தீபாவளி நெருங்கிவரும் நேரத்தில் 12 வயது தருணும் அவனுடைய 10 வயது தங்கை தனிஷாவும் பாட்டி அமுதாவின் வீட்டிற்குச் சென்றனர்.
சமையலறையில் பாட்டி மிகவும் மும்முரமாக முறுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்.
“பிள்ளைகளே வாருங்கள்! முறுக்குகளை என்னோடு செய்யுங்கள்!,” என்று அவர் கூறினார்.
பாட்டியின் கடின உழைப்பைப் பார்த்து பிள்ளைகள் வியந்தனர்.
உடனே பாட்டி அவர்களை அன்புடன் அருகில் அழைத்து, முறுக்கு செய்யக் கற்றுக் கொடுத்தார்.
முதலில், “அரிசி மாவு, உளுத்தம் மாவு, எள், சீரகம், வெண்ணெய், உப்பு ஆகியவை தான் சுவையான முறுக்கு செய்யத் தேவையான முக்கியப் பொருள்கள்,” என்று பாட்டி விளக்கினார்.
பிறகு, முறுக்கு அச்சில் பிசைந்த மாவை வைத்து, கொதிக்கும் எண்ணெயில் அழகாகப் பிழிந்து காட்டினார். தருணும் தனிஷாவும் ஆசையாக அதனைச் செய்து பார்த்தனர்.
“பாட்டி, நாம் ஏன் தீபாவளிக்கு முறுக்கு சுடுகிறோம்?” என்று தனிஷா ஆர்வமாகக் கேட்டாள்.
அதற்குப் பாட்டி, “தீபாவளி என்பது இருளை நீக்கி ஒளியேற்றும் பண்டிகை. இந்த நன்னாளில் முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்து உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வது நமது மரபு,” என்று கூறினார்.
சுடச்சுட முறுக்குகளைச் சுவைத்துச் சாப்பிட்ட பிள்ளைகள் மிகவும் மகிழ்ந்தனர்.
“முறுக்குகளை உங்கள் பள்ளி நண்பர்களுக்கும் கொடுத்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்,” என்று கூறி பாட்டி அவர்களுக்கு நிறைய முறுக்குகளை அன்புடன் கொடுத்தனுப்பினார்.
