சிங்கப்பூர் அளவிலான ‘சோனி’ ஆக்கப்பூர்வ அறிவியல் போட்டியில் (Sony Creative Science Awards) சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 43 தொடக்கப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அங்கீகரிக்கப்பட்டனர்.
85 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 6,000 மாணவர்களிலிருந்து அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் அறிவியல் நிலையம், சிங்கப்பூர் ‘சோனி’ நிறுவனங்களின் குழுமம் இணைந்து, கல்வி அமைச்சின் ஆதரவுடன் அப்போட்டியை நடத்தின.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் கல்விக்கான இரண்டாம் அமைச்சருமான டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விடாமுயற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய திரு நியோ, “புதிய யோசனையைச் செயல்படுத்தும்போது, முதல் முறையிலேயே அது வெற்றிகரமாக அமையாமல் போகலாம். தவறுகளைத் திருத்தி மீண்டும் முயற்சி செய்வது மிகச் சிறந்த கற்றல் முறைகளில் ஒன்றாகும்,” எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு வழிகாட்டிய 45 ஆசிரியர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சிறிய ரக சலவை இயந்திரம்
ஈஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர் லியாம் மத்தியாஸ் பத்வா, 9, தமது ஐந்து வயதுத் தங்கையின் பொம்மை வீட்டிற்காகச் சிறிய அளவிலான சலவை, உலர்த்தும் இயந்திரங்களை உருவாக்கினார்.
நீர் உட்செலுத்துதல், துணிகளைச் சுழற்றித் துவைத்தல், நீரை வெளியேற்றுதல், பின்னர் உலர்த்திக்கு மாற்றித் துணிகளை உலர்த்துதல் எனச் சலவை முறைகளை இந்த இயந்திரம் வெளிப்படுத்துகிறது.
தொடக்கக் கட்ட வடிவமைப்பில் குழாய் நகர்ந்து சிக்கல் ஏற்பட்டதால், லியாம் அதனை மாற்றியமைத்து இரட்டை உருளை முறையை உருவாக்கினார்.
“லியாமிடம் தொழில்முனைவு மனப்பான்மையை வளர்ப்பதே எங்களின் நீண்டகால இலக்கு. வழக்கமான வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்காமல், சொந்தமாகப் புதிய பொருள்களை உருவாக்கி விற்க அவனை ஊக்குவிக்க விரும்புகிறோம்,” என்று அவரது தந்தை பாலாம் பத்வா, 47, கூறினார்.
தமது தங்கையின் விருப்பத்திற்கேற்ப, அடுத்ததாகச் சிறிய அளவிலான குளிர்சாதனப் பெட்டியையும் கைபேசியையும் உருவாக்க லியாம் திட்டமிட்டுள்ளார்.
வீட்டிலேயே விளையாடக்கூடிய கார் விளையாட்டு
பொழுதுபோக்குப் பூங்காக்களில் உள்ள மோதல் கார்களை (bumper cars) அடிப்படையாகக் கொண்டு, ‘கிண்டில் கிட்ஸ்’ அனைத்துலகப் பள்ளியின் மாணவர்களான சிந்தலா வெங்கட் ஜெயராம், 11, சஜித் சுதீஷ் குமார், 11, ஆகிய இருவர் ‘பம்பர் கார் விளையாட்டு’ என்ற இருவர் விளையாடும் பொம்மை வாகனங்களை வடிவமைத்தனர்.
மேடையின்மீது மோதிக்கொள்ளும் அக்கட்டுப்பாட்டு வாகன விளையாட்டில் முதலில் 10 புள்ளிகளைப் பெறுபவர் அல்லது எதிராளியின் காரை மேடையிலிருந்து கீழே தள்ளுபவர் வெற்றி பெறுவார்.
ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் பெற்றோரின் ஆதரவுடனும் அந்த மாணவர்கள் இரண்டு முதல் மூன்று மாதங்கள் உழைத்து இக்கருவியை உருவாக்கினர்.
அறிவியல் கோட்பாடுகளுடன் உட்புறக் கிரிக்கெட்
குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் பொங்கோல் அறிவார்ந்த வளாகத்தைச் சேர்ந்த மாணவர் கைரவ் விஜயவர்கியா, 11, நண்பர்கள், குடும்பத்தினருடன் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக விளையாடக்கூடிய ‘பாக்ஸ் கிரிக்கெட்’ என்ற சிறிய அளவிலான விளையாட்டை உருவாக்கினார்.
பந்துவீசும் கருவியை உருவாக்கும்போது பந்து நேராகச் செல்லாமல் தடுமாறியதால், கைரவும் அவரது தந்தையும் அட்டைத் துண்டுகளைப் பொருத்தி இயந்திரத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தினர்.
“தள்ளுதல், இழுத்தல் போன்ற அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி பொம்மையை உருவாக்குவதில் ஆசிரியர்களாகிய நாங்கள் அவருக்கு வழிகாட்டினோம்,” என அவரது அறிவியல் ஆசிரியை கிருத்திகா சிவராமகிருஷ்ணன், 45, தெரிவித்தார்.
இந்தத் தயாரிப்பை மேலும் மேம்படுத்தி எதிர்காலப் போட்டிகளில் பங்கேற்கக் கைரவ் ஆர்வம் காட்டி வருகிறார்.
