வாலிபக் கவிஞர் வாலி விழா 2025

1 mins read
7231b2ab-6dfd-47c8-a57f-0565bc08b1a7
(இடமிருந்து) ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத் துணைத் தலைவர் சு. ரவி, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், விருதாளர்கள் திரு சு.மி. ஜெயராஜ், திரு முத்தழகு மெய்யப்பன், திருவாட்டி மஹ்ஜபீன், திருவாட்டி விமலா ரெட்டி, ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்கு அடுத்து, பல தலைமுறைகளைத் தாண்டி அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், ஓவியர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட கவிஞர் வாலியின் படைப்புகளைக் கொண்டாடும் வகையில் ‘வாலிபக் கவிஞர் வாலி விழா’ நடத்தப்பட்டது.

ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகமும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்ச்சி ஜோகூர் பாரு, ஸ்கூடாய், தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் ஜனவரி 26ஆம் தேதி முற்பகலில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து 28 பேர் கொண்ட குழு அங்குச் சென்றிருந்தது.

விழாவின் முத்தாய்ப்பாக தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கியம், கலைத்துறைகளில் பங்களித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அவ்வகையில் திரு முத்தழகு மெய்யப்பன் ‘தமிழ்ச் சுடர்’ விருதும், திருவாட்டி மஹ்ஜபீன் ‘இலக்கியத் தாரகை’ விருதும், திருவாட்டி விமலா ரெட்டி ‘நாவல் நாயகி’ விருதும், திரு சு.மி. ஜெயராஜ் ‘கலைச்சுடர்’ விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன், முனைவர் ப. இராமநாதன், திருவாட்டி இசக்கி செல்வி, கவிஞர் தங்க வேலமுருகன், திருவாட்டி மஹ்ஜபீன், திருவாட்டி பிரேமா மகாலிங்கம் ஆகியோர் கவிஞர் வாலியின் கவிதைநயம் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்