அறிவுக்கு விருந்தளித்த திருக்குறள் போட்டி

அறிவுக்கு விருந்தளித்த திருக்குறள் போட்டி

படம்: குறள்ஃபார்ஆல்

18 Oct 2026 - 12:21 pm

1 mins read

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் ஈஸ்ட் நூலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருக்குறள் வண்ணம் தீட்டும் போட்டி நடந்தேறியது.

அதில் பிள்ளைகள் பலரும் அவர்களது பெற்றோரும் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள். 

மாணவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் திருக்குறள் கதையைச் சொல்லும் அழகான படம் கொடுக்கப்பட்டு, அதில் அவர்கள் வண்ணம் தீட்டி அசத்தினர்.

போட்டி மட்டுமன்றிக் கலகலப்பான நிகழ்ச்சிகளும் நடந்தன. முனைவர் சரோஜினி செல்லக்கிரு‌ஷ்ணனும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமாரும் ஆர்வத்தோடு சிறுவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வண்ணம் தீட்டும் போட்டியில் பிள்ளைகள் மும்முரம்.
வண்ணம் தீட்டும் போட்டியில் பிள்ளைகள் மும்முரம். - படம்: குறள்ஃபர்ஆல்

நாம் அடிக்கடி கேட்கும் திரைப்படப் பாடல்களில் திருக்குறள் இடம்பெற்றுள்ள வரிகளை அவர்கள் பாடிக்காட்டினர். 

திருக்குறளைப் பயன்படுத்திப் பெற்றோர் எப்படி பிள்ளைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத்தரலாம் என்பதை அவர்கள் எளிமையாக விளக்கினர். 

போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லாப் பிள்ளைகளுக்கும் சான்றிதழ், புத்தகங்கள், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

வண்ணம் தீட்டிய பிள்ளைகள்.
வண்ணம் தீட்டிய பிள்ளைகள். - படம்: குறள்ஃபர்ஆல்

வைசாஸ் பள்ளியில் படிக்கும் 11 வயது சஞ்சனா, அவரது 7 வயது தம்பி சஞ்சீவ்,  பூன்லே கார்டன் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவி தேசாஸ்ரீ ஆகியோர் இந்தப் போட்டியில் மகிழ்ச்சியோடு பங்கெடுத்ததாகக் கூறினர்.

“என்னுடன் மற்ற பிள்ளைகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசும் பெற்றேன். புதிய திருக்குறள்களையும் கற்றுக்கொண்டேன்,” என்று தேசாஸ்ரீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்