அதிக வேலைப்பளுவும் மற்ற பணிகளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒருவரை சோர்வடையச் செய்யலாம்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது கட்டுப்பாடுகளைவிட தீவிர உடல், மனச்சோர்வுதான் அதிக சிங்கப்பூரர்களின் மனநலத்தைப் பாதித்தது என்று 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்தது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு போன்ற சவால்கள், குறிப்பாக வேலை செய்யும் பெரியவர்களுக்கு சோர்வடையும் அபாயத்தை அதிகரிக்கும்.
தீவிர சோர்வை அனுபவிப்பவர்கள் வேலைக்குச் செல்வதற்கோ அல்லது தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ அஞ்சலாம். அதுமட்டுமின்றி தங்களைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் சூழ்நிலையும் நேரிடலாம்.
தீவிர மன, உடல் சோர்வை எப்படித் தவிர்க்கலாம்?
மேலாளரிடம் தெரிவியுங்கள்
மேலாளரிடம் பணிச்சுமை பற்றிப் பேசலாம். வேலையிடம் சார்ந்த இலக்குகளை அமைத்து அவரிடம் தேவைக்கேற்ப உதவி கேட்பது பணிச்சுமையை குறைக்க உதவும்.
வேலைப் பகிர்வு
முடிந்தவரை பொறுப்புகளைச் சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்வது, அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்துவது உளைச்சலைக் குறைக்கும். அதிக நேரம் தேவைப்படும் பணிகள் என்னவென்பதை அடையாளம் கண்டு அவற்றை நிர்வகிக்கத் திட்டமிடலாம்.
நேரவரம்பு
வேலை நேரங்களை வரையறுப்பது நன்று. எடுத்துக்காட்டாக, வேலை நேரத்திற்குப் பிறகு மின்னஞ்சல்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். வேலையை முடித்த பிறகு ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது முக்கியம்.
தொடர்புடைய செய்திகள்
தூக்கத்திற்கு முன்னுரிமை
ஒரு நாளில் கிட்டத்தட்ட 7 அல்லது 8 மணி நேரம் உறங்குவது அவசியம்.
உடற்பயிற்சி
தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் முக்கியம். உடலை அசைப்பதால் மன அழுத்தம் குறைந்து மனம் தெளிவடைகிறது.
சத்தான உணவு
முழுத்தானிய உணவுகள், காய்கறிகள், பழங்களை உணவில் எப்போதும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் ஏற்படும். எதுவானாலும் அளவோடு உண்பதும் அவசியம்.
பொழுதுபோக்கு
மகிழ்ச்சி அளிக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடப் பரிந்துரைக்கப்படுகிறது. ஓவியம் வரைவது, பாட்டு பாடுவது போன்ற மனதிற்கு பிடித்த நடவடிக்கைகள் சோர்வைக் குறைக்கும்.
ஆதரவு நாடுங்கள்
எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி நண்பர்கள், குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசலாம். அல்லது உடல்நலம், மனநலம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சிகிச்சையாளர் உதவியையும் நாடலாம்.

