்பிடுவன:
*நன்றியறிதல் என்பது மனப்பாங்கு. நன்றியுணர்வுடன் ஒருவரைப் பாராட்டுவதும் பரிசளிப்பதும் அந்நாள் முழுதும் ஒருவரின் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
*இந்த உணர்வு இணைப்பிரிவு நரம்பு மண்டலத்தைத் துடிப்புடன் செயல்படுத்தி மன அழுத்தத்தையும் மனப்பதற்றத்தையும் குறைத்து, ஒருவரின் உறக்கத்தையும் அதன் தரத்தையும் மேம்படுத்துகிறது.
*நன்றியறிதலை நாளும் கடைப்பிடிப்போருக்கு நாளடைவில் அது அவர்களின் ஆளுமையின் ஓர் அங்கமாக மாறி, சிறுசெயல்களையும் கனிவுடன் அணுகும் திறன் பெற்றவர்களாகவும், சவால்களையும் சிறப்பாகச் சமாளிக்கும் உறுதிமிக்க மனம்படைத்தவராகவும் நிலைநிறுத்துகிறது.
*நாள்தோறும் நன்றிப்பெருக்கோடு வாழ்பவர்களுக்கு அந்த உணர்வு, அவர்களிடம் மகிழ்ச்சியைப் பெருக்கி, அதன்வழி மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைக்கச் செய்து ஆக்கவழி எண்ணங்களால் அவர்களை நிரப்புகிறது.
*நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதுடன், உறவையும் நட்பையும் இந்தப் பண்பு மேம்படுத்துகிறது என்பதும் ஆய்வு சொல்லும் தகவல்.
*நன்றியுணர்வோடு இருப்பது துயரிலிருந்து மீண்டெழ உதவி, மீள்திறனையும் அதிகரிக்கிறது.
*உடலியக்கத்தில் காணப்படும் கார்ட்டிசால் சுரப்புநீரின் அளவைக் குறைத்து, மன அழுத்தத்தின் தாக்கத்தை நலிவுற செய்து அமைதியான மனநிலையையும் ஊக்குவிக்கிறது.
*ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயநலனை மேம்படுத்தி, நாட்பட்ட வலியையும்கூட நன்றியுணர்வால் குறைக்க முடியும் என்பதும் ஆய்வுகள் கண்டறிந்த கூற்று.
இதற்கிடையில், நன்றியுணர்வு எனும் நற்பண்பை வளர்த்துக்கொள்வது எபப்டி, அதற்கு உயிரூட்டுவது எப்படி என்பது குறித்தும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அன்றாடம் நன்றியுணர்வுடன் பழகுவது எப்படி? எளிய குறிப்புகள்
ஒவ்வொரு நாளும் நீங்கள் நன்றியுணர்வுடன் திகழ உதவும் முக்கிய அம்சங்களைப் பட்டியலிடுங்கள்.
ஓவியம், வாழ்த்து அட்டை, கைவினைப்பொருள் என எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் நன்றிகூற விழையும் ஒருவர்க்கு அதனைப் பரிசாக அளிப்பதன் வாயிலாக உங்கள் நன்றியுணர்வுக்கு கலைவடிவம் கொடுத்திடலாம்.
கடிதம் மூலமும் நன்றி பாராட்டலாம். இத்தகைய செயல்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை, மனநிறைவை ஒருவருக்குள் விதைத்திடும்.
இன்றைய நாளில் உங்களைப் புன்னகைக்க வைத்த ஒருவிஷயம்? உங்களைச் சிறப்பாக உணரவைத்த ஒரு மனிதர்? உங்களது தியாகத்தை, புரிந்த நற்செயலை உணர்ந்து மறவாமல் உங்களைத் தேடிவந்து நன்றி சொல்லிவிட்டு சென்ற மனிதர்? எனக் காரணங்கள் எதுவாக இருப்பினும் அவற்றை அசைபோட்டுப் பார்க்க, தவறாமல் அதற்குச் சில நிமிடங்களை ஒதுக்குங்கள்.
நன்றியறிதலின் நாதம்
உளப்பிணியியல் தொடர்பில் 49,275 பெண்களிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளியானது.
அதில் ‘நன்றியுணர்வு வினாத்தாள்’ என்று குறிப்பிடப்பட்ட அந்த ஆவணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இறப்பை நோக்கிச் செல்லும் அபாயம், மற்றவர்களைவிட 9 விழுக்காடு குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் அறிந்தனர்.
மரணத்தை விளைவிக்கும் காரணிகளாகக் குறிக்கப்பட்ட ஒவ்வொன்றிற்கு எதிராகவும் ‘நன்றியறிதல்’ எனும் குறிப்பிட்ட உணர்வு கணிசமான ஆற்றலைக் கொண்டு விளங்குவதையும் அவர்கள் அறிந்தனர்.
குறிப்பாக, நன்றியுணர்வைக் கடைப்பிடித்து, எதற்காக நன்றி செலுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், வாழ்வை மேலும் நலம்பெறச் செய்யலாம் என்பதும் தெரியவந்தது.
இதன்முலம் ஆயுளைக்கூட அதிகரிக்கலாம். எனவே, ‘நன்றியுணர்வை’ வாழ்வியல் முறையாகவே கருதி அதனைப் பின்பற்றும்போது, நாள்தவறாமல் நன்றியுணர்வுடன் வாழ முயன்று பார்க்கையில், தனிமனித நலன் மட்டுமல்லாமல், நலமிக்க சமூகத்தை, வளமான வேலையிடத்தை, கனிவுமிக்க சமுதாயத்தை உண்டாக்கும் என்ற முடிவும் ஆய்வில் வெளியானது.
நன்றியுள்ள இதயத்தைப் பாதுகாத்து அதனை உற்சாகத்துடன் பராமரிப்பது நன்றியறிதலின் சிறந்த நாதமாக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், இன்றைய உலகில் நன்றியறிதல் உள்ளவர்களாய் நலமுடன் நீடூழி வாழ ஒவ்வொருவருக்கும் அழைப்புவிடுக்கிறது உளவியல் உலகம்.
‘‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்’’