உடல்நல முன்னேற்றத்திற்கான பின்னோக்கிய நடைப்பயிற்சி

3 mins read
180ef562-be94-43db-952d-a60977953e5f
‘ரெட்ரோ வாக்கிங்’ எனப்படும் இந்தப் பின்னோக்கி நடக்கும் பயிற்சி, உடல், மூளை இரண்டிற்கும் உண்மையான நன்மைகளைத் தரும் என்று நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பின்னோக்கி நடப்பது பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தோன்றக்கூடும் என்றாலும் இது புதிய வகையான பயிற்சியன்று. சொல்லப்போனால், இது உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயிற்சியாகும்.

வரலாற்றுப் பின்னணி

1900ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் பின்னோக்கி நடக்கும் சவால்களைச் சிலர் மேற்கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இது அக்காலத்தில் ஒரு துணிச்சலான செயலாகவும் பார்க்கப்பட்டது.

இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, 1915ல் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் வரை பின்னோக்கியே நடந்து சென்ற 50 வயதுச் சுருட்டுக்கடை உரிமையாளர் பேட்ரிக் ஹார்மன். கிட்டத்தட்ட 6,300 கிலோமீட்டர் தூரமுள்ள இந்தப் பயணம், தமது கணுக்கால்களைப் இரும்பைப்போல உறுதியாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நவீன அறிவியல் சொல்வது என்ன?

இத்தகைய செயல்கள் வேடிக்கையாகத் தோன்றினாலும், ‘ரெட்ரோ வாக்கிங்’ (retro-walking) எனப்படும் இந்தப் பின்னோக்கி நடக்கும் பயிற்சி, உடல், மூளை இரண்டிற்கும் உண்மையான நன்மைகளைத் தரும் என்று நவீன ஆய்வுகள் காட்டுகின்றன.

பின்னோக்கி நடப்பது, வழக்கமான நடைப்பயிற்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் உடலைப் பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பின்னோக்கி நடக்கையில் குதிகாலை ஊன்றுவதற்குப் பதிலாக, கால் விரல்களே (முன் பாதம்) முதலில் தரையைத் தொடுகின்றன. மேலும் ஒவ்வோர் அடியிலும் முழங்கால் வளைவது குறைகிறது. இது முழங்கால் மூட்டு மீதான அழுத்தத்தைக் குறைத்து, கணுக்கால் மற்றும் கீழ்க்கால் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கிறது.

காலப்போக்கில், இது கணுக்கால்களை வலுப்படுத்தவும், உடல் சமநிலையை மேம்படுத்தவும், முதுகெலும்பின் உறுதித்தன்மைக்கு உதவும் தசைகளை வளர்க்கவும் உதவுகிறது.

இந்த உடல் இயக்கவியல் வேறுபாடுகள் காரணமாக, மறுவாழ்வுச் சிகிச்சைகளில் பின்னோக்கி நடப்பது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது, கீழ்முதுகு ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பின்தொடைத் தசைநாரின் (hamstring) நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் முழங்கால் வலி, மூட்டுவாதம் அல்லது பக்கவாதத்திற்குப் பிந்தைய நடமாட்டப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அறிகுறிகளைக் குறைக்கவும் இது உதவும்.

விளையாட்டு வீரர்களும் நீண்ட காலமாகவே தங்கள் பயிற்சிகளில் பின்னோக்கி நடப்பதையும் ஓடுவதையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். குறிப்பாகத் திசைகளை விரைவாக மாற்ற வேண்டிய விளையாட்டுக்களில் இது அதிகம் பயன்படுகிறது. இது மூட்டுகளின் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்காமலேயே உடல் சமநிலை, ஒருங்கிணைப்பு, தசை வலிமை ஆகியவற்றை மேம்படுத்துவதால், உடற்பயிற்சியிலும் மறுவாழ்வு சிகிச்சைகளிலும் இது பயனுள்ளதாக அமைகிறது.

முன்னோக்கி நடப்பதை விட, பின்னோக்கி நடக்கும்போது அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. குறைந்த தாக்கத்தில் (Low impact) அதிக பலன் தரும் பயிற்சியாக இது கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பின்னோக்கி நடக்கும்போது மூளையின் மாறுபட்ட நரம்பியல் பாதைகள் தூண்டப்படுவதாக மூளை ஸ்கேன், நடத்தை சார்ந்த சோதனைகள் காட்டுகின்றன. குறிப்பாக, கவனம் செலுத்துவதில், முடிவெடுப்பதில், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்காற்றும் ‘ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ்’ (prefrontal cortex) பகுதி இதில் அதிகம் செயல்படுகிறது.

எச்சரிக்கையும் பாதுகாப்பும்

இருப்பினும், இதில் ஆபத்துகளே இல்லை என்று சொல்ல முடியாது. இப்பயிற்சியில் ஈடுபடும்போது, பின்னால் இருப்பதைப் பார்க்க முடியாததால், வெளியே அல்லது நெரிசலான இடங்களில் நடக்கும்போது எதன் மீதாவது இடித்துக்கொள்ளவோ கீழே விழவோ வாய்ப்புகள் அதிகம். எனவே, பந்தயத்தடம் அல்லது தடைகள் இல்லாத திறந்தவெளியில் இப்பயிற்சியைச் செய்வதே பாதுகாப்பானது.

பின்னோக்கி நடப்பது வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு முழுமையான மாற்றாக இல்லாவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்வியல் முறையில் சேர்த்துக்கொள்ளத் தகுந்த ஒரு சிறந்த பயிற்சியாகும்.

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது சில நேரங்களில், சில அடிகள் பின்வாங்குவதிலிருந்தும் தொடங்கலாம் என்பதற்கு இந்தப் பயிற்சி ஒரு சிறந்த நினைவூட்டலாகவும் அமைகிறது.

குறிப்புச் சொற்கள்