சீரிளமைச் செம்மொழிக்குச் சேர்ப்போம் சிறப்பு

2 mins read
c6c9ee29-3060-43cf-bf9d-be2db7830f29
போட்டிகளில் வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசுக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. - படம்: அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு (சிங்கப்பூர்)
multi-img1 of 2

அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு (சிங்கப்பூர்) தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, ‘சீரிளமைச் செம்மொழிக்குச் சேர்ப்போம் சிறப்பு’ எனும் தலைப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு போட்டியை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) காலை 10 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

தற்காலத்தில் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் சில ஆங்கிலச் சொற்களுக்கு மிகப் பொருத்தமான, பிறமொழிக் கலப்பில்லாத, விரைவில் மக்களைச் சென்றடைந்து, மக்களால் புழக்கத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எளிய, தூய தமிழ்ச்சொற்களை மாணவமணிகள் கண்டறிந்து விளக்கும் போட்டியாக அது அமைந்தது.

கடந்த மார்ச் 29ஆம் தேதி அதற்கான முதல் சுற்றுப் போட்டி நடத்தப்பட்டது. அவர்களில் இருந்து 69 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்றனர்.

போட்டி நாளில் மேடை ஏறிய மாணவர்கள் கொடுக்கப்பட்டிருந்த பல ஆங்கிலச் சொற்களிலிருந்து தாங்கள் எந்தவொரு ஆங்கிலச்சொல்லைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தோம், ஏன் அதனைத் தேர்வு செய்தோம், அதற்குப் பொருத்தமாக தாங்கள் கருதிய தமிழ்ச் சொற்கள் எவை, அவற்றிலிருந்து இறுதியாகத் தாம் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட சொல் எது, அத்தேர்வுக்கு அடிப்படை யாது போன்ற விவரங்களை தகுந்த முறையில், குறிப்பாக சங்க இலக்கியச் சான்றுகளுடனும் விளக்கினர்.

தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த. இராஜசேகர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசுக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மிகச் சிறப்பாகச் செயல்பட்ட குழுக்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

உயர்நிலை 1, 2 பிரிவினருக்கான போட்டியில் சீடார் உயர்நிலைப் பள்ளி முதல் பரிசையும், ராஃபிள்ஸ் கல்வி நிலையம் இரண்டாம் பரிசையும், ரிவர்சைடு உயர்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றன.

உயர்நிலை 3, 4, 5 பிரிவினருக்கான போட்டியில் தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி முதல் பரிசையும், காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி இரண்டாம் பரிசையும், என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசையும் பெற்றன.

குறிப்புச் சொற்கள்