மாச்சா (matcha) இன்று உலகம் முழுவதும் பலரால் விரும்பி அருந்தப்படும் பானமாக இருந்தாலும், அதன் வேர்கள் ஆழமான வரலாற்றிலும் பல நூற்றாண்டுகள் பழமையான கலாசாரத்திலும் புதைந்துள்ளன.
நீண்டகாலத்திற்கு முன்பே ஜப்பானியக் கலாசார சடங்குகளின் மையப்பகுதியாக அது இருந்துள்ளது.
இந்தப் பச்சைத் தேநீர் தூளின் தோற்றம், சீனாவின் தாங் வம்சத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறது. அங்கு, தேயிலைகள் முதலில் நீராவியில் அவிக்கப்பட்டு, எளிதில் விநியோகம் செய்ய செங்கற்கள் போன்று வடிவமைக்கப்பட்டன.
12ஆம் நூற்றாண்டில், ஜப்பானிய ஜென் துறவி எய்சாய், இந்த முறையை ஜப்பானியர்களுக்கு அறிமுகம் செய்தார். அங்கு, அது கல்லில் அரைக்கப்பட்ட மென்மையான மாச்சா தூளாகப் பரிணமித்தது. ஜப்பானியத் தேநீர் சடங்கான ‘சானோயு’வின் மையமாக அது மாறியது.
பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கம், மரியாதை, விழிப்புணர்வு போன்ற பண்புநலன்களின் உருவகமானது மாச்சா.
நீரில் ஊறவைக்கும் தேநீரைப்போல அல்லாமல், மாச்சாவில் முழு இலையையும் நாம் உட்கொள்கிறோம். இது அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants), அமினோ அமிலங்கள், கேட்டசின்களை (catechins) உடலுக்கு வழங்குகிறது.
இயற்கையாக ஏற்படும் எல்-தியனைன் (L-theanine) அமினோ அமிலம், ஆய்வின்படி, கவனத்தை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது கேஃபின் மூலம் ஏற்படும் உடனடி புத்துணர்வை சமநிலைப்படுத்தி, பதற்றம் இல்லாத, சீரான ஆற்றல் உணர்வை அளிக்கிறது.
மாச்சாவைத் தொடர்ந்து உட்கொள்வது, மேம்பட்ட இதய ஆரோக்கியம், சிறந்த வளர்சிதை மாற்றம், மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும், இந்த நன்மைகள் அதை அருந்துபவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையையும் பொறுத்துள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இன்று, மாச்சா பாரம்பரிய தேநீர் விடுதிகளின் எல்லைகளைக் கடந்து, ஓர் உலகளாவிய போக்காக மாறியுள்ளது. இதன் பல்வகைப் பயன்பாடே இது உலகளவில் பிரபலமடைய முக்கியக் காரணம்.
கஃபேக்கள், பேக்கரிகள், ஆரோக்கிய வர்த்தகங்கள் அதன் தனித்துவமான ‘உமாமி’ சுவையைப் பயன்படுத்தி பலவித உணவுப் பொருள்களையும் பானங்களையும் உருவாக்குகின்றன.
மாச்சாவின் பயன்பாடு அதன் தரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. சடங்குபூர்வ-தர மாச்சா அதன் தெளிவான நிறம், மென்மையான இனிப்பு, மிருதுவான அமைப்புக்காக பலரால் விரும்பி அருந்தப்படுகிறது. இது, வெந்நீருடன் வெறுமனே நுரைக்கப்பட்டு அருந்துவதற்குச் சிறந்தது.
சற்று உறுதியான உயர் வகை அல்லது பரிஸ்டா-தர மாச்சா, லாட்டேகளிலும் மற்ற அன்றாட பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
சமையல்-தர மாச்சா ஆழமான சுவையைக் கொண்டது என்பதுடன் மிகவும் மலிவான வகையும் ஆகும். இது பொதுவாக பேஸ்ட்ரிகள், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
அன்றாடம் மேலும் பிரபலமாகிவரும் மாச்சா, புத்தாக்கச் சிந்தனையுடன் பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. மாச்சா மட்டும் வழங்கும் சிறப்பு கஃபேக்கள், பாப்-அப் மாச்சா பார்கள் மற்றும் வீட்டு கஃபேக்கள் இப்போது சுவை சேர்க்கப்பட்ட மாச்சாவை வழங்குகின்றன.
ஹோஜிச்சா-மாச்சா கலவைகள் முதல் ஸ்ட்ராபெர்ரி, யுஸு, வெனிலா, கேரமல் சுவைகள் வரை, மாச்சா இன்றைய பயனீட்டாளர்களை ஈர்க்கும் விதத்தில் புதிய வகையில் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும், அதன் இயல்பான தாவர நறுமணமும் ஆழமான சுவையும் பாதுகாக்கப்படும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
மாச்சா அதன் பாரம்பரிய அம்சத்தைத் தக்கவைத்துக்கொண்டு, நவீன ஆரோக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.

