பட்டு, பருத்திச் சேலைகள் பெரும்பாலானவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; விரும்பியும் அணிந்திருக்கிறோம்.
சேலைகளின் தயாரிப்பில் புளிச்சக் கீரை, கற்றாழை, வெட்டிவேர் போன்ற தாவரங்கள் சேர்க்கப்படுவதைக் கேள்விப்படும்போது நாம் வியந்து போகலாம்.
ஆனால், இத்தகைய தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அரிய வகை சேலைகளை முதன்முதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுசீலா நாராயணசாமி, 61, மலேசியாவிற்கு அறிமுகப்படுத்தினார் .
பெருந்தொற்று தொடங்கும் முன் ‘செட்டிநாடு காட்டன் ஸ்டூடியோஸ்’ எனும் இணைய சேலை வர்த்தகத்தைத் தொடங்கிய சுசீலா, முழுக்க முழுக்க சாத்வீக சைவ வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார். தமது வாழ்க்கைமுறை தான் மேற்கொள்ளும் வணிகத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் திடமாக நம்பினார்.
“ரசாயனம், விலங்குசார் பொருள்கள் கொண்ட சேலைகளை விற்பதைத் தவிர்க்க விரும்பினேன். என் வணிகத்தில் தொடர்ந்து நானும் என் சக வணிகப் பங்காளிகளும் ஆராய்ச்சி செய்து வந்தோம்,” என்றார் சுசீலா.
மலேசிய வெப்பத்துக்குப் பதமான, சருமத்துக்கு இதமான, பாரம்பரிய முறையில் நெய்யப்பட்டு, பல வண்ணங்களில் மிளிரும் செட்டிநாடு பருத்திச் சேலைகள் சுசீலாவின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. தம் வர்த்தகத்தில் செட்டிநாடு பருத்திச் சேலைகளை மட்டும் விற்கத் தொடங்கினார்.
இருப்பினும், சேலை அணியும் வழக்கத்தில் நீடித்த நிலைத்தன்மையை அறிமுகப்படுத்த, தொடர்ந்து ஈராண்டுகளாக ஜவுளித் துறையில் தென்படும் உயர் மாசுபாடுகள், சுற்றுப்புறத்தில் அதன் தாக்கங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார் சுசீலா.
சேலை அணிவதன் மாறுபட்ட நோக்கம்
நார்வே தற்போது நீடித்த நிலைத்தன்மையில் சிறந்த நாடாக விளங்குகிறது. சுவீடன், பின்லாந்து, டென்மார்க் போன்ற மற்ற நார்டிக் நாடுகளிலும் நீடித்த நிலைத்தன்மை பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சேலை அணிவதில் எப்படி நீடித்த நிலைத்தன்மையைச் சாத்தியமாக்கலாம் என்ற எண்ணம் சுசீலாவை மேலும் தூண்டியது.
சென்னை மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அனகாபுத்தூர் எனும் நகராட்சி, சேலை நெசவுக்கு பிரபலம். 2023ஆம் ஆண்டு அனகாபுத்தூரிலிருந்து நெய்யப்பட்ட வெட்டிவேர் சேலை ஒன்று தாய்லாந்தில் நடைபெற்ற ‘அனைத்துலக வெட்டிவேர் சிம்போசியம் மற்றும் கண்காட்சி’யில் (International Vetiver Symposium and Exhibition) தாய்லாந்து இளவரசிக்குப் பரிசளிக்கப்பட்டது.
வெட்டிவேர் போன்ற தாவரங்களிலிருந்து சேலைகளை உருவாக்கலாம் என்று உணர்ந்த சுசீலாவுக்கு ஒரு யோசனை பிறந்தது. ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகக் கடந்தாண்டு அவர் ஆர்வத்துடன் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
வெட்டிவேர் மட்டுமின்றி இந்திய சமையலிலும் மருத்துவத்திலும் பெரும்பாலும் பயன்படும் புளிச்சக் கீரை, வாழை, மூங்கில், கற்றாழை போன்ற தாவரங்களையும் பருத்தியுடன் சேர்த்து சேலையாக நெய்யலாம் என்று கற்றுக்கொண்டார் சுசீலா.
“முக்கியமாக, சேலைகள் செய்யும் முறை முற்றிலும் ரசாயனமற்றது; இயற்கையானது. அது என்னை மிகவும் கவர்ந்தது,” என்றார் சுசீலா.
தீங்கற்ற ‘வீகன்’ சேலைகள்
சேலைகளின் வண்ணங்களும் ரசாயன கலவையின்றி மலர்கள், தாவரங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டன. பெருந்தொற்றுக்குப் பிறகு, வாழை நாரால் உருவாக்கப்பட்ட சேலைகளை ‘வீசுத்ரா’ (vsutra) எனும் இன்னொரு நிறுவனத்தின்கீழ் ‘வீகன்’ சேலைகள் என்ற அடையாளத்துடன் விற்றார் சுசீலா.
“பல மலேசியப் பெண்களிடையே இந்த ‘வீகன்’ சேலைகள் பிரபலமடைந்தன. ஆச்சரியம் ஒருபுறம் இருக்க, சேலை அணிவதிலும் நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கலாம் என்பதை அவர்கள் உணர்ந்து, விரும்பி வாங்கினார்கள்,” என்று நினைவுகூர்ந்தார் சுசீலா.
தற்போது சுமார் ஓராண்டுகாலமாக வீகன் சேலைகளை விற்று வருகிறார் சுசீலா. சிங்கப்பூரில் ஒரு நாள் இந்த ‘வீகன்’ சேலைகளை அறிமுகப்படுத்த ஆசை என்றும் கூறினார்.
“அது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அன்னாசி நாரைப் பயன்படுத்திச் சேலைகள் செய்யலாமா என்று நான் இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறேன்,” என்று புன்னகைத்தார் சுசீலா.
நீடித்த நிலைத்தன்மையை தழுவும் இளையர்கள்
நீடித்த நிலைத்தன்மையுள்ள நாடாக சிங்கப்பூர் 65வது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க சிங்கப்பூர் பல திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும், ஆடை அணிவதில் நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்க பல உள்ளூர் ‘ஃபேஷன்’ நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.
மூவரில் ஒரு சிங்கப்பூரர், நீடித்த நிலைத்தன்மையைப் பேணிக்காக்கும் முறையில் தயாரிக்கப்படும் ஆடைகள் அல்லது பொருள்களை வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ‘யூகவ்’ ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
“நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இன்று குறிப்பாக பல இளையர்கள் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதுண்டு. இதனால் சிங்கப்பூரில் ‘வீகன்’ சேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் பத்தாண்டுகளாக ‘பொட்டுக்கார மாமி’ சேலை வணிகத்தை நிர்வகித்து வரும் ஸ்ருதி குமார்.
சேலையின் விலையும் வடிவமைப்பும்
இருப்பினும், நீடித்த நிலைத்தன்மையைப் பறைசாற்றும் ஆடைகளின் செய்முறைக்கு அதிக நேரம், வளங்கள் தேவைப்படுவதால் அவை சற்று விலை அதிகமாக உள்ளன என்றார் ‘ஜுவல்போக்ஸ்’ இணைய சேலை வணிகத்தின் உரிமையாளர், யசோதா ரகுநாதன்.
“பல வாடிக்கையாளர்கள் விலை தொடர்பாக அக்கறை கொள்வதுண்டு. அதுபோக, ‘வீகன்’ சேலைகள் புதுமையாக இருப்பதால் அவர்கள் நிச்சயமாக அதை வாங்குவார்கள். அதன் வடிவமைப்பும், வண்ணங்களும் மிக முக்கியம்,” என்றார் யசோதா.
சரிவர சந்தைப்படுத்துதல்
விலை, வடிவமைப்பு தவிர அதை முறையாக விளம்பரப்படுத்துதல் மிக அவசியம் என்றார் ‘அக்ஷா வீவ்ஸ்’ சேலைக் கடை உரிமையாளர் ஜெஸ்ஸிக்கா செல்வராஜ்.
“புளிச்சக் கீரை, வாழை போன்ற தாவரங்களுக்குப் பெரும்பாலும் ஒரு காலாவதி தேதி உண்டு. அதை நீடிக்க வைத்து சேலை செய்வது ஒரு கலை என்று நான் கருதுகிறேன். இந்த தகவலை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிப்பது நன்று. அவர்கள் என்ன வாங்குகிறார்கள், எப்படி சேலையைப் பாதுகாப்பது போன்றவற்றைச் சரிவர எடுத்துக் கூறுவது அவர்களுக்கு உங்கள் வணிகத்தின் மீது நம்பிக்கை பிறக்கச் செய்யும்,” என்றார் ஜெஸ்ஸிக்கா.

