பண்டிகைக் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா, “நான் இன்று சந்தைக்குச் சென்று, வாசலில் தொங்கவிடப் புதிய அலங்காரப் பொருள்களை வாங்கப் போகிறேன்,” என்றார்.
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காவியாவுக்கு கலைப் பொருள்களில் அதிக ஆர்வம் உண்டு. அவள் உடனே, “அம்மா, சற்றுப் பொறுங்கள்! நாம் ஏன் பணத்தைச் செலவழித்துக் கடையில் வாங்க வேண்டும்? இந்த முறை நானும் தம்பி கவினும் சேர்ந்து சொந்தமாக வீட்டை அலங்கரிக்கப் பொருள்களைச் செய்கிறோம்,” எனக் கூறினாள்.
தம்பி கவினுக்கு அக்காவின் யோசனை மிகவும் பிடித்துவிட்டது. “ஆமாம் அம்மா, நாங்களே செய்கிறோம்! எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்,” என உற்சாகமாகக் கேட்டான். அம்மா புன்னகையுடன் சம்மதித்தார்.
நெடுநேரம் யோசித்த பிறகு, பாரம்பரியமான ‘தொம்பை’ ஒன்றைச் செய்ய காவியா முடிவு செய்தாள். தொம்பை என்பது பண்டிகைக் காலங்களில் வீடுகளிலும் கோயில்களிலும் தொங்கவிடப்படும் அழகான உருளை வடிவத் துணி அலங்காரமாகும்.
இருவரும் இணைந்து அதற்கான பணியைத் தொடங்கினர். வீட்டில் இருந்த பழைய, ஆனால் வண்ணமயமான துணிமணிகள், சரிகைகள், வண்ண எழுதுகோல்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். காவியா ஒரு பெரிய துணியை உருளை வடிவில் மடித்து நேர்த்தியாகத் தைத்தாள்.
கவின் தனது கற்பனைத் திறனைப் பயன்படுத்தி, அந்தத் துணியின்மீது புதிய, வித்தியாசமான வடிவமைப்புகளை வரையத் தொடங்கினான். அவர்கள் சாதாரணமான பூக்கள், மயில் போன்றவற்றை மட்டும் வரையாமல், அழகான விண்மீன்கள், உருவங்கள், தங்களுக்குப் பிடித்த சின்னங்கள் போன்றவற்றை வரைந்து வண்ணம் தீட்டினர்.
தொம்பையின் அடிப்பகுதியில் வண்ணத் துணிகளைச் சிறிதாக வெட்டி அழகாகத் தொங்கவிட்டனர்.
சில மணி நேர உழைப்பிற்குப் பிறகு, அவர்கள் உருவாக்கிய தொம்பை முழுமையடைந்தது. அது சிவப்பு, மஞ்சள் நீல நிறங்களில் சரிகைகள் மின்ன, கண்கவர் அழகோடு காட்சியளித்தது. அவர்களின் சொந்த வடிவமைப்புகள் அந்தத் தொம்பைக்குத் தனித்துவமான அழகைக் கொடுத்தன.
அவர்கள் அதை அம்மாவிடம் காட்டியபோது, அவர் வியப்பில் ஆழ்ந்துபோனார். “இது கடையில் விற்கும் பொருளைவிட மிகவும் அழகாக இருக்கிறது! உங்கள் இருவரின் கூட்டுமுயற்சியையும் திறமையையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்,” என்று கூறி, தம் பிள்ளைகளை அவர் மகிழ்ச்சியோடு பாராட்டினார்.
வீட்டின் நுழைவாயிலில் அவர்கள் கைவண்ணத்தில் உருவான அழகிய தொம்பை காற்றில் அசைந்தாடியது. அதனைப் பார்க்கும்போதெல்லாம் கவினும் காவியாவும் பெருமிதமும் அளவற்ற மகிழ்ச்சியும் அடைந்தனர்.
