பெண்கள் அணியும் காலணிகளில் பலவகை உண்டு. அதில், ‘ஹை ஹீல்ஸ்’ என்று அழைக்கப்படும் குதிகால் உயர காலணிகளைப் பலர் விரும்பி அணிந்துகொள்கின்றனர்.
தற்காலச்சூழலில் 72% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிவார்கள் என்று உலக ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆனால், ஹை ஹீல்ஸ் காலணிகளை அணியும்போது உடலின் முழு அழுத்தமும் முன்னங்கால் பகுதியிலிருக்கும் என்பதால் கடுமையான வலி ஏற்பட நேரிடலாம். மேலும், அதிக உயரம் கொண்ட காலணிகளை நீண்ட நேரத்திற்கு அணிவதால் முதுகுவலி, இடுப்புவலி, முழங்கால்களில் அழுத்தம், கணுக்கால் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
அவ்வலியை ஓரளவிற்குக் குறைத்து, பெண்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிய சில வழிமுறைகளை இங்குக் காணலாம்.
கால் பாதங்களின் தோல் பகுதி கடினமாக இருந்தால் ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியும்போது கால்களில் எரிச்சல் ஏற்படலாம். இந்நிலையைத் தவிர்க்க, பாதங்களை அதிக ஈரப்பசையுடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிவதற்கு முன்பு பாதங்களில் ஈரப்பசையூட்டி (Moisturizer) அல்லது உடற்பூச்சைத் (Body lotion) தடவலாம்.
அதேபோன்று ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்த பிறகு பாதங்களில் ஐஸ் கட்டிகளைக்கொண்டு குளிர் ஒற்றடம் கொடுப்பது நல்லது.
ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியும்போது கால் வலி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் அதன் அளவும் முக்கியம்.
சிலருக்கு கால் பாதங்கள் நீளமாகவோ குட்டையாகவோ அகலமாகவோ அமைந்திருக்கலாம். சிலருக்கு கால் விரல்கள் நீளமாக இருக்கலாம். அதனை மனத்திற்கொண்டு அதற்கேற்ற அளவிலும் வடிவமைப்பிலும் இருக்கும் ஹை ஹீல்ஸ் காலணிகளை வாங்குவது அவசியம்.
தொடர்புடைய செய்திகள்
பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வசதிக்குறைவாக இருக்கும் காலணிகளை அணிவதைத் தவிர்க்கலாம்.
பெரும்பாலான ஹை ஹீல்ஸ் காலணிகளின் நுனிப்பகுதி மெலிதாக அமைந்திருக்கும் என்பதால் குதிகால்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படக்கூடும். இதனால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த உயர்தரமான ஹை ஹீல்ஸ் காலணிகளை வாங்க விரும்புவோர் சற்று அதிகம் செலவிட வேண்டியிருக்கலாம்.

