தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
 

சிறுகதை: லீ லிங்

9 mins read
சுருக்கம்: வெளிநாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகப் பணிபுரியும் குமரன், சீன மூதாட்டியான லீ லிங்கைச் சந்திக்கிறான். தம் பிள்ளைகள் வசதியாக இருந்தும், அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தனியாக வசிப்பதாக லீ லிங் கூறுகிறார்.  ஓய்வு நேரத்தைக் கழிக்கவும், மனநிறைவுக்காகவும் டிஷ்யூ பேப்பர்களை விற்கும் இந்த வேலையை விரும்பிச் செய்வதாகக் கூறுகிறார். லீ லிங்கின் இந்தக் கதை, குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், தனிமையில் வாழ்ந்தாலும் உழைப்பால் பெறும் மனநிறைவையும் எடுத்துரைக்கிறது.
1682054b-c980-4fe8-b690-7e9a07b9a8b5
டிஷ்யூ பேப்பர்களை விற்கும் மூதாட்டி லீ லிங்குடன் உரையாடும் குமரன். - படம்: செயற்கை நுண்ணறிவு

-பொன் சுந்தரராசு

பிரைம்’ பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேறி  நடக்க ஆரம்பித்தான் குமரன்.  பிரைமை அடுத்திருந்த உணவங்காடியை அடைந்து ஓரமாக ஒதுங்கி அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த பரபரப்பையும் பார்த்து ரசித்துக் கொண்டு நின்றான். வலப்பக்கம் பலதரப்பட்ட உணவு வகைகளை உடனே தயாரித்துத் தரும்  கடைகள் இருந்தன.

இடப்பக்கம் முழுவதும் வட்டவடிவ வெள்ளை நிற மேசைகளும் ஆரஞ்சுநிற ‘பிளாஸ்டிக்’ நாற்காலிகளும்  ஒழுங்கான முறையில் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஏராளமான மக்கள் அமர்ந்து  பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் உணவு உட்கொண்டிருந்தனர். 

‘மாலை மணி ஆறாகிறது. சீனர்கள் இரவு உணவு உண்ணும் நேரம்தான்’ என்று தனக்குள் பேசிக்கொண்டே குமரன் நடைபோட்டான். எதிரிலிருந்த அடுக்குமாடி புளோக்கும் நடைபாதையும்  முட்டிக் கொள்ளும் சந்திப்பில் ஒரு சக்கரநாற்காலி கண்ணில் பட்டது. அதில் சீன முதிய மாது ஒருவர் கையில் ஒரு ‘டிஸ்யு ‘தாள் பொட்டலத்தை ஏந்தியபடி அமர்ந்திருந்தார். அப்பொட்டலத்திற்குள் சிறிது சிறிதான குட்டி ‘டிஸ்யு’ பொட்டலங்கள்.

அவருக்கு அறுபது வயதிருக்கும்.  பின்னுக்கு இழுத்துக் கட்டப்பட்டிருந்தாலும் மை தடவாமல் விடப்பட்டிருந்த  வெள்ளிநிற மயிரிழைகள் சில காற்றில் அசைந்து முகத்தில் படிந்தன. குமரன் அவர் அருகில் சென்று ஒரு பொட்டலத்தின் விலை  கேட்டான்.

‘‘இரண்டு வெள்ளி,’’ கரகரப்பான குரல். அவர் முன்னால் போய் நின்றபோதுதான் அவரைத் தெளிவாகப் பார்க்க முடிந்த்து. மடிப்புகளும் குழியுமில்லாத கலையான முகம். வயோதிகத்தை  நெருங்கினாலும் தோலின் நிறம் மாறாமலும் வாழ்க்கையின் அனுபவத்தைக் காட்டும் கோடுகளோ  மடிப்புகளோ இல்லாத முகம்; அழகிய முகம்.

‘‘முன்பெல்லாம் ஒரு வெள்ளிதானே!’’

‘‘இப்போது எல்லாப் பொருள்களின் விலையும் இரட்டிப்பாகிவிட்டதே! உலகத்தில் சண்டையும் சச்சரவுமாக இருப்பதால் பொருளியல் நிலைத்தன்மையைக் கட்டிக் காப்பது சிரமமாகிவிட்டது. அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா வரியை  அதி உச்சமாக உயர்த்திவிட்டது. அதனால் ஏற்படும் விளைவுகள் சிறிய பொருள்களிலிருந்து பெரிய பொருள்கள் வாங்கும்போது தெரியுமே!’’

தொடர்புடைய செய்திகள்

கடகடவென ஆங்கிலத்தில் பொறிந்து தள்ளினார் அந்த மாது. குமரன்   அதிர்ந்து போனான். பெரிய இரும்பு வளையம் ஒன்று ஒலி அதிர்வுகளுடன் அதிவிரைவாகச் சுற்றி ஓய்ந்தது போலிருந்தது.

‘‘நீங்கள் இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிறீர்களே!’’

‘‘உலகத்திலேயே சீக்கிரம் கற்றுக்கொள்ளக்கூடிய மொழிகளுள் ஆங்கிலமும் ஒன்று. நான் ஆங்கிலக் கல்வி கற்றவள்.’’

ஒரு நடுத்தரச் சீன மாது ஒரு பொட்டலம்  வாங்கிச் சென்றார். அந்த அம்மையார் இரண்டு வெள்ளியை வாங்கி சக்கர சக்கரவண்டியின் வலப்பக்கக் கைப்பிடியோடு இறுகக் கட்டியிருந்த ஒரு டப்பியில் போட்டு மூடினார். பிறகு அவர்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது.

‘‘நிரம்பக் கற்றவர்போல் தெரிகிறீர்கள். ஏன் இந்த வியாபாரம் செய்கிறீர்கள்?’’ என்று குமரன் கேட்டேன்.”

‘‘படித்தவர்கள் டிஸ்யு தாள் பொட்டலங்கள் விற்கக்கூடாதா என்ன?’’

குமரன் பதில் சொல்லவில்லை.

‘‘எனக்குப் பிடித்திருக்கிறது செய்கிறேன்,’’ அவரே பதில் சொன்னார்.

‘‘நான் இங்கே நின்று பேசிக் கொண்டிருப்பதால். உங்கள் வியாரத்திற்குத் தடங்கல் ஒன்றும் இல்லையே.’’

‘‘நிச்சயமாக இல்லை.என் என் பெயர்  லீ லிங். பணி நிறைவு. உங்கள் பெயர்.’’

‘‘குமரன். வெளிநாட்டு நிறுவனத்தில்  தொழில்நுட்பப்  ’பிரிவுக்குத் தலைவர்.’’

இன்னொரு மலாய்க்கார மாது ஒரு பொட்டலம் வாங்கிச் சென்றார்.

‘‘உங்கள் குடியிருப்பு?”

‘‘இங்கதான்.  புளோக் ஐந்து. பத்தாவது மாடி. நீங்கள் என்ன பத்திரிகை நிருபரா?”

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

‘‘சளைக்காமல் கேள்விகளை  அடுக்கிக்கொண்டே போகிறீர்களே! அதனால் அப்படித் தோன்றியது. ம்...ஒன்றுமில்லை சொல்லுங்கள்.’’

‘‘பத்திரிகை என்றதும் ஒரு தகவலை  உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். சிங்கப்பூரில்  தமிழ் முரசு என்ற நாளேடு தொண்ணூறு ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அந்த முயற்சியையும் தொடர்ச்சியையும் கொண்டாட பெரிய  விழா எடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?’’ 

‘‘அப்படியா கிரேட்!  அண்மையில் ஒரு சமூகக் கூடலில் கலந்து கொண்டேன். அப்போது பேசிக்கொண்டார்கள். அதுவும் அரசல் புரசலாகத்தான் காதில் விழுந்தது. இருந்தாலும்  ஏற்கெனவே தமிழ் முரசு நாளிதழைப் பற்றி என் தந்தை சொல்லி நான் அறிந்நு வைத்திருந்தேன். ‘‘மகிழ்ச்சி!’’ நான் வருகிறேன். விரைவில் சந்திப்போம்.’’ விடைகூறிப்  புறப்பட்டான்.

‘‘ ஓய்விருக்கும்போது தவறாமல் வாருங்கள். இன்னும் நிறைய பேசலாம்.’’

‘‘அதற்கென்ன வருகிறேன்,’’ என்று கூறியபடி எட்டி நடைபோட்டான் குமரன்.

நடந்து கொண்டிருக்கும்போது அவனிடத்தில் பலப்பல ஐயங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. லீ லிங் செலவினங்களை எப்படிச் சமாளிக்கிறார்? வாடகைக்கு எடுத்த வீடு என்றால் வாடகை கட்ட வேண்டும்! பொதுப்பயனீட்டுக் கழகக் கட்டணம் செலுத்த வேண்டும்! அன்றாடச் செலவினங்களைச் சமாளிக்க வேண்டும்? மூன்று வேளை உணவு உண்ண வேண்டுமே! இப்படி எண்ணற்ற கேள்விகள் எழும்பிக் கொண்டே இருந்தன.  அரசாங்கம் சிடிசி பற்றுச்  சீட்டுகளைத் தாராளமாக வழங்கி வருவதால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் பேரளவில்!.. கேள்விகள் பிறந்தன, பதில்தான் இல்லை. அடுத்த இரண்டு நாள்களும் இரவு எட்டு மணிவரை வேலைப்பளு அவன் கால்களைக் கட்டிப் போட்டுவிட்டது. மூன்றாம்  நாள் கட்டு அவிழ்ந்தது. வீட்டுக்கு வரும்வழியில் அவன் அல்ஜூனிட் பூங்காவைக் கடக்க  வேண்டும். அவ்வாறு கடந்து வரும்போது  கண்ட காட்சி அவன் நடையைத் தடுத்து நிறுத்தியது.

நீண்டு வளர்ந்த ஒரு செடியில் ஒரு குருவி  கூடுகட்டிக் குஞ்சுகளுடன் காணப்பட்டது. குஞ்சுகளுக்குத் தன் அலகால் தானியங்களை ஊட்டவும் செய்தது. குருவிக்குஞ்சுகள் பட்டுச் சிறகடித்து சிறிய அலகால் தாய் உடலில் கிளறின. தாய்க் குருவி குஞ்சுகளின் தலையில் தன் அலகால் அன்பாக வருடியது. சற்று நேரத்தில் குஞ்சுகள் கூட்டிலிருந்து வெளியே பறந்து சென்றன. தாய்க்குருவி மட்டும் கூட்டில் அமர்ந்திருந்தது. சிங்கப்பூரில் அரிதாகக் காணப்படும் காட்சி!

நில விநாடிகள் கழித்துக் குமரன் லீ லிங்கைப் பார்க்கப்  போனான். சக்கரநாற்காலிக்கு அருகில் ஒரு சாதாரண நாற்காலி கிடந்தது. 

‘‘இதில் உட்கார். என் வீட்டிலிருந்து என் பணிப்பெண் கொண்டு வந்து போட்டாள். நான்தான் போடச் சொன்னேன்.’’

‘‘பணிப்பெண்ணா?’’

‘‘ஆமா. இரண்டு நாட்களாக எசமான் இல்லாத ஏக்கம் இந்த நாற்காலிக்கு?’’

‘’நீங்கள் அதிசயமான பெண்மணியாகத் தெரிகிறீர்கள்!  தனியாளாக இருந்து கொண்டு செலவுகளை எப்படி ஈடுகட்டுகிறீர்கள் என்று வியந்து கொண்டிருக்கிறேன். இதில் பணிப்பெண்  வேறு. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’ 

‘‘நான் தனியாள் இல்லையே! எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்!’’

‘‘பிள்ளைகளா...?’’

‘‘ஆமா. என் மூத்தமகன் ஒரு டாக்டர். அவன்தான் இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தான். என் இளைய மகன் இந்தத் தானாக இயங்கும் மின்சார சக்கரநாற்காலியை வாங்கித் தந்தான். என் மகள் பணிப்பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்தாள். சமையலுக்கான பொருள்களையும் அவளே வாங்கிக் கொடுக்கிறாள்.’’

‘‘என்னங்க இது? பிள்ளைகள் இப்படி நல்லநிலையில் இருக்கும்போது நீங்கள் ஏன் தனியாக இப்படி?”

‘‘நான் விரும்பி வரவில்லை. வேறு வழி இல்லாமல் வந்தேன். 

ஒருவர் ஒரு டிஸ்ஸு வாங்கிச்சென்றார்.

மூத்தமகன் வீட்டில் தங்கி இருந்தேன். என் மகன் அருமையான பையன். என்மீது அலாதிப் பிரியமும் பாசமும் உள்ளவன். ஆனால், அவனுக்கு வாய்த்த மனைவியும் ஒரு டாக்டர்தான்! கிழக்குக் கடற்கரைப் பூங்காவில் அழகான கூட்டுரிமை வீடு. மருமகளுக்கு நான் அவர்களுடன் இருப்பதில் சந்தோசமில்லை!  எப்போதும் முகத்தைத் தொங்கப் போட்டுக்  கொண்டு இருப்பாள். தனிப்பட்ட சுதந்திரம்  பறிபோனதாக நினைக்க ஆரம்பித்தாள். அவள் ஒற்றைப் பிள்ளைக் குடும்பத்திலிருந்து வந்தவள். மூன்றாவது நபர் குடும்பத்தில் இருந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. என் மகனுக்கும் மருமகளுக்கும் இடையில்  என்னால் உரசல் ஏற்படுதை நான் விம்பவில்லை. அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தேன். என் மகனிடம் என் முடிவைச் சொன்னபோது அவன் அதிர்ந்து போனான்.

‘‘என்னம்மா இது, ஏன் இந்த முடிவிற்கு வந்தீர்கள்? போகப் போகச் சரியாகிவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா?’’

‘‘வருத்தப்படாதேப்பா. கொஞ்ச  நாள் உன் தம்பி வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னேன். அது அவனுக்குச் சரியான முடிவாகத் தோன்றியிருக்க வேண்டும். அவன் மறுப்பு கூறவில்லை. என் இளைய மகன் வீட்டில் தங்கினேன். அவன் வீட்டில் பணிப்பெண் இல்லை. நான் சமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை. அவர்கள்   இணையத்தில் ஆர்டர் கொடுப்பார்கள். நான் வீட்டில்  இருந்தபடி சாப்பிட வேண்டும். அது நல்ல ஏற்பாடாக இருந்தது. ஆனால், காலப்போக்கில்  மகனாலோ மருமகளாலோ நேரத்தோடு உணவு ‘ஆர்டர்’  கொடுப்பது இயலாமற்போயிற்று. அவர்களையும்  குறை சொல்ல முடியாது. அவர்கள் வேலை அர்ப்பணிப்பு முறை அப்படி அமைந்துவிட்டது. நானே ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தேன். அதுவும் சலித்தது.

என் மகள் வீட்டில் கொஞ்ச நாள் தங்கி இருந்தேன். அவள் அநியாயத்திற்கு சுகாதார அக்கறை உடையவளாக இருந்தாள். என் வீட்டில் இருந்தவரை நான் கவனித்ததில்லை.

மேசை, நாற்காலியைக்கூட ஈர டிஷூவால் சுத்தம் செய்வாள். அடுப்பங்கரை அசுத்தமாகிவிடும் என்பதால் அவளும் வீட்டில் சமைப்பதில்லை. வீட்டில் பணிப்பெண் இருக்கிறாள். அதைத் துடை, இதைத்துடை, அங்குப் பார் தூசி, இங்குப் பார் சிலந்தி வலைபோல் இருக்கிறது! எல்லாவற்றையும் துடை, காலையிலும் மாலையிலும் மட்டும் துடைத்தால் போதாது. மத்தியானத்திலும்  ‘மோப்’ போட வேண்டும் என்று அந்தப் பணிப் பெண்ணைப் பாடாய்ப்படுத்தி விடுவாள். வீடு சினிமாவில் இருப்பதுபோல் பளபளப்பாக ஆழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். வீடு எப்போதும் ‘நீட்’டாக இருக்க வேண்டும் என்பாள். அவள் தொண தொணப்பும் கட்டுப்பாடும் தாங்க முடியவில்லை.

‘‘பணிப்பெண் எப்படி அனுசரித்துப் போகிறார்?’’

‘‘வேறு வழி? வாயை மூடிக்கொண்டு வேலை செய்யத்தான் வேண்டும். செய்கிறாள். அவள் குறையை யாரிடம் சொல்வாள்? என்னிடம் சில  நேரங்களில் சொல்லி அழுவாள். நான் என் மகள் வீட்டில் இருந்த நேரம் கொவிட் -19 முதல் சுற்று மக்களை வாட்டிய  நேரம். வீட்டில் எப்போதும் களேபரம்தான். என் மகள் ஒரு கூட்டுரிமை வீட்டில் குடியிருந்தாள். அதனால் வீட்டுச் சன்னல் கம்பிகளை எல்லாம் ‘ஸ்பிரிட்’ போட்டுத் துடை என்று பணிப்பெண்ணுக்குக் கட்டளை இடுவாள். அம்மா நீங்கள் கைகளில் ‘சானிடைசர்‘ போட்டுத் தேய்த்துக் கொள்கிறீர்களா? கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுகிறீர்களா? என்று கேட்பாள். கணவனிடமும் பிள்ளைகளிடமும் இன்னும் சற்றுக் கண்டிப்பாக நடந்து கொள்வாள். அவள் தொண தொணப்பும் தொந்தரவும் தாங்க முடியவில்லை. ஒரு நாள் என் மூத்த மகனைச் சந்தித்தேன்.

‘‘என் மத்திய சேம நிதியில்  பணம் நிறைய இருக்கிறது. எனக்கு ஒரு மூவறை அடுக்குமாடி வீடு வாங்கிக் கொடு. அதில் நான் தங்கிக் கொள்வேன். நான் உன் அருகில்தான் இருப்பேன். என்னால் வாங்கிக் கொள்ள முடியும். மூத்த பிள்ளை என்பதால் உன்னிடம் சொல்கிறேன்,’’ என்று சொன்னேன். 

‘‘அம்மா, அவசரம் ஒன்றுமில்லை, நிதானமாக யோசிக்கலாம். கொவிட் காலமாக இருக்கிறது...’’ என்று இழுத்தான்.

‘‘இல்லை. நான் தனியாகப்போயே ஆக வேண்டும். ஏற்பாடு செய். நான் சிங்கப்பூரை விட்டாப் போகப்போகிறேன். பக்கத்தில்தான் இருப்பேன்.’’

அவன் எவ்வளவோ மன்றாடியும் நான் மசியவில்லை. என் மத்திய சேமநிதிப் பணத்தில் கை வைக்காமல் மூத்த மகன் இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தான்.

‘‘அப்படியா?’’

ஆமாம். நான் எதிர்பார்க்கவில்லை! குளிக்கும்போது வழுக்கி விழுந்துவிட்டேன். அதனால் ஒரு ‘ஒரு மினி பக்கவாதம்’ ஏற்பட்டுவிட்டது. துணை இல்லாமல் நடக்க முடியவில்லை.  என் இளையமகன் இந்த மின்சார நாற்காலியை வாங்கிக் கொடுத்தான். என் மகள் பணிப்பெண்ணை  ஏற்பாடு செய்தாள். அதோடு ஒவ்வொரு மாதமும் என் செலவுக்கு மூன்று பேரும் என் வங்கிக் கணக்கில் பணம் போட்டுவிடுவார்கள். உண்மையில் நான் ஒரு பணக்கார டிஸ்யூ வியாபாரி!, என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தார்.

‘‘இவ்வளவு உதவி இருக்க நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?’’

‘‘சும்மா வீட்டிற்குள்  உட்கார்ந்திருக்க முடியவில்லை நண்பரே. உட்கார்ந்து எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது? எவ்வளவு நேரம் படிப்பது? என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல். என் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே என் கணவர் தவறிவிட்டார். அவர் ஒரு ‘கார் மெக்கானிக்’. அவர் போனபின் ஓயாமல் ஓடிய கால்களும் உழைத்த கைகளும் ஓய்வெடுக்க மறுக்கின்றன. கால்கள் ஓயும்வரை ஓடட்டும் என்று  விட்டுவிட்டேன். அத்துடன் உழைப்பினால் கொஞ்ச பணம் வந்தாலும் அது மனத்திற்கு எவ்வளவு நிறைவைத் தருகிறது தெரியுமா?

எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ இயலுகிறது. மனவருத்தம் இல்லை. மனச்சலிப்பும் இல்லை. பிள்ளைகள் என்னை வந்து பார்க்கிறார்கள். நானும் அவர்கள் வீட்டுக்கு வாரம் தவறாமல் போகிறேன். உறவில் சிக்கல் இல்லை. பிக்கல் பிடுங்கல் இல்லை. மலையருவிபோல் வாழ்க்கை தடையின்றி ஓடுகிறது. இந்த வயதில்

“வேறு என்ன வேண்டும்  சொல்லுங்கள்,’’ லீ லிங் நிறுத்தினார்.

‘‘உண்மைதான். தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும்போது வீண் செலவுகளும் மனவருத்தங்களும் இல்லாமற் போகின்றன.’’

‘‘அது மட்டுமில்லை. எதிர்பார்ப்புகள்  குறையும்போது கிடைப்பதில் நிறைவு காணும் பண்பும் வளர்ந்து விடுகிறது. நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்ற நினைப்பே வாழ்வில் நிறைவைத் தருகிறது. உங்களோடு என் கதையைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கு ஒரு மன நிறைவு.’’

‘‘நீண்ட நேரம் பேசிவிட்டோம். வருகிறேன்.’’ 

‘‘நிச்சயம் வாருங்கள்!’’

குமரன் புறப்பட்டான். குமரனுக்கு எழுத்துத் துறையில் ஆர்வமிருப்பதால் பிறர் சொல்லும் கதைகளையும் சம்பவங்களையும் காது கொடுத்துக் கேட்பான். 

திடீரென்று அவனுக்குள் அனுமதியில்லாமல் ஒரு கேள்வி ஓடி வந்து அமர்ந்தது. ‘என் அம்மா இப்போது எங்கு இருப்பார்கள்? அண்ணன் வீட்டிலா? அக்காள் வீட்டிலா?  தம்பி வீட்டிலா? அல்லது தங்கை வீட்டிலா? ஃபோன் போட கைப்பேசியை எடுத்தான். அது பேட்டரி  தீர்ந்து போய் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தது.

குறிப்புச் சொற்கள்