காலம் செல்ல செல்ல, வாழ்க்கைப் பாதைகள் பிரியலாம்; ஆனால் மறவா நினைவுகள் மனங்களை இணைக்கும்போது பிரிவு என்பது வெறும் மாயையே.
இதைப் பறைசாற்றியது உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சுவா சூ காங் சாஃப்ராவில் சனிக்கிழமை அக்டோபர் 5ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்திய ‘நட்பின் கலை’ விழா 2024. கிட்டத்தட்ட 200 முன்னாள் மாணவர்கள் 40 வெள்ளி நுழைவுச்சீட்டுகளை வாங்கி விழாவிற்கு வந்தனர்.
செயற்கை நுண்ணறிவோடு படைக்கப்பட்ட இசை, நடனம், நாடகங்கள்மூலம் அவர்கள் தங்கள் இளம்பருவத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
ஸ்ரீ நாராயண மிஷனிலிருந்து ஆறு முதியோர் விழாவில் அன்பைப் பகிர்ந்துகொண்டது விழாவிற்கு மெருகூட்டியது.
1946ல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியாக சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பினால் தொடங்கப்பட்ட பள்ளி, புதிய மூன்று மாடிக் கட்டடம் கட்டப்பட்டதும் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியாக 1960ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளி என்ற பெருமையையும் அது பெற்றது.
பள்ளி 1982ல் மூடினாலும், ஒன்றாகப் படித்த மலரும் நினைவுகளை நேற்று பூத்ததுபோல் முன்னாள் மாணவர்கள் இன்றும் தங்கள் நினைவலைகளில் நிறுத்திவைத்துள்ளனர்.
“அப்போதெல்லாம் நிறைய பேச்சுப் போட்டிகள், நடனங்களில் பங்குபெறுவோம். எங்கள் தலைமையாசிரியர் மிகவும் கண்டிப்பானவர்,” என்றனர் அப்பள்ளியில் படித்த தோழிகள் மலர்விழி, முனைவர் மீனாட்சி சபாபதி. “மாத இதழ் வெளியிடுதல், சாரணியர், முதலுதவி, காவற்படை போன்ற சீருடைக் குழுக்களில் இருந்தோம். படிப்பிலும் விட்டுக்கொடுக்கவில்லை,” என்றார் முனைவர் மா.கோவிந்தராசு.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் மாணவர் சங்கம் 1977ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
“ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர் சங்கம் இதுபோன்ற விழாவிற்கு ஏற்பாடு செய்துவருகிறது.
“முன்னாள் மாணவர்கள் சுயமாக முயற்சி செய்தால், சிலரைத்தான் மீண்டும் சந்திக்கமுடியும். இவ்விழாவினால், பலரையும் ஒன்றிணைக்கிறோம்,” என்றார் சங்கத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ். உதவி தேவைப்படும் முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து சங்கம் உதவுவதாகவும் அவர் கூறினார்.
விழாவின்மூலம் விட்டுப் போன தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டன.
“நான் பல்லாண்டுகளுக்குப் பின்பு சில நண்பர்களைக் கண்டு மகிழ்ந்தேன். எங்கள் ஆசிரியர்கள் இன்று இல்லையே என்பதுதான் ஒரே ஏக்கம்,” என்றார் வனிதா சிங்காரவேலு.
“அக்காலத்தில் ஆசிரியரை இறைவனாகக் கருதினோம். ஆசிரியர்கள் கற்பித்தது வாழ்நாள் முழுதும் என்னை இட்டுச் சென்றுள்ளது,” என்றார் செயற்கை நுண்ணறிவோடு நிகழ்ச்சியைக் குழுவினருடன் தயாரித்த சங்கச் செயலாளர் சி குணசேகரன்.
“அப்பள்ளி வட்டாரமே ஒரு வித்தியாசமான சூழல். அதனால் பள்ளி மூடுவது எங்களுக்கு வருத்தத்தை அளித்தது,” என்றனர் ஷேக் உஸ்மான், மலர்க்கொடி.
“எங்கள் ஆசிரியர் மு.தங்கராசனை முன்னுதாரணமாக எடுத்து தமிழாசிரியராகினோம். அவர் கதையை மிகச் சுவாரசியமாகச் சொல்லிக் கொடுப்பார். அதனால் எழுத்தாற்றலை மேம்படுத்தினோம்,” என்றனர் தமிழாசிரியர்கள் தனலெட்சுமி, சுகுணாபாய், தனபாக்கியம்.

